12 நவம்பர், 2009

பிரபாகரனுக்குப் பின்னரான தமிழ் அரசியல்



இலங்கைத் தீவில் பிரபாகரனுக்குப் பின்னரான தமிழ் அரசியல் என்பது இன்னமும் தொடங்கவில்லை. நாடு இப்பொழுதும் ஒரு இடைமாறு காலகட்டத்தில்தான் நிற்கிறது. பிரபாகரன் இல்லை என்பதை ஜீரணித்துக்கொள்ள முடியாத தமிழர்களே அதிகமாகத் தென்படுகிறார்கள். அவரை ஒரு சாகாவரம் பெற்ற மாயாவியாக உருவகித்து வைத்திருந்த அநேகமானவர்களுக்கு அவரில்லாத ஒரு உலகத்தை நினைத்துப் பார்க்கவே முடியாதிருக்கிறது. குறைந்தபட்சம் அவருடைய ஆவியோடாவது கதைத்துவிடவேண்டும் என்ற தவிப்போடு அவர்கள் கண்ணாடிக் குவளைகளை நகர்த்திக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், பிரபகாரன் அரங்கில் இல்லை என்பதே உண்மை. அவர் தப்பியோடி எங்காவது பர்மியக் காடுகளில் ஒளிந்திருந்தாலும்கூட இனி அவரால் அரசியல் செய்யமுடியாது. அவருடைய அரசியல் எப்பொழுதோ காலாவதியாகிவிட்டது. அவர் உயிருடன் தப்பியிருந்தாலும் கூட அரசியல்த் துறவறம் பூண்டு ஒரு தலைமறைவுச் சாட்சியாக இருக்கலாம். அவ்வளவுதான். அதாவது பிரபாரனின் யுகம் முடிந்துவிட்டது. நவீன தமிழ் அரசியலில் தோன்றிய ஒரு வீரயுகம் முடிந்துவிட்டது. அதை ஒரு வீரயுகம் என்று அழைக்கலாமா என்பதும் இப்பொழுதும் விவாதத்துக்குரியதே.

விடுதலைப் புலிகளின் வீரம் தியாகம் என்பவற்றைச் சூழ்திருந்த புனிதத்திரைகள் யாவும் நாலாம்கட்ட ஈழப்போரில் கிழிந்துபோய்விட்டன. தன்னையும் தன்னுடைய அதிகாரத்தையும் தக்கவைப்பதற்காக அவர் ஆடிய சூதாட்டம் அவரை உலகின் மன்னிக்கப்படமுடியாத போர்க்குற்றவாளிகள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களைப் புரிந்தவர்களின் பட்டியலில் சேர்த்துவிட்டது.

மாவிலாற்றிலும், முகமாலையிலும் தோற்கடிக்கப்பட்டபோது பிரபாகரன் நிதானமிழந்துவிட்டார். அவர் ஆட்சிசெய்த அரை அரசைப் பாதுகாப்பதற்காக அவருடைய பிரஜைகள் என்று அவர் நம்பிய சுமார் மூன்று இலட்சம் மக்களை அவர் வதைத்த விதம் அதை நியாயப்படுத்த அவருடைய ஆட்கள் சொன்ன பொய்கள் தோல்விகளையும் இயலாமைகளையும் மறைக்க அவர் தனது சொந்த மக்களிற்கே அவிழ்த்துவிட்ட கட்டுக்கதைகள் எல்லாமே அவருடைய தலையைச் சுற்றி அவருடைய அபிமானிகளால் வரையப்பட்டிருந்த ஒளிவட்டத்தை அழித்துவிட்டன. முதலில் அவர் வீட்டுக்கு ஒரு பிள்ளை என்று கேட்டார். முடிவில் வீட்டிலுள்ள வலுவுள்ள எல்லோரையும் கேட்டார். வராதவர்களைக் கடத்திச் சென்றார். எதிர்த்த உறவினர்களைச் சுட்டுக்கொன்றார் அல்லது அடித்து நொறுக்கினார்.

தனது பிடியிலிருந்து தப்பி அரச படைகளை நோக்கி ஓடிய தனது இனத்தவரையே புறமுதுகில் சுட்டுக்கொன்றார் அல்லது தப்பியோடிப் பிடிபட்டவர்களை அடித்து நொறுக்கினார்.
நவீன தமிழ் அரசியலில் தனிநபர் வழிபாட்டின் உச்சமாகக் காணப்படுவது அவர்தான். அதேசமயம் தனது சொந்த மக்களாலேயே வேறெந்தத் தமிழ்த் தலைவரையும் தூற்றியிராத அளவுக்கு கேவலமான வசைச் சொற்களால் தூற்றப்பட்ட ஒரு தலைவராகவும் அவரே காணப்படுகிறார். அவர் தொடக்கி வைத்த தமிழின் நவீன வீரயுகம் எனப்படுவது அவரைத் தமிழ் வீரத்தை அதிகம் துஷ்பிரயோகம் செய்த ஒரு தலைவராகவே நிறுவிவிட்டு முடிந்திருக்கிறது.

பிரபாகரன்தான் எல்லாமும் என்று நம்புகிறவர்களைப் பொறுத்தவரை எல்லாம் முடிந்துவிட்டதுதான். 38 ஆண்டுகாலத் தமிழ் அரசியல் முழுவதும் வீணாகிவிட்டதுதான். ஆனால், பிரபாகரனோடு முடிவுக்கு வந்தது தமிழ் மிலிட்டரிசம் தான். தமிழ் அரசியல் அல்ல. தமிழின் நவீன வீரயுகம் ஒன்று அவருடன் முடிந்துவிட்டது இனி அறநெறியுகம் ஒன்று வரும். அதற்கிடையிலான ஒரு இடைமாறு காலகட்டத்திலேயே இப்பொழுது தமிழ் அரசியல் நிற்கிறது.
அறநெறிக்காலம் என்றதும் நாயன்மார்களும், ஆழ்வார்களும் வந்து உதித்து அதிசயங்கள், அற்புதங்களைச் செய்து தேவாரத் திருப்பதிகங்களைப் பாடப்போகிறார்கள் என்ற அர்த்தத்தில் அல்ல. மாறாக, தமிழின் முன்னைய வீரயுகங்களைப்போல யுத்தத்தின் படிப்பினைகளிலிருந்து வீரத்திற்குப் பதிலாக அறிவைப் போற்றும் ஒரு புதிய மரபின் எழுச்சியை அதாவது மரபு மாற்றத்தைக் கருதியே இங்கு இவ்வாறு கூறப்படுகிறது. அதாவது, புலிகளின் வீழச்சியிலிருந்து பெற்ற படிப்பினைகளிலிருந்து ஒரு புதிய தமிழ் அரசியல் வெளியை உருவாக்குவது என்ற அர்த்தத்தில்.

பிரபாகரன் ஒரு கெடுபிடிப்போரின் குழந்தை, அவர் கெடுபிடிப்போரின் இரு துருவ போட்டி அரசியலுக்கு ஊடாகவே வளர்ந்தவர். ஆனால், கெடுபிடிப்போரின் பின்னரான ஒரு துருவ உலக ஒழுங்கை அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை. அல்லது அவரது தலையைச்சுற்றி வரையப்பட்டிருந்த ஒளிவட்டம் ஒரு புதிய உலக ஒழுங்கைப் புரிந்துகொள்ள அவரை விடவில்லை. அல்லது அதை இடித்துரைக்க வல்ல புத்திஜீவிகளை அவர் நெருங்கிச்செல்லவில்லை. முள்ளிவாய்க்காலில் அவருடைய வீழ்ச்சியின் இறுதிக்கட்டத்திலும் அவர் எதற்காகவோ காத்திருந்தும் கூட ஒரு துருவ உலக ஒழுங்கைச் சரியாக உள்வாங்காததன் விளைவுதான்.

ஒரு துருவ உலக ஒழுங்கை அவர் மட்டுமல்ல அவரைப்போன்ற ஒற்றைப் பரிமாண அரசியலை அவாவும் எவராலும் சுதாகரித்துக்கொள்ள முடியாதுதான். ஏனெனில், ஒரு துருவ உலகம் எனப்படுவது தகவல் தொழில்நுட்பம், நிதி மூலதனம் இரண்டினதும் திரட்சியாக எழுச்சிபெற்ற ஒன்று. தகவல் தொழில்நுட்பமானது தகவல்களை ஒரு மையத்தை நோக்கிக் குவித்தது. நிதி மூலதனமானது நிதியை ஒரு மையத்தை நோக்கிக் குவித்தது. தகவல் தொழில்நுட்பம் தகவலை அதாவது அறிவைத் திறந்துவிட்டது. நிதி மூலதனம் சந்தைகளைத் திறந்துவிட்டது. இரண்டும் சேர்ந்து தேசங்களின் எல்லைகளையும், கண்டங்களின் எல்லைகளையும் கரைத்து வருகின்றன. இவ்விதம் எல்லைகள் கரைந்துருவாகி வரும் பூகோளக் கிராமத்தில் எதுவும் தூயதாக இருக்க முடியாது. எல்லாமே ஒன்று மற்றதுடன் கலந்துதான் இருக்கமுடியும்.

இதில் தூய விடுதலையும் இல்லை. தூய இலட்சியங்களும் இல்லை. தூய தியாகமும் இல்லை. தூய துரோகமும் இல்லை. தூய வீரமும் இல்லை. தூய கோழைத்தனமும் இல்லை. எல்லாமே ஒன்று மற்றதிலிருந்து பிரிக்கப்படவியலாதபடி ஏதோவொரு விதத்திற்கு கலந்துதான் காணப்படுகின்றன. அதாவது கலப்பு நிறங்களின் யுகம் இது. அல்லது சாம்பல் நிற ஓரங்களின் யுகம் இது. தூயது என்று எதுவுமே தனித்து நிற்கமுடியாதளவுக்கு தொழில்நுட்பமும் நிதிமூலதனமும் உலகங்களை இணைத்துகொண்டுவருகின்றன.

இதனால் எதிலும் ஒற்றைப் பரிமாணம் என்பது நடைமுறைச் சாத்தியம் அற்றதாகி வருகிறது. அரசியல், பொருளாதாரம், அறிவியல், கலை, இலக்கியம் அனைத்திலுமே பல்பரிமாணம் அல்லது பல்லொழுக்கம் -மல்டி டிசிப்பிளின்- எனப்படுவதே முழுமையானது என்றாகி வருகிறது. எதிலும் பல்பரிமாணத்தை அல்லது பன்மைத்துவத்தை அல்லது கூட்டு ஒழுக்கத்தை ஏற்றுக்கொள்ளாத எவரும் முழுமைத்துவத்துக்கு எதிரானவர்களாக காணப்படுகிறார்கள். இப்பூமியில் எதுவும் ஏதோவொரு முழுமையின் தவிர்க்கப்படவியலாத ஒரு பகுதியாகவே காணப்படுகிறது. எனவே, முழுமைத்துவம் எனப்படுவது அதன் பிரயோக அர்த்தத்தில் பன்மைத்துவம்தான். பன்மைத்துவம் எனப்படுவது அதன் அரசியல் பிரயோகத்தில் ஜனநாயகம்தான். இந்த யுகமாற்றத்தை ஏற்றுக்கொள்ளாத எவரும் அரசியல்க் கூர்ப்பில் காலாவதியாகவேண்டியதுதான். பிரபாகரனுக்கும் இதுதான் நடந்தது.

கெடுபிடிப்போரின் குழந்தையான அவரால் கெடுபிடிப்போரின் பின்னரான ஒரு துருவ உலக ஒழுங்குடன் அனுசரித்துப்போக முடியவில்லை. எனவே அவர் காலாவதியாகி அரங்கிலிருந்து அகற்றப்பட்டார். அவரால் எதையுமே கறுப்பு வெள்ளையாகத்தான் பார்க்க முடிந்தது. அவரிடம் இரண்டே இரண்டு பெட்டிகள்தான் இருந்தன. ஒன்று கறுப்பு மற்றது வெள்ளை. இரண்டு பட்டியல்கள்தான் இருந்தன. ஒன்று தியாகிகளின் பட்டியல் மற்றது துரோகிகளின் பட்டியல். இந்த இரண்டுக்கும் வெளியே இந்த இரண்டுக்கும் இடையே சாம்பல் நிறத்திலும் பெட்டிகள் இருக்க முடியும் என்பதை ஏற்றுக்கொள்ள அவருடைய ஒற்றைப் பரிமாண ஒழுக்கம் விட்டுக்கொடுக்கவில்லை. பூமி சாம்பல் நிற ஓரங்களை நோக்கிச் சுற்றிக்கொண்டிருக்க பிரபாகரனோ கறுப்பு வெள்ளை அரசியலை நடத்த முற்பட்டார். முடிவில் அரங்கிலிருந்து அகற்றப்பட்டார்.

எனவே பிரபாகரனிடமிருந்து கற்றுக்கொள்வது என்பது சாம்பல் நிற ஓரங்களை ஏற்றுக்கொள்வதுதான். அது நிச்சயமாக புலிகளின் சாம்பலில் இருந்துதான் வரவேண்டியிருக்கிறது.
பிரபாகரன் எல்லாவற்றையுமே பிரித்து வைத்திருந்தார். அவர் இலங்கைத் தீவை மட்டும் பிரிக்க முயலவில்லை. முதலில் அவர் தமிழ் அறிவைத் தமிழ் வீரத்திலிருந்து பிரித்தார். பின்னர் சிங்கள முற்போக்குச் சக்திகளை தமிழர்களிடமிருந்து பிரித்தார். பின்னர் அவர் தமிழர்களை தியாகி; துரோகி; மாற்று இயக்கம் என்று கூறுபோட்டுப் பிரித்தார். பின்னர் முஸ்லிம்களைத் தமிழர்களிடமிருந்து பிரித்தார். பின்னர் கிழக்குத் தமிழர்களை வடக்கிலிருந்து பிரித்தார். இவை தவிர ரஜீவ் காந்தியைக் கொல்லுமாறு உத்தரவிட்டதன் மூலம் இந்தியாவைத் தமிழர்களிமிருந்து பிரித்தார். பின்னர் நாலாம் கட்டம் ஈழப்போருக்கான புறநிலமைகளை உருவாக்கியதன் மூலம் மேற்கு நாடுகளை தன்னிடமிருந்து பிரித்தார். பின்னர் நாலாம்கட்ட ஈழப்போரில் தன்னையும் தன்னுடைய அதிகாரங்களையும் பாதுகாப்பதற்காக அவர் முன்னெடுத்த ஆட்பிடி அரசியலும் அதன் தொடர் விளைவுகளும் அவரை அவருடைய ஆட்சிக்குட்பட்டிருந்த சுமார் மூன்று இலட்சம் மக்களில் பெரும்பாலாலனவர்களிடமிருந்து பிரித்தன.

முடிவில் முள்ளிவாய்க்காலில் அவர் சுற்றிவளைக்கப்பட்டிருந்தபோது கவச குண்டலங்களை இழந்த கர்ணணைப்போலக் காணப்பட்டார்.
எனவே பிரபாகரனிடமிருந்து கற்றுக்கொள்வது என்பது என்னவெனில் தனது மெய்யான பலங்கள் எவையெவையோ அவற்றையெல்லாம் தன்னிடமிருந்து பிரித்துவைத்த அல்லது பிரிந்துபோகவைத்த ஒரு மனிதனின் வீழ்ச்சியைத்தான். எனவே, பிரபாகரனுக்குப் பின்னரான தமிழ் அரசியல் வெளி எனப்படுவது அவர் பிரித்துவைத்த எல்லாவற்றையும் ஒரு மெய்யான தேசிய அடித்தளத்தில் ஒன்றுசேர்த்து வைப்பதுதான்.

மேற்கத்தைய அறிஞர்களின் முடிவுகளின்படி தேசியம் எனப்படுவது ஜனநாயகத்தை அதன் உள்ளடக்கமாகக் கொண்டிருப்பது. இதன்படி கூறின் தேசியம் எனப்படுவது பன்மைத்துவத்தை அதன் உள்ளடக்கமாகக் கொண்டிருப்பது. அதாவது சாம்பல் நிற ஓரங்களைக் கொண்டதாக இருப்பது. எனவே பிரபாகரனுக்குப் பின்னரான தமிழ் அரசியல் எனப்படுவது சாம்பல் நிற ஓரங்களை உடையதொன்றாக உருவாகவேண்டும்;. தமிழர்கள் தமக்குள்ளும் தமக்கு வெளியே தீவு முழுவதும் தீவுக்கு வெளியே பிராந்திய மற்றும் சர்வதேச அளவிலும் சாம்பல் நிற ஓரங்களை உருவாக்கவேண்டும். அதாவது மையத்தில் நிறங்களின் தனித்துவங்கள் துலங்கும் அதேசமயம் ஓரங்களில் கலப்பு நிறங்களை அதாவது சாம்பல் நிற ஓரங்களைக் கொண்ட ஒரு முழுமை.

சாம்பல் நிற ஓரம் அல்லது சாம்பல் நிறத் தமிழ் அரசியல் வெளி எனப்படுவது, குறிப்பாக புலிகளின் வீழ்ச்சிக்குப் பின் அதைப்பற்றி உரையாடுவது என்று சிலருக்கு சரணாகதி அரசியலோ என்று தோன்றக்கூடும். அதாவது வென்றவர்களுக்கும் தோற்றவர்களுக்கும் இடையிலான கோழைத்தனமான ஒர் உடன்படிக்கைக்கான கோட்பாட்டு விளக்கமா இது என்று கேள்விகள் வரும்.
இல்லை. நிச்சயமாக இல்லை.
சாம்பல் நிறம் என்று இங்கு கூறப்படுவது எதுவும் தனது தனித்துவத்தை இழந்து மற்றதுடன் இரண்டறக் கரைந்து சங்கமாகிவிடுதல் என்ற அர்த்தத்தில் அல்ல. ஒன்று மற்றதுடன் கரைந்து எல்லாமும் ஒரே கலவையாக மாறிவிடுதல் என்பதும் ஒற்றைப் பரிமாண வாதம்தான்.

அது பன்மைத்துவத்துக்கு எதிரானதுதான். மாறாக, இங்கு சாம்பல் நிறம் என்று கூறப்படுவது எதுவெனில், எதையும் கறுப்பு வெள்ளையாக மட்டும் பார்க்கக்கூடாது என்ற அர்த்தத்தில்தான். எதுவும் தனது தனித்துவத்தை இழந்துவிடாமலிருக்கும் அதேசமயம் மற்றொன்றுடன் கலந்து வாழ்தலே இது. மையத்தில் நிறத்தின் தனித்துவம் துலங்கும் அதேசமயம் ஓரத்தில் கலப்பு நிறங்கள் (சாம்பல் நிறம்) காணப்படும். இதுதான் மெய்யான பன்மைத்துவம். அதாவது தனித்துவம் மிக்க இரண்டு சிறு முழுமைகள் ஒன்று மற்றதுடன் இணைந்து ஒரு பெரிய முழுமை உருவாகிறது. இதன்படி ஒன்று அது அதுவாக இருக்கும் அதேசமயம் ஒரு பெருமுழுமையின் தவிர்க்கப்படவியலாத ஒரு பகுதியாகவும் இருக்கும்.

தொழில்நுட்ப வார்த்தைகளில் இதுதான் இன்ரநெற் உலகம். அரசியல் அர்த்தத்தில் இதுதான் பன்மைத்துவம். இதுவே மெய்யான ஜனநாயகத்துக்கான தகர்க்கப்படமுடியாத அடித்தளமும்கூட. இதற்குத்தான் ஒப்பீட்டளவில் அதிகளவும் வீரம் தேவை. சுத்த வீரர்களால்தான் தமது தனித்துவங்களை இழந்துவிடாதிருக்கும் அதேசமயம் மற்றவர்களின் தனித்துவங்களையும் அங்கீகரிக்க முடியும்.

எனவே சாம்பல் நிற ஓரங்களின் அரசியல் எனப்படுவது அதன் பிரயோக இயக்கத்தில் பன்மைத்துவம்தான். ஒற்றைப் பரிமாண அரசியல் எதுவுமே பன்மைத்துவத்துக்கு எதிரானது. தமிழ் அரசியல் எனப்படுவது கடந்த சுமார் கால்நூற்றாண்டுக்கும் மேலாக பெருமளவுக்கு ஒற்றைப் பரிமாண அரசியலாகவே உருவாகி வந்திருக்கிறது. ஒற்றைப் பரிமாண அரசியல் எனப்படுவது அதன் பிரயோக வடிவத்தில் இராணுவ அரசியல்தான். தமிழ் மக்கள் கடந்த கால்நூற்றாண்டுக்கும் மேலாக இராணுவமயப்பட்டு வந்துள்ளார்கள்.
இதனால் தமிழ் அரசியலை பன்மைத்துவத்தை நோக்கிக் கொண்டு வருதல் என்பது அதை இராணுமயநீக்கம் செய்வதுதான். ஒரு சமூகத்தை இராணுவமயநீக்கம் செய்வது என்றால் அதை ஃபியர் சைக்கோஸிஸ் (அச்ச உளவியல்) இலிருந்து விடுவிக்கவேண்டும். ஏகப்பரிமாண அரசியலின் பிரதான தோற்றப்பாடே ஃபியர் சைக்கோஸிஸ்தான். எனவே ஃபியர் சைக்கோஸிஸ் இலிருந்து தமிழ்ச்சமூகத்தை முதலில் விடுவிக்கவேண்டும். அதற்கு சிவில் கட்டமைபுக்களை உருவாக்கவேண்டும்.

ஒரு சமூகத்தை ஃபியர் சைக்கோஸிஸ் இலிருந்து விடுவிப்பதென்றால் அங்கே மூடப்பட்டிருக்கும் எல்லாக் கதவுகளையும் திறக்கவேண்டும். மக்களை அவர்களுடைய பதுங்கு குழிகளை விட்டு வெளியே வருமாறு ஊக்குவிக்கவேண்டும். சுமார் கால்நூhற்றாண்டுக்கும் மேலாக ஏன் அதற்கு முன்பிருந்த தமிழர்கள் ஏதோவொரு பதுங்கு குழிக்குள்தான் வசித்துவருகிறார்கள். ஒன்றில் பண்பாட்டுப் பதுங்குகுழி அல்லது சாதிப் பதுங்குகுழி அல்லது பிரதேசவாத மற்றும் ஊர்வாதப் பதுங்குகுழி. இவற்றுடன் பிரபாகரன் கொண்டுவந்த இராணுவப் பதுங்குகுழி.
எனவே, தமிழர்களை முதலில் பதுங்குகுழிகளுக்குள் இருந்து வெளியே எடுக்கவேண்டும். அதற்குவேண்டிய எல்லாவிதமான உரையாடல்களுக்கும் சுயவிமர்சனங்களுக்குமான கதவுகள் அகலத் திறக்கப்படவேண்டும். பிரபாகரனின் ஆவியோடு உரையாட விரும்புவோர் முதல் தமது மனச்சாட்சிகளோடு உரையாடட்டும் அப்பொழுதுதான் ஒரு அறநெறி யுகத்தின் பிறப்பை அவர்களால் ஆமோதிக்க முடியும்.

அப்பொழுதுதான் சாம்பல் நிற ஓரங்களை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியும். இது விடயத்தில் இலங்;கைத் தீவுக்குள்ளும் தீவுக்கு வெளியே தமிழ் நாட்டிலும், புலம்பெயர்ந்த நாடுகளிலும் உள்ள அனைத்து புத்திஜீவிகளும் கலைஞர்களும் அக்கறை கொண்ட எல்லாரும் ஒன்றுதிரளவேண்டும்.
கறுப்பு வெள்ளை அரசியல் எனப்படுவது நாடுகளையும், கண்டங்களையும், உலகங்களையும் மூடுவது.
ஆனால், சாம்பல் நிற ஓரங்களின் அரசியல் எனப்படுவது நாடுகளையும், கண்டங்களையும், உலகங்களையும் திறந்துவிடுவது:
கறுப்பு வெள்ளை அரசியல் அறிவின் எதிரி. சாம்பல் நிற அரசியலோ அறிவின் தோழன்.
கறுப்பு வெள்ளை அரசியல் ஒரு சமூகத்தை இராணுவமயப்படுத்தும். சாம்பல் நிற அரசியலோ ஒரு சமூகத்தை இராணுவமய நீக்கம் செய்து சிவில் கட்டமைப்புக்களை உருவாக்கும்.

கறுப்பு வெள்ளை அரசியல் ஏகப்பரிமாண அரசியலில் போய் முடியும். சாம்பல் நிற அரசியலோ பன்மைத்துவத்தை ஸ்தாபிக்கும்.
கறுப்பு வெள்ளை அரசியல் அச்ச உளவியலைப் பாதுகாக்கும். சாம்பல் நிற அரசியலோ மனித உரிமைகளைப் பாதுகாக்கும்.
கறுப்பு வெள்ளை அரசியல் கசப்பை, வெறுப்பை, வன்மத்தை, பழிவாங்கும் உணர்ச்சியைப் பேணும். சாம்பல் நிற அரசியலோ சகிப்புத்தன்மையையும், நல்லிணக்கத்தையும் பேணும்.
கறுப்பு வெள்ளை அரசியல் தன்னுடைய மெய்யான பலங்களைத் தன்னிலிருந்து பிரித்து முடிவில் எதிர்த்தரப்பின் நிகழ்ச்சி நிரலுக்குள் போய் வீழ்ந்துவிடும்.

ஆனால், சாம்பல் நிற அரசியலோ எல்லாத் தரப்பினரையும் தன்வசப்படுத்தி எதிர்ப்பையும் தனது நிகழ்ச்சி நிரலுக்குள் வந்துவிழச் செய்துவிடும்.
பிரபாகரனின் கறுப்பு வெள்ளை அரசியலாசை முடிவில் அவரது “பகைவர்களுக்கே” வெற்றியைப் பெற்றுக்கொடுத்துவிட்டது. 38 ஆண்டுகாலப் போராட்டத்தின் முடிவில் தமிழர்கள் பிச்சை வேண்டாம் நாயைப்பிடி என்ற இழிநிலைக்கு வந்து சேர்ந்திருக்கிறார்கள்.
ஆனாலும் வீழ்ச்சியுற்றிருப்பது பிரபாகரனிஸம் மட்டும்தான். நிச்சயமாகத் தமிழ் அரசியல் அல்ல. எனவே, பிரபாகரன் விட்ட தவறுகளிலிருந்து பெற்ற படிப்பினைகளின் அடிப்படையில் ஒரு புதிய தமிழ் அரசியல்வெளி உருவாக்கப்படவேண்டும்.

இனிப் பதுங்கு குழிகளும் வேண்டாம். புதை குழிகளும் வேண்டாம்.
தியாகிகள் பட்டியலும் வேண்டாம். துரோகிகள் பட்டியலும் வேண்டாம்.
வீரத்தை வழிபடப்போய் முடிவில் மரணத்தை மகிமைப்படுத்தி வாழ்வை நிராகரித்தது போதும்.
இனி அறிவை வழிபடுவதிற் தொடங்கி வாழ்வை ஆமோதிக்கும் ஒரு புதிய அரசியல் நாகரீகம் தேவை.
தான் சாகத் தயாராக இருந்த ஒரே காரணத்திற்காக பிற உயிர்களை ஒரு பொருட்டாகத்தானும் மதிக்காத ஒரு வீரமரபு இனி வேண்டாம்.
பதிலாக, தன்னுடைய உயிரின் பெறுமதி தெரிந்த காரணத்தினாலேயே பிற உயிர்களையும் தன்னுயிர்போல நேசிக்கும் ஒரு புதிய அரசியல் நாகரீகமே இனித் தமிழர்களுக்கு வேண்டும்
அதாவது புதிய சாம்பல் நிற அரசியல்வெளி ஒன்று வேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக