30 ஆகஸ்ட், 2009

இளைஞர், யுவதிகளுக்கு வர்த்தக சித்திர வடிவமைப்புப் பயிற்சி : வ.மா. கிராம அபி. திணைக்களம் ஏற்பாடு
வடமாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களம் வவுனியாவில் உள்ள இளைஞர் யுவதிகளுக்கு வடக்கின் வசந்தம் திட்டத்தின்கீழ் 18 லட்ச ரூபா செலவில் வர்த்தக சித்திரம் மற்றும் வடிவமைப்புத் துறையில் பயிற்சியளித்து வருகின்றது.

அரச திணைக்களத்தினால் இலங்கையில் முதன்முறையாக இந்தப் பயிற்சி நெறி வவுனியாவிலேயே ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக இதன் ஆரம்ப வைபவத்தில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய வடமாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜே.ஜே.சி.பெலிசியன் தெரிவித்தார்.

வவுனியா மாவட்ட மகளிர் அபிவிருத்தி நிலையத்தில் நடத்தப்படுகின்ற இந்தப் பயிற்சி நெறிக்கு 25 இளைஞர் யுவதிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

கணினி அறிவு, வர்ணமிடல் முறைகள், அலங்காரப் பொருள் ஆக்கம், ஸ்கிரீன் பிரிண்டிங், றப்பர் சீல் தயாரித்தல், விளம்பரப் பலகைகள், பதாதைகள் செய்தல், பிளாஸ்டிக் அடையாள அட்டைகள் செய்தல், மெடல்கள், கேடயங்கள் செய்தல், என்கிறேவிங், எச்சிங், எம்போசிங், முலாமிடல், மக் பிரிண்ட், பொயிலிங் மற்றும் தச்சுவேலை, வெல்டிங், வயரிங், எம்புறோடிங், டிஜிட்டல் போன்ற விடயங்களில் அடிப்படை அறிவுக்கான பயிற்சி என்பன இதில் பாடங்களாக உள்ளடக்கப்பட்டிருப்பதாக இதன் பொறுப்பாசிரியர் எஸ்.எஸ்.ஜசோதரன் தெரிவித்துள்ளார்.

இந்தப் பயிற்சி நெறி ஆறு மாதங்களுக்கு நடைபெறும் என்றும் பயிற்சியின் முடிவில் மாணவர்களுக்குச் சான்றிதழ் ஒன்று வழங்கப்படும் என்றும், வடமாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் பெலிசியன் தெரிவித்துள்ளார்.

மேற்கத்தைய நாடுகளில் மேற்கொள்ளப்படுகின்ற வழிமுறைகளைப் பின்பற்றியதாக விசேட முறையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் பயிற்சி நெறி ஆறுமாதங்களுக்கு முழுநேர வகுப்பாக நடத்தப்படும் என்றும், பயிற்சியின் முடிவில் மாணவர்கள் 15க்கும் மேற்பட்ட துறைசார்ந்த சுயதொழில் வாய்ப்புகளுக்கான திறமையையும், அறிவையும் பெற்றிருப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் வவுனியா மாவட்ட அதிகாரியான அ.அருற்வேள்செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்தப் பயிற்சி நெறியின் ஆரம்ப வைபவத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு வவுனியா உதவி மாவட்டச் செயலாளர் எஸ்.வசந்தகுமார் கருத்துரை வழங்கினார்.

அவர், "இளைஞர் யுவதிகளுக்கு சுயதொழில் வாய்ப்பினை ஏற்படுத்தித் தருவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள இந்தப் பயிற்சி நெறியின் மூலம் மாணவர்கள் சிறந்த பலன்களைப் பெற்று வாழ்க்கையில் முன்னெற முடியும் என்பதில் சந்தேகமில்லை" எனத் தெரிவித்தார்.

இந்த வைபவத்தில் கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் வீ.குமாரசிங்கமும் கலந்து கொண்டு உரையாற்றினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக