27 அக்டோபர், 2009

இடம்பெயர்ந்த மக்களுக்கான உணவுப்பொருட்களை கொள்ளையிட்டவர்கள் கைது-
நலன்புரி நிலையங்களில் உள்ள மக்களில் இதுவரை 58ஆயிரம் பேர் மீள்குடியமர்வு-

நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களில் இதுவரையில் 58ஆயிரம் பேர் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளதாக அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சர் ரிசாத் பதியுதீன் இதனைத் தெரிவித்துள்ளார். மீள்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு ஆறுமாத காலத்திற்குத் தேவையான உணவுப்பொருட்கள் சமையல் பாத்திரங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. மேலும் மீள்குடியமர்த்தப்பட்ட குடும்பம் ஒன்றுக்கு தலா 25ஆயிரம் ரூபா வீதம் அவர்களின் வங்கிக் கணக்கில் இடப்பட்டுள்ளது. நலன்புரி நிலையங்களில் எஞ்சியுள்ள மக்கள் எதிர்வரும் இருமாத காலத்திற்குள் முற்றாக மீள்குடியமர்த்தப்படுவர். கிளிநொச்சி, முல்லைத்தீவில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றும் பணிக்கு 14 இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்றும் அமைச்சர் ரிசாத் பதியுதீன் மேலும் தெரிவித்துள்ளார்.

இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்குவதற்காக சேகரிக்கப்பட்ட ஒருதொகுதி உணவுப்பொருட்களை கொள்ளையிட்ட ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களை இன்றுஅதிகாலை கைதுசெய்துள்ளதாக ஹபரணைப் பொலீசார் தெரிவித்துள்ளனர். ஹபரணை வீதியினூடாக வந்த சந்தேகத்திற்கிடமான லொறியொன்றினை பொலீசார் சோதனையிட்டபோதே இப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது மூதூர் பிரதேசத்தில் இடம்பெயர்ந்த மக்களுக்காக களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த பொருட்களே களவாடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஹபரணைப் பொலீசார் மேற்கொண்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக