12 நவம்பர், 2009

இலங்கைக்கு வாடகைக்குக் கொடுத்த யுத்தக் கப்பல்களை இந்தியா திரும்பக் கோருகிறது


வருடாந்தம் புதுப்பிக்கும் ஒப்பந்த அடிப்படையில் இலங்கை கடற்படைக்கு 2007ஆம் ஆண்டில் வழங்கிய இரண்டு யுத்தக் கப்பல்களை தற்போது திரும்பப் பெறுவது குறித்து இந்திய கரையோரக் காவல்படையினர் நிச்சயமற்ற நிலையில் உள்ளனர் என்று இந்துஸ்தான் ரைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்த நடவடிக்கைக்குத் தயார் செய்து கொண்டிருந்த போது ஹெலிகொப்டர்கள், துரிதமாக சுடும் இயந்திரத் துப்பாக்கிகள் ஆகியன பொருத்தப்பட்ட 'வரஹா', 'விக்ரஹ' என்ற இரண்டு கரையோர காவல் கப்பல்களை இலங்கைக்கு வாடகைக்கு இந்தியா வழங்கியிருந்தது.

ஆனால், தற்போது இந்திய கரையோர காவல் படையினர் மேற்படி யுத்தக் கப்பல்கள் இரண்டையும் திருப்பிக் கேட்கவே இலங்கை கடற்படையினர்,'வரஹா' கப்பலுக்கு சாகர என்றும் 'விக்ரஹ' கப்பலுக்கு 'சயுரல' என்றும் பெயர் மாற்றம் செய்த நிலையில் என்ன பதிலளிப்பது என்ற சங்கடமான நிலையில் உள்ளனர்.

இரண்டு கப்பல்களையும் தந்து உதவியமை குறித்து இலங்கை இந்தியாவுக்கு நன்றிக் கடன்பட்டுள்ளது என்று இலங்கை கடற்படை பேச்சாளர் கப்டன் அதுல சேனாரத் தொலைபேசி மூலம் இந்தியாவுடன் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார்.

கரையோர காவற்படையின் கோரிக்கைக்கு இணங்குவதற்காக இலங்கையுடன் ராஜதந்திர தொடர்பை ஒதுக்குவது இந்திய அரசாங்கத்திற்கு சிரமமாக இருக்கலாம்.

அதேவேளை, இலங்கையின் இராணுவ தேவைகளை நிறைவேற்றிவரும் சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு விட்டுக் கொடுக்கவும் அது விரும்பவில்லை.

தம்மை இனங்காண்பிக்க விரும்பாத இலங்கையின் சிரேஷ்ட பாதுகாப்பு அமைச்சு அதிகாரி ஒருவர், தற்போது விடுதலைப் புலிகள் மடிந்து போன வேளையில் இலங்கை கடற்படைக்கு இக்கப்பல்கள் தேவைப்பட மாட்டா என்று இந்திய கரையோர காவற்படையினர் கருதியிருக்கலாம் என்று கூறினார்.

இலங்கைக்கு தந்த கப்பல்களுக்கு பதிலாக இந்திய அரசாங்கம் கரையோர காவற்படைக்கு புதிய கப்பல்களை வழங்கவும்கூடும் என்று அவர் தெரிவித்தார். மும்பாய் பயங்கரவாத தாக்குதல்களை அடுத்து கரையோர காவற் படைக்கு இந்திய அரசாங்கம் மேலும் 55 யுத்தக் கப்பல்களையும் 45 விமானங்களையும் கொள்வனவு செய்ய அங்கீகாரம் அளித்துள்ளது.

இத்தகைய சொத்துக்களை ஒரேநாளில் பெற்று பொருத்திவிட முடியாது. பல்வேறு கப்பல் கம்பனிகளுக்கு கொள்வனவு கட்டளைகள் அனுப்பப்பட்டுள்ளன.

ஆனால் இவற்றை விநியோகிக்க இரண்டு வருடங்களாயினும் எடுக்கும்.

இந்த நிலையில் தங்களுக்கு கப்பல் பற்றாக்குறை இருந்து வருகிறது என்று கரையோர காவற்படை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்திய கரையிலிருந்து 12 மைல் தூரம் கடற்பரப்புக்குள் பாதுகாப்புக்கு கரையோர காவற் படையே பொறுப்பாகும். இந்திய கடற்படையின் மேற்பார்வையில் கரையோர காவற்படையினர் செயற்பட்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக