20 மே, 2011

நோர்வேயில் நெடியவன் ஐரோப்பிய பயங்கரவாத சட்டத்தின் கீழ்கைது

நோர்வேயில் தமிழீழ விடுதலைப் புலிகளின் புதிய தலைவராக செயற்பட்டு வந்த நெடியவன் கைது செய்யபட்டு பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் நீதிமன்றில் நிறுத்தபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹொலன்ட் நாட்டு சர்வதேச பொலிசாரால் நெடியவனின் வீடு சுற்றி வளைக்கபட்ட போதே நெடியவன் கைது செய்பட்டதுடன் அவர் உடனடியாக நோர்வே தலைநகரம் ஒஸ்லோவுக்கு பொலிஸ் பாதுகாப்புடன் கொண்டுவரபட்டு நீதிமன்றில் நிறுத்தப்பட்டார்.

இவர் ஐரோப்பிய பயங்கரவாத சட்டப்படியான வழக்கை எதிர் நோக்கி உள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை மீனவர்கள் கைது

இந்திய கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் 10 பேரை இந்திய கடலோரப் பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.

அவர்களிடமிருந்து 2 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. விசாரணைக்குப் பிறகு இவர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

சர்வதேச அழுத்தங்களிலிருந்து தப்பிப்பதற்கு இலங்கைக்கு இந்தியா ஆலோசனை

போர்க் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச அழுத்தங்களிலிருந்து தப்பிக்கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் உடனடியாக உள்ளக நடவடிக்கைகளை மேற்கொள்வதே ஒரே வழி என்று இலங்கைக்கு இந்தியா ஆலோசனை கூறியுள்ளது. புதுடெல்லி அரசாங்க வட்டாரங்களை மேற்கோள்காட்டி ""இந்து'' நாளேடு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

கடந்த செவ்வாயன்று புதுடில்லியில் இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் இராஜதந்திர உயர் மட்டங்களுடன் இலங்கை வெளிவிவகார அமைச்சின் ஜி.எல்.பீரிஸ் நடத்திய பேச்சுக்களின் போதே இந்தியாவின் இந்த ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

ஐ.நா வின் அறிக்கையில் இலங்கை மீது முன்வைக்கப்பட்டுள்ள போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இதன் போது விரிவாக ஆராயப்பட்டது.

நாம் அவர்களுக்கு கூறியுள்ள செய்தி உள்ளக ரீதியான நடவடிக்கைகளை எடுங்கள் என்பதே. அதற்கு இந்தியா உதவும். போர் முடிவுக்கு வந்து இரண்டு ஆண்டுகளாகின்ற நிலையில் அரசியல் நல்லிணக்கம் உள்ளிட்ட பல கவலைகள் இந்தியாவுக்கு உள்ளன.

அவர்கள் உள்ளக ரீதியாக நடவடிக்கைகளை எடுக்கத் தவறினால் வேறு இடங்களிலிருந்து அழுத்தங்கள் வரும் என்று இந்திய அரசாங்க வட்டாரம் ஒன்று கூறியுள்ளது. அரசியல் ரீதியான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதை துரிதப்படுத்துமாறு இந்திய தலைவர்கள் இலங்கையிடம் கேட்டுள்ளனர்.

13வது திருத்தத்தின் அடிப்படையிலான அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு ஒன்றை இந்தியா வலியுறுத்தியுள்ளது. அத்துடன் போரின் பின்னர் காணாமல் போனவர்களின் பட்டியல் ஒன்றை தயாரிக்கும் படியும், அவர்களின் மரணத்தை உறுதிப்படுத்தும் சான்றிதழ்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் இலங்கைக்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளது.

அத்துடன் உயர் பாதுகாப்பு வலயங்கள் நீக்கி, அவசரக்கால சட்டத்தையும் விலக்கிக்கொள்ளுமாறும் இந்தியா வலியுறுத்தியுள்ளது என்றும் இந்து நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

இரு அமெரிக்கப் பிரஜைகள் விமானநிலையத்தில் கைது

அமெரிக்காவுக்கு செல்லவிருந்த விமானத்தின் மூலம் துப்பாக்கியொன்றை கொண்டு செல்ல முயற்சித்த இரு அமெரிக்கர்களை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய பொலிஸார் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு கைது செய்துள்ளனர்.

பிஸ்டல் போன்ற துப்பாக்கியொன்றை பாகங்களாக பிரித்து கொண்டு செல்ல முயற்சித்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாங்கள் அமெரிக்க இராணுவத்தை சேர்ந்தவர்கள் எனவும் விடுமுறையை கழிக்க இலங்கை வந்ததாகவும் அவர்கள் தெரிவித்ததாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறித்த பொருள் ஸ்கேனர் இயந்திரத்தில் தெரிந்தவுடனேயே இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் மேலதிக விசாரணைகளுக்காகக் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

வெள்ளைக் கொடி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு எதிரான வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பிலான வழக்கை கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் இன்று மீண்டும் ஒத்திவைத்துள்ளது.

வழக்கு விசாரணை இன்று இடம்பெற்றபோது முன்னாள் இராணுவத் தளபதியின் உடல்நிலை தொடர்பிலான மருத்துவ அறிக்கையொன்றை சிறைச்சாலை அதிகாரிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.

அந்த அறிக்கையில் சரத் பொன்சேகாவின் உடல் நிலை இதுவரை தேறாமையினால் அவருக்கு இரண்டு வாரங்கள் ஓய்வு தேவை என பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இதற்கமைய வழக்கை இம்மாதம் 23 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதற்கு நீதிபதிகள் தீர்மானித்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகள் சிலர் ஆர்ப்பாட்டம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்பட்ட பொது மன்னிப்பின் கீழ் தாம் விடுதலை செய்யப்படாததை ஆட்சேபித்து கைதிகள் சிலர் கூரை மீது ஏறி எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆயுள் கைதிகள் ஏழு பேரே இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் வீ.ஆர்.டி.சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

19 மே, 2011

தீவிர சிகிச்சை பிரிவில் ரஜினிகாந்த்

சுவாசத்தை மேம்படுத்துவதற்காக நடிகர் ரஜினிகாந்த் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு உள்ளதாக டாக்டர்கள் குழு தெரிவித்துள்ளது.

சுவாச கோளாறு மற்றும் குடல்நோய் காரணமாக நடிகர் ரஜினிகாந்த் கடந்த 13ஆம் திகதி சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிரமாக சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில், 18.05.2011 அன்று இரவு அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

அவரது உடல்நிலை குறித்து ராமச்சந்திரா மருத்துவமனை டாக்டர்கள் குழு 18.05.2011 அன்று நள்ளிரவு ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

நடிகர் ரஜினிகாந்த் சுவாச கோளாறு மற்றும் குடல்நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக கடந்த 13ந் தேதி போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுவாசத்தை மேம்படுத்துவதற்காக அவர் தீவிர சிகிச்சைப்பிரிவுக்கு மாற்றப்பட்டு இருக்கிறார்.

அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை மருத்துவ குழுவினர் மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். சிகிச்சையின் காரணமாக அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

போர்க் குற்ற விசாரணைக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு ஆதரவை வழங்க வேண்டும்: ச.ம.ச

இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்களுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபை சுயாதீன பொறிமுறை ஒன்றை ஏற்படுத்த வேண்டும். அதற்கு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்தையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை கோரியுள்ளது.

போர் முடிவடைந்த 10 நாட்களில் அதாவது 2009 ஆம் ஆண்டு மே 27 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகம், பிரேரணை ஒன்றை நிறைவேற்றியது. அதில் இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் அமைதி குறித்து வலியுறுத்தப்பட்டது.

எனினும் இரண்டு தரப்பாலும் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் அந்த பிரேரணையில் எவ்வித கருத்துக்களும் முன்வைக்கப்படவில்லை என்று மன்னிப்புச் சபை சுட்டிக் காட்டியுள்ளது.

தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு இலங்கையின் இறுதிப் போரின் போது போர்க் குற்றங்கள் இடம்பெற்றிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இதற்கு எதிரான சர்வதேச விசாரணைக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகம் தனது ஆதரவை வழங்க வேண்டும் என்று சர்வதேச மன்னிப்பு சபை கோரியுள்ளது.

2009 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தினால் பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட படை நடவடிக்கையின்போது சுமார் 3 இலட்சம் மக்கள் முற்றுகையிடப்பட்டனர்.

இதன்போது நடாத்தப்பட்ட தாக்குதலில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். பலர் காயங்களுக்கு உள்ளாகினர்.

இந்த நிலையில் பான் கீ மூனின் நிபுணர் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் போர்க் குற்றம் நிகழ்ந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் சர்வதேச விசாரணை பொறிமுறையை ஏற்படுத்த வேண்டும் என்று பான் கீ மூனின் நிபுணர் குழு வலியுறுத்தியுள்ளது.

எனவே பான் கீ மூன், இலங்கையின் போர்க் குற்றங்களை விசாரணை செய்ய சர்வதேச பொறிமுறை ஒன்றை ஏற்படுத்த வேண்டும்.அத்துடன் அதற்காக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள்ஆணைக்குழுவின் ஆதரவையும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

நிரந்தரமாக மீளக்குடியேற்றம் செய்யப்படாத நிலையில் 117,888பேர்: ஐ.நா.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இன்னும் 117,888 பேர் நிரந்தரமாக குடியேற்றப்படாமலுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

யுத்தத்தின்போது இடம்பெயர்ந்த சுமார் 300,000 பேர் செட்டிகுளம், மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்ததாகவும் இவர்களில் 4981 குடும்பங்களைச் சேர்ந்த 16401 பேர் செட்டிகுளம் முகாமில் தற்போது இருப்பதாகவும் ஐ.நா. அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கில் மீளக்குடியேற்றப்பட்ட மக்கள் தமக்கு முறையான குடியிருப்புகள் இல்லையெனவும் நண்பர்கள், உறவினர்களின் வீடுகளில் தங்கியிருப்பதாக கூறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியாவைச் சேர்ந்த 18589 பேரும் மன்னாரைச் சேர்ந்த 4928 பேரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 94371 பேரும் இன்னும் நிரந்தரமாக மீளக்குடியேற்றப்படாமல் உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

இந்தியாவின் உதவியுடனேயே பிரபாகரனை தோற்கடித்தோம்

இந்தியாவின் உதவியுடனேயே பிரபாகரனை தோல்வியடையச் செய்தோம். அதேபோன்று ஐ.நா.வின் பக்கச் சார்பான அறிக்கையையும் இந்தியாவின் ஒத்துழைப்புடன் தோல்வியடையச் செய்வோம் என்று அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

இலங்கை இந்திய கூட்டறிக்கை இன்றைய காலத்தின் தேவையாகுமென்றும் அமைச்சர் கூறினார். இது தொடர்பாக தேசிய மொழிகள் மற்றும் இன நல்லுறவு தொடர்பான அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மேலும் தெளிவுபடுத்துகையில்,

இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி 13 ஆவது திருத்தத்தை முன்னெடுத்து தமிழ் மக்களுக்கு அதிகாரப் பரவலாக்கலை முன்னெடுப்பதை உறுதி செய்து கூட்டறிக்கை விடப்பட்டுள்ளமை இன்றைய காலத்தின் தேவையாகும். ஐ.நா. அறிக்கை எமது நாட்டுக்கு எதிராக பக்கச் சார்பாக தயாரிக்கப்பட்டது.

உலகில் எமது நாட்டை தனிமைப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டது. எனவே இதற்கு பலம் மிக்க எமது அயல்நாடான இந்தியாவின் உதவியை நாடுவதில் எதுவிதமான தவறும் இல்லை. அத்தோடு அவசர காலச் சட்டம் நீக்கம் மனித உரிமைகள் தொடர்பாக விசாரணைகள் நடாத்தப்பட வேண்டுமென இந்தியா வலியுறுத்தியுள்ளமை போன்றவை தொடர்பில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறான நடவடிக்கைகள் இந்தியாவிற்கு அடிபணிவதாக கருதப்படாது. ஏனெனில் பிரபாகரனை தோல்வியடையச் செய்வதற்கு இந்தியாவே எமக்கு உதவியது. எமது எந்தப் பிரச்சினைக்கும் வேறெந்த நாடுகளைவிட எமது அயல் நாடான இந்தியாவின் உதவியே அவசியமானதாகும். இலங்கையும் இந்தியாவும் இணக்கப்பாட்டு ரீதியில் பிரிக்க முடியாத உறவுகளைக் கொண்டுள்ளது.

அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளால் 13 ஆவது திருத்தத்தை முன்னெடுப்பதை தடுக்க முடியாது. 18 ஆவது திருத்தத்திற்கு எனக்குள் விருப்பமில்லை. ஆனால் அரசாங்கத்திற்குள் உள்ளேன். எனவே ஆதரவாக வாக்களித்தேன் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...