12 நவம்பர், 2009

மியன்மார் நாட்டின் தலைவர் இன்று இலங்கைக்கு வருகிறார்- ஜனாதிபதியை சந்தித்து பேசுவார்

மியன்மார் அரச சமாதான மற்றும் அபிவிருத்திச் சபை ஒன்றியத்தின் தலைவரும், சிரேஷ்ட உயரதிகாரியுமான தன் சூவி இன்று வியாழக்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவிருக்கின்றார்.அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று, மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு இன்று பிற்பகல் வருகை தருகின்ற தன் சூவியை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹுசைன் பைலா தலைமையிலான வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் வரவேற்பர்.இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் அவர் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம மற்றும் உயரதிகாரிகளையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார்.

அத்துடன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த சந்திப்புகளில் இலங்கையில், குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் நிலவுகின்ற மூதலீட்டு வாய்ப்புக்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்படுவதுடன், இரு நாடுகளுக்கும் இடையில் நிலவுகின்ற கலை, கலாசார, வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்தல் தொடர்பில் ஆராயப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர், அண்மையில் அந்நாட்டிற்கு விஜயம் செய்திருந்த போது விடுத்திருந்த அழைப்பை ஏற்றே அவர் இலங்கைக்கு விஜயம் செய்கின்றார் என்று வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக