12 நவம்பர், 2009

ராஜமனோகரன் பிரபாகரன் (தோழர் பிரபா)
மக்கள் விடுதலையை நேசித்த மகத்தான வீரர்களில் ஒருவனாக தோழர் பிரபா இயற்கையெய்திய செய்தி எம்மை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. 1983ம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற இனக்கலவரத்தில் ஆயிரக்கணக்கான அப்பாவிமக்கள் கொல்லப்பட்டபோது, தமிழ் மக்களின் உரிமையை வென்றெடுப்பதற்கு அரசியல் மயப்படுத்திய மக்கள் புரட்சியே சரியான பாதை என்பதை உணர்ந்து கொண்ட தோழர் பிரபா அவர்கள் 83களின் நடுப்பகுதியில் தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டார்.

பள்ளிப்பாரயம் முதலே விடுதலையில் ஆர்வம் கொண்ட தோழர் பிரபா, பல்வேறு சத்தியக்கிரக போராட்டங்கள், மாணவர் எழுச்சி ஊர்வலங்கள் என தன்னையும் ஒருவராக மாணவர் பேரவையுடன் இணைந்து செயலாற்றியதுடன் படிப்படியாக தன்னை வளர்த்துக்கொண்டார். 1984களின் நடுப்பகுதியில் இந்தியாவிற்கு சென்ற தோழர் பிரபா அரசியல், இராணுவ கற்கை நெறிகளை தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் பாசறைகளில் கற்றுக்கொண்டு ஒர் சிறந்த மக்கள் போராட்ட வீரனாக தன்னை தயார்படுத்திக் கொண்டவர்.

1987ம் ஆண்டு இலங்கை-இந்திய அரசுகளிடையே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தை தொடர்ந்து இந்தியாவில் இருந்து தாயகம் திரும்பினார். தாயகத்திலும் தனது கழக செயற்பாடுகளை முன்னெடுத்த நிலையில், பாசிசபுலிகள் இலங்கை அரசிடம் உதவிகளை பெற்றுக்கொண்டு கழக உறுப்பினர்களையும், சகோதர அமைப்பின் உறுப்பினர்களையும் கொன்றொழித்தபோது நயவஞ்சக கொலைகளை எதிர்த்து வந்தார். பாசிசம் உச்சம் கட்டதாண்டவம் ஆடியபோது விடுதலை உணர்வுடன் போராட்ட அமைப்புக்களில் இணைந்து கொண்டவர்களில் பலரும் வெளிநாடுகளிற்கு இடம்பெயர வேண்டிய நிலையில்தான் பிரபாவும் இடம்பெயர்ந்தார். அவ்வாறாக இடம்பெயர்ந்து பலர் வந்தபோதும், அவர்களில் கணிசமானோர் தமது குடும்பவாழ்வில் அமைதியாக ஈடுபட விரும்பியபோதும், பிரபா அவர்கள் அவ்வாறில்லாமல் தான் நேசித்த கொள்கையில் உறுதியாக கழகத்தின் வழியில்; தனது போராட்டப் பாதையில் சுவிற்சர்லாந்தில் கழகத்தின் பணிகளை முன்னெடுத்த தோழர்களுடன் இணைந்து கொண்டு செயலாற்றினார். அக் காலகட்டத்திலும் பாசிசத்தின் பல்வேறு சாவல்களுக்கு முகம்கொடுத்து கழகத்தின் பாதையில் வழிதவறாது தொடர்ந்து செயலாற்றிவந்தார்.

சுவிற்சர்லாந்தில (தமிழன்குரல் வானொலி, வீரமக்கள்தினம் போன்றவற்றை ஆரம்பிப்பதற்கு முன்நின்று உழைத்த தோழர்களில் ஒருவராவர்

கழகத்தினால் முன்னெடுக்கப்பட்ட அனைத்து நிகழ்வுகளிலும் ஏனைய தோழர்களுடன் தோளோடு தோள்நின்று செயலாற்றியதுடன், கால நீரோட்டத்தில் பிரான்ஸ்க்கு இடம்பெயரவேண்டிய சூழ்நிலையிலும் அங்கேயும் பாசிசத்திற்கு துணிந்து முகம் கொடுத்து தனது செயற்திறனால் கழகத்தின் (அமைப்பாளராக) பணிகளை முன்னெடுத்து வந்ததுடன், வன்னியில் மோதல்களால் இடம்பெயர்ந்து வவுனியாவிற்கு வந்த மக்களிற்கு உதவிடும் தலைமையகத்தின் பணியில் பிரான்ஸ் கிளையும் இணைந்து உதவியதுடன், நிற்கதியாகிய நிலையி;ல் வந்த மக்களுக்கான மறுவாழ்வில் தொடர்ச்சியான பணிகளை கழகத்தின் மற்றைய கிளைத் தோழர்களுடன் இணைந்து முன்னெடுத்து வந்தார். கழகத்தின் கொள்கை வழியில் சகோதர அமைப்புக்களுடனும் ஒர் நல்லுறவை ஏற்படுத்தி அவர்களுடனான உறவையும் சிறந்தமுறையில் பிரான்ஸ் மண்ணில் முன்னெடுத்த ஒரு சிறப்புமிக்க தோழர் ஆவர்.

மக்கள் புரட்சியியே மக்களின் சுதந்திர விடியலுக்கு ஒரே தீர்வு என்ற இலட்சிய வேட்கையுடன் தனது இறுதி மூச்சுவரை உழைத்த தோழர் பிரபாவின் நினைவுகளோடும், கனவுகளோடும் கழகத்தின் பாதையில் எமது பயணம் தொடரும் என்று கூறி அவருக்கு எமது கண்ணீர் அஞ்சலியை செலுத்தி நிற்கின்றோம்.


தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (P.L.O.T.E)

ஜனநாயகமக்கள் விடுதலை முன்னணி (D.P.L.F)

சர்வதே ஒன்றியம் சார்பாக

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக