இறங்கும்போது இரு துண்டாக உடைந்தது அமெரிக்க விமானம்
வாஷிங்டன், டிச.23: அமெரிக்காவில் இருந்து 154 பேருடன் வந்த விமானம், ஜமைக்கா நாட்டு விமான நிலையத்தில் இறங்கி ஓடுகையில் இரு துண்டுகளாய் உடைந்தன.
எனினும் இந்த பெரிய விபத்தில் இருந்து 154 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். ஆனால் 40 பயணிகள் காயமடைந்தனர்.
அமெரிக்காவுக்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம் 148 பயணிகள் மற்றும் 6 விமான ஊழியர்களுடன் மியாமியில் இருந்து ஜமைக்காவுக்கு வந்தது.
இந்நிலையில் கிங்ஸ்டோன் விமான நிலையத்தில் இறங்கி ஓடுபாதையில் வேகமாக ஓட ஆரம்பித்த சற்று நேரத்தில் விமானம் இரு துண்டுகளாக உடைந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் அலறினர். என்ன நடக்கிறதென்றே தெரியாமல் திகைத்துப் போயினர்.
இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் கிங்ஸ்டோன் விமான நிலைய அதிகாரிகளும், பிற நாடுகளுக்கு செல்லக் காத்திருந்த பயணிகளும் அதிர்ச்சியில் உறைந்தனர்.
தகவல் அறிந்ததும் விமான நிலைய பாதுகாப்புப் படை வீரர்கள் விரைந்து வந்து விமானத்துக்குள் நிலைகுலைந்து கிடந்த அனைவரையும் மீட்டனர். காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர்.
பயணிகள் யாரும் பலமாகக் காயமடைந்தனரா, அவர்களது நிலைமை ஆகியவை குறித்து உடனடியாக அதிகாரப்பூர்வத் தகவல் ஏதும் இல்லை.
காரணம் தெரியவில்லை: இந்த விமான விபத்து எப்படி நிகழ்ந்தது என்பது குறித்து சரிவரத் தெரியவில்லை. விபத்துக்கான காரணத்தை அறிவதற்கு தீவிரமாக விசாரணை நடந்து வருகிறது. விமான விபத்துக்கான காரணம் குறித்து இன்னும் சரிவரத் தெரியாத நிலையில் அதுகுறித்து எவ்விதக் கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை என்று அமெரிக்க விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக