19 ஏப்ரல், 2010

தடைக்கு மத்தியில் ரோம் சென்று திரும்பியது இலங்கை விமானம்



பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று அதிகாலை 3.35 மணிக்கு ரோமை நோக்கிப் புறப்பட்டுச் சென்ற 563 ரக விமானம், அங்கு செல்ல முடியாது, பாதி வழியில், முற்பகல் 11.55 மணியளவில் மீண்டும் விமான நிலையத்துக்கே திரும்பியுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

இலங்கையிலிருந்து ஐரோப்பாவின் சில நாடுகளுக்குச் செல்லவிருந்த 6 விமான சேவைகள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தொடர்ந்து ஐந்தாவது நாளாகவும் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.

ஐஸ்லாந்திலுள்ள இஜப்ஜல்லாஜோகுல் எரிமலை கடந்த ஐந்து தினங்களாக குமுறிக் கொண்டிருப்பதால் ஐரோப்பா கண்டத்தின் வான்பகுதி முற்றாக புகைமண்டலம் நிரம்பிக் காணப்படுகிறது. இதனால் ஐரோப்பாவுக்கான விமான சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதன்படி பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து லண்டன் மற்றும் பிராங்போர்ட்டுக்கான விமானங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் இன்று அதிகாலை 3.35 மணிக்கு 563 ரக விமானம் ரோமை நோக்கிப் புறப்பட்டுச் சென்று , முற்பகல் 11.55 மணியளவில் விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாகவும் எமது செய்தியாளர் மேலும் குறிப்பிடுகிறார்.

ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்வதற்காக விமான நிலையத்துக்கு வரும் பயணிகள் இதனால் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

விமானங்கள் புறப்படும் நேரம், தாமதம், உள்ளிட்ட தகவல்களைத் தெரிந்துகொள்ள 019 7335500 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளுமாறு பயணிகள் கேட்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக