ஐக்கிய அரபு நாடான துபாயில் இருந்து எமிரேட்ஸ் நிறுவன விமானம் ஒன்று இன்று காலை கேரள மாநிலம் கொச்சிக்கு வந்து கொண்டிருந்தது.
போயிங் 777 வகையை சேர்ந்த இந்த விமானத்தில் 14 ஊழியர்கள் உள்பட 375 பயணிகள் இருந்தனர்.
விமானம் காலை 8.30 மணியளவில் கோவா மாநிலத்துக்கு மேலே 20 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது.
விமானம் வந்த பாதையில் காற்று வெற்றிடம் உருவாகி இருந்துள்ளது. அதற்குள் விமானம் வந்ததும் விமானத்தால் மேற்கொண்டு பறக்க முடியவில்லை. கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக பாய்ந்தது.
செங்குத்தாக 1500 அடி தூரம் வரை கீழே வந்தது. இதனால் விமானம் விழுந்துவிடும் நிலை ஏற்பட்டது. விபத்தை தவிர்க்க விமானி போராடினார்.
1500 அடிக்கு கீழே காற்று வெற்றிடம் இல்லை. எனவே அந்த இடத்துக்கு வந்ததும் விமானம் சீராக பறக்க தொடங்கியது. இதனால் விமானம் விபத்தில் இருந்து தப்பியது. ஆனாலும் விமானம் தலைகீழாக பாய்ந்தபோது விமானத்தில் பெல்ட் போடாமல் அமர்ந்து இருந்த பயணிகள் பலர் கீழே விழுந்தனர். பயணிகள் அனைவரும் பீதியில் அலறினார்கள்.
விமானத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பைலட் இது பற்றி கொச்சி விமான நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். அவசரமாக தரை இறங்க வேண்டும் என்றும் கூறினார்.
இதனால் கொச்சி விமான நிலையத்தில் அவசர ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 9 மணி அளவில் விமானம் பத்திரமாக தரை இறங்கியது. விமானத்தில் உருண்டு விழுந்த 12 பயணிகள் காயம் அடைந்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒரு பயணிக்கு மட்டும் அதிக காயம் இருந்தது. அவர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
பயணிகள் அனைவரும் பீதியில் பதட்டத்தோடு காணப்பட்டனர். அவர்களுக்கு டாக்டர்கள் மனோதத்துவ ரீதியாக தைரியம் அளித்து அனுப்பி வைத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக