30 ஆகஸ்ட், 2009

தமிழர்களின் பிரச்சினையை தீர்ப்பதில் பிரித்தானியா அக்கறை கொண்டுள்ளது-

ஜனாதிபதியிடம் லியம்
பொக்ஸ் தெரிவிப்பு
-

தமிழ் மக்களின் அபிலாஷைகள்



நிறைவேற்றப்பட்டு அவர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டுமென்பதில் பிரித்தானிய அரசு மிகுந்த அக்கறையுடன் செயற்படுவதாகவும் இது தொடர்பில் தான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வுடன் நேற்று முன்தினம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் இலங்கை வந்துள்ள பிரிட்டிஷ் கன்ஸர்வேட்டிவ் கட்சி பாராளுமன்ற உறுப்பினரும் நிழல் வெளிவிவகார அமைச்சருமான லியம் பொக்ஸ் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா சம்பந்தனை நேற்றுக் கொழும்பில் சந்தித்து பேசிய போதே லியம் பொக்ஸ் இதனைத் தெரிவித்தார்.

தமிழ் மக்களின் தனித்துவம் பேணப்பட்டு அவர்களது உரிமைகள் அனைத்தும் வழங்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். வவுனியா முகாம்களிலுள்ள மக்கள் தமது சொந்த இடங்களில் துரிதமாக மீள் குடியேற்றப்படுவதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் செய்ய வேண்டும். இதற்குத் தேவையான முழு ஒத்துழைப்பையும் பிரிட்டிஷ் அரசின் மூலம் செய்து தர தாம் தயாராக இருப்பதாக ஜனாதிபதியிடம் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கைத் தமிழ் மக்கள் தொடர்பில் அவர்களது அபிலாஷைகள் நிறைவேற்றப்படுவது குறித்தும் தமது கன்சவேட்டி கட்சி எப்போதும் அக்கறையுடன் செயற்படுவதாகத் தெரிவித்த லியம் பொக்ஸ், தமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் இந்தப் பணிகளை சிறப்பாகச் செய்து முடிக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருமென கூறினார். தமிழ் மக்களின் இன்றைய அச்சம் தொடர்பாகவும் வவுனியா அகதி முகாம்களிலுள்ள தமிழ் மக்களை விடுவித்து அவர்களை சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தி கௌரவமாக வாழக் கூடிய ஒரு சூழ்நிலை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை இரா. சம்பந்தன் இந்தச் சந்திப்பின் போது வலியுறுத்தியிருந்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக