அவுஸ்திரேலியாவில் அரசியல் புகலிடம் கோரிய நால்வரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்கள். இரண்டு தமிழர்களும் ஒரு சிங்களவரும் ஒரு முஸ்லிமுமே இவ்வாறு அனுப்பப்பட்டவர்களாவர்.
அவுஸ்திரேலிய குடிவரவு, பிர ஜா வுரிமை திணைக்கள பேச்சாளர் இதனைத் தெரிவித்தார். ஒழுங்கீனமான முறையில் இரண்டு படகுகளில் அவுஸ்திரேலியா சென்ற இலங்கையர்கள் கடந்த வருடம் அவுஸ்திரேலிய அதிகாரிகளால் வழிமறிக்கப்பட்டார்கள்.
அகதிகள் அந்தஸ்து கோருவோர் தொடர்பான அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிலைப்பாடு தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்று பிரஸ்தாப பேச்சாளர் தெரிவித்தார்.
தங்கள் சர்வதேச கடப்பாடுகளின் கீழ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டியவர்களுக்கு அது வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில்,
"பாதுகாப்பு வழங்க வேண்டிய கடப்பாடு இன்றி ஒழுங்கீனமாக படகுகளில் வருவோருக்கு பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது. இவர்களுக்கு வேறு வழிகளிலும் பாதுகாப்பு வழங்க முடியாவிட்டால் இவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள்.
பாதுகாப்புக்கான கேரிக்கைகளை அவுஸ்திரேலியா கையாளும் விதம், ஒழுங்கீனமான முறையில் படகில் வருவோரை தீர்க்கமான முறையில் கவனிக்கும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அர்ப்பணிப்பான போக்கை எடுத்துக் காட்டகிறது.
இவ்விதம் ஒழுங்கீனமான முறையில் படகுகளில் அவுஸ்திரேலியா வருவோர் அங்கு வருவதற்கான காரணம் உட்பட பல விடயங்கள் குறித்து நேர்காணலின் போது விசாரிக்கப்படுவார்கள்.
தற்போது திருப்பி அனுப்பப்படும் குழுவினர் அகதி அந்தஸ்து கோருவதற்கு பொருத்தமான காரணம் எதையும் முன்வைக்கவில்லை என்று ஒரு சுயாதீன மதிப்பீட்டிலிருந்து தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இவர்களுடன் 2008ஆம் ஆண்டு பிற்பகுதியிலிருந்து இதுவரை அவுஸ்திரேலியாவில் புகலிட கோரிக்கை நிராகரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்ட இலங்கையர்களின் தொகை 145 ஆகும். இவர்களில் 19 பேர் 2010ஆம் ஆண்டில் திருப்பி அனுப்பப்பட்டோராவர்" என்றார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக