25 டிசம்பர், 2009

25.12.2009.

முஸ்லிம் மக்களின் வாக்குகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே-


பேரியல் அஸ்ரப்- முஸ்லிம் மக்களின் வாக்குகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே கிடைக்கும் அதற்காக நாம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறோமென அமைச்சர்கள் பௌஸி, பேரியல் அஷ்ரப் ஆகியோர் தெரிவித்துள்ளனர். சிறுசிறு கட்சிகள் மற்றும் சுயாதீனமான வேட்பாளர்களுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் தமது பெறுமதியான வாக்குகளை குப்பைத் தொட்டிக்குள் போடுவதற்கு விரும்பமாட்டார்கள் எனவும் அமைச்சர் பேரியல் அஷ்ரப் தெரிவித்துள்ளார். இதனால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்காக வாக்குகளில் பாதிப்புகள் ஏற்படுமா என வினவியபோதே அமைச்சர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். கொழும்பு மாவட்டத்தைப் பொறுத்தவரை அஸாத் சாலியும் எம்மோடு இணைந்துள்ளார். எவ்வித சந்தேகமுமின்றி 70வீத வாக்குகளால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெற்றிபெறுவது உறுதியெனவும் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் வாக்களிப்பதற்காக இடம்பெயர்ந்தவர்களிடமிருந்து ஏராளமான விண்ணப்பங்கள்

- எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக இடம்பெயர்ந்தவர்களிடமிருந்து ஏராளமான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தொடர்ந்தும் விண்ணப்பங்கள் வந்தவண்ணமிருப்பதாக தேர்தல்கள் செயலகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். எனினும் விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதற்கான கால அவகாசம் கடந்த 23ம் திகதியுடன் நிறைவடைந்துள்ளது. இதேவேளை இடம்பெயர்ந்தவர்கள் தமது வாக்குகளை செலுத்துவதற்காக வாக்குச் சாவடிகளை ஸ்தாபிப்பது தொடர்பாக ஆராய தேர்தல்கள் செயலக அதிகாரிகள் சிலர் இடம்பெயர்ந்தவர்கள் தங்கியுள்ள பிரதேசங்களுக்கு செல்லவிருப்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் ஆண்டுமுதல் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா இரண்டு மேம்பாலங்களை அமைக்க நடவடிக்கை-

எதிர்வரும் ஆண்டுமுதல் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா இரண்டு மேம்பாலங்களை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தியமைச்சர் ரீ.பி.ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். போக்குவரத்து நெருக்கடிகளைக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்நடவடிக்கைகளை எடுக்கத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் மேம்பாலங்களை அமைக்கும் திட்டத்துடன் சேர்த்து மேலும் 200 இரும்புப் பாலங்களையும் அமைக்க நடவடிக்கை எடுகக்ப்பட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு பாலத்திற்கும் 800 லட்சம் ரூபாய் செலவிடப்படவுள்ளது. இந்தப் பாலங்களை அமைப்பதற்காக நெதர்லாந்து மற்றும் கொரியா ஆகிய நாடுகள் உதவிகளை வழங்க முன்வந்துள்ளன என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

அஞ்சல்மூல வாக்களிப்புக்கென அரச சேவையாளர்கள் 4லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் அனுப்பிவைப்பு-

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக அஞ்சல்மூல வாக்களிப்புக்கென அரச சேவையாளர்கள் 4லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்களை அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மாவட்ட தேர்தல் செயலகத்தின் தகவல்களின்படி அஞ்சல்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை தகுதிகாணும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதற்கிடையில் அதிகளவிலான விண்ணப்பங்கள் குருநாகல் மாவட்டத்திலிருந்தே கிடைக்கப்பெற்றுள்ளதாக குருநாகல் மாவட்ட தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. அந்த மாவட்டத்திலிருந்து 54ஆயிரத்து 935விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஜனவரி 12ம் 13ம் திகதிகளில் அரச சேவையாளர்கள் அஞ்சல்மூல வாக்குளை அளிக்கலாமென அறிவிக்கப்பட்டுள்ளது.

வடகொரிய விமானம் ஈரானுக்கே ஆயுதங்களை எடுத்து வந்ததாக தகவல்-


வடகொரியாவிலிருந்து இலங்கைக்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டு பின்னர் நிராகரிக்கப்பட்ட விமானத்திலிருந்து தாய்லாந்தில் கைது செய்யப்பட்டவர்கள் மேலும் 12நாட்களுக்கு தடுத்து வைக்கப்படவுள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொள்ளும் பொருட்டே இந்தத் தடுத்து வைக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தாய்லாந்து பொலீசார் தெரிவித்துள்ளனர். ஆயுதங்களை ஏற்றிவந்த இந்த விமானம் தாய்லாந்தில் கைப்பற்றப்பட்டபோது அதிலுள்ள ஆயுதங்கள் இலங்கைக்கு கொண்டு செல்லப்படவிருந்ததாக தெரிவிக்கப்பட்ட போதிலும் அதனை இலங்கை அரசாங்கம் நிராகரித்திருந்தது. அதன்பின் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து அந்த விமானம் ஈரானுக்கான ஆயுதங்களையே வடகொரியாவிலிருந்து எடுத்து வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புலிகளுக்கு உதவிய சிங்கப்பூர் வர்த்தகர் அமெரிக்காவுக்கு நாடு கடத்தல்-

புலிகள் இயக்கத்திற்கு சொத்து ரீதியாகவும், ஆயுதக் கடத்தலிலும் ஒத்துழைப்பு வழங்கியதாக கைதுசெய்யப்பட்ட சிங்கப்பூரைச் சேர்ந்த வர்த்தகரொருவர் அங்கிருந்து அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். 49 வயதான பால்தேவ் நாயுடு என்கிற அவர் கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. நாடு கடத்தப்பட்டுள்ள அவர் அமெரிக்காவில் இரண்டு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்படுவாரென்றும் தெரியவருகின்றது. புலிகளுக்கு நிதியிடல் உள்ளிட்ட சொத்து ரீதியான ஒத்துழைப்பு வழங்கியமை மற்றும் ஆயுதக் கடத்தல்களில் ஈடுபட்டமை தொடர்பில் அவர் விசாரணைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளார். பால்தேவ் நாயுடு சிங்கப்பூர் ரிபோம் கட்சியின் ஸ்தாபக உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக