12 நவம்பர், 2009

நாட்டுக்கு இராணுவத் தலைமைத்துவம் அவசியமில்லை - ஊடக அமைச்சர்



நாட்டுக்குத் தேவை அரசியல் தலைமைத்துவமேயன்றி இராணுவத் தலைமையல்ல என்றும் உலக வரலாறு இதற்குச் சிறந்ததொரு சான்றாகும் எனவும் ஊடக மற்றும் தகவல் தொடர்பாடல்துறை அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார்.

ஊடக அமைச்சில் இன்று காலை நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கூட்டுப் படைகளின் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா அரசியலில் ஈடுபடுவது குறித்து பல்வேறு வகையிலான ஊகங்கள் எழுந்துள்ள நிலையில், இராணுவத் தலைமைத்துவமானது முன்னேற்றகரமான செயற்பாட்டுக்கு வித்திடுவதாய் அமையாது என அமைச்சர் கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், "எந்தவொரு ஜனநாயக நாட்டுக்கும் அரசியல் தலைமைத்துவமே அவசியமாகும். இரண்டாம் உலகப் போரை எடுத்துக்கொண்டால், திறமைமிக்க, சவால்களை வெற்றிகொண்ட இராணுவ அதிகாரிகள் இருந்தார்கள் என்பதை அறிய முடியும். ஆயினும் அவர்கள் அரசியலுக்குள் நுழைந்து அல்லது நுழைய முற்பட்டு தோல்வியையே அடைந்தனர்" என்றார்.

ஜெனரல் சரத் பொன்சேகாவின் அரசியல் பிரவேசம் குறித்து ஊடகவியலாளர் ஒருவர் அமைச்சரிடம் வினவியபோது, "இராணுவத்தில் உயர்பதவியில் சேவை செய்யும் அதிகாரியாக மட்டுமே அவரை நான் பார்க்கிறேன். அதைவிடுத்து வேறெதுவும் எனக்குத் தெரியாது" என பதிலளித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக