1 ஜூன், 2010

தமிழர் பிரச்சினையில் அரசின் நடவடிக்கை திருப்தியளிப்பதாக இல்லை:தமிழக முதல்வர்

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு இதுவரை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் போதிய மன நிறைவை அளிப்பதாக இல்லை. எனவே, இனியாவது ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கைத் தமிழர்களுக்கு உரிய நிவாரணம் போய்ச்சேர நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தப்போவதாகத் தெரிவித்த அவர், தமிழகத்தில் வசிக்கும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்குவது குறித்து மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டு மெனவும் கேட்டுக்கொண்டார்.

தி.மு.கவின் உயர்நிலை கூட்டம் நேற்று முன்தினம் மாலை அண்ணா அறிவாலயத்திலுள்ள கூட்ட அரங்கில் தி.மு.க. தலைவர் முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் கூடியது. இந்தக் கூட்டத்தில் இரண்டு மணி நேரம் நடைபெற்ற விவாதத்தில் எட்டுத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் இலங்கைத் தொடர்பாக நிறைவேற்றப்பட்ட முக்கியத் தீர்மானங்கள் வருமாறு:

இலங்கையில் யுத்தம் முடிந்து சுமார் ஓராண்டுக்கு மேலாகியும், இலங்கையில் தேர்தல் நடைபெற்று புதிய அரசு அமைத்த பின்னரும் கூட போரினால் பாதிக்கப்பட்ட சுமார் இரண்டரை லட்சம் தமிழ் மக்களில் பெரும்பாலானோர் அவர்களது சொந்தப் பகுதிகளுக்குத் திரும்பியும், தங்கள் சொந்த வீடுகளில் வாழ முடியாத நிலை தொடர்ந்தும் நீடித்து வருகிறது.

ஏதாவது ஒரு காரணத்திற்காக தடுக்கப்பட்டு இன்னமும் முகாம்களில் வாழக்கூடிய சோகமான நிலைமை தொடர்ந்து கொண்டிருப்பது நம் அனைவருக்கும் மிகுந்த வேதனையையும் கவலையையும் அளிக்கக்கூடியதாக இருக்கின்றது.

இன்னமும் தற்காலிக முகாம்களில் உள்ள தமிழர்கள் உடனடியாக அங்கிருந்து விடுவிக்கப்பட்டு அவர்கள் தத்தமது சொந்த வீடுகளுக்குச் சென்று வாழ்வதற்கான வழிவகைகள் ஏற்படுத்தப்பட வேண்டும். சொந்தப் பகுதிகளுக்குச் சென்று இன்னமும் தவித்துக் கொண்டிருக்கும் தமிழர்களுக்கு உடனடியாக அவர்களுக்குத் தேவையான வாழ்வாதக்ஷிரங்கள் செய்து கொடுக்கப்பட வேண்டும்.

சர்வதேச பரிமாணம் அடைந்துள்ள இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகாணப்பட வேண்டிய தேவை பற்றி இலங்கை அரசுக்கு பல்வேறு நிலைகளில் இந்திய அரசு நிர்ப்பந்தம் செலுத்தி வருகிறது. இலங்கைத் தமிழர் நிவாரணம் மற்றும் மறுவாழ்வுக்காக மத்திய அரசு 500 கோடி ரூபா ஒதுக்கீடு செய்துள்ளது. எனினும் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ள 500 கோடி ரூபாவை இலங்கைத் தமிழர்களுக்காக முறையாக பயன்படுத்தத்தக்க திட்ட வரைவுகளை இலங்கை அரசு செய்திட இன்னமும் முன்வரவில்லை என்பது வேதனையிலும், வேதனையான செய்தி.

எனவே இந்திய அரசு மனமுவந்து இலங்கைத் தமிழர்களுக்காக ஒதுக்கீடு செய்துள்ள 500 கோடி ரூபாவை உடனடியாக இலங்கைத் தமிழர்களுக்காக பயன்படுத்திட இலங்கை அரசாங்கத்தை இந்திய மத்திய அரசு நிர்ப்பந்திக்க வேண்டும் என்று இந்த உயர் நிலை செயற்றிட்ட குழு வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

தமிழகத்தில் உள்ள முகாம்களில் தங்கியிருக்கும் 73,572 இலங்கைத் தமிழர்களை இந்தியக் குடியுரிமைச் சட்டம் மற்றும் தொடர்புடைய ஏனைய சட்டங்களின் கீழ் மீள்குடியமர்த்தும் முயற்சியாக மத்திய அரசோடு கலந்து பேசி அவர்கள் அனைவரும் தமிழகத்திலே நிரந்தரமாகக் குடியிருக்க வழிவகை செய்து தர வேண்டுமென்று தமிழக அரசின் சார்பில் தீர்மானித்து மத்திய அரசை ஏற்கனவே கேட்டுக் கொண்டும் இதுவரையில் மத்திய அரசு அது குறித்து தீவிரமாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதை வருத்தத்தோடு சுட்டிக் காட்டுவதோடு இனியாவது இந்தப் பிரச்சினையில் ஆக்கபூர்வமான அணுகுமுறையை கையாண்டு துயருறும் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைக்கு ஒரு தீர்வு காண வேண்டுமென்று மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

மலேசியாவில் தமிழ் அகதிகள்

இலங்கையிலிருந்து வெளியேறி மலேசியாவுக்கு அகதிகளாகச் சென்ற பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட 75 இலங்கைத் தமிழர்கள் மலேஷிய அரசினால் சிறைப்பிடிக்கப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மலேஷியாவில் சிறைப்பட்டுள்ள 75 இலங்கை தமிழர்களை காப்பாற்றிட கருணை உள்ளத்தோடு முன்வரவேண்டுமென்று மத்திய அரசை கேட்டுக் கொள்கிறது என்று தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

இக் கூட்டம் முடிந்த பின் நிருபர்களுக்கு முதல்வர் கருணாநிதி அளித்த பேட்டி கேள்வி:இலங்கை தமிழர் பிரச்சினை குறித்த தீர்மானத்தில் இனியாவது ஆக்கபூர்வமாக நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டுமென்று சொல்லியிருக்கிறீர்கள். அப்படியென்றால் இதுவரை அவர்கள் செய்ததில் உங்களுக்கு திருப்தி இல்லை என்று சொல்லலாமா? பதில்: திருப்தியே இல்லை என்று சொல்ல முடியாது.போதுமான அளவுக்கு மனநிறைவு இல்லை. கேள்வி: இலங்கை பிரச்சினையில் மத்திய அரசு இன்னும் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? பதில்: அனுப்பப்பட்ட பொருட்கள் இன்னும் சரிவர அவர்களுக்கு விநியோகிக்கப்படவில்லை என்று புகார் இருக்கிறது. அது உண்மையாக இருந்தால் அதை மத்திய அரசு உடனடியாக சரி செய்ய வேண்டுமென்பது எங்களுடைய வேண்டுகோள்.
மேலும் இங்கே தொடர்க...

மீள் குடியேற்ற அமைச்சர் யாழ். விஜயம்


மீள் குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்னான்டோ அடுத்தவாரம் யாழ்ப்பணம் விஜயம் செய்யவுள்ளார்.

யாழ்-மாநகரசபை உறுப்பினர் எம். முபீன் விடுத்த அழைப்பை ஏற்றே அவர் அங்கு செல்லவுள்ளார்.

அண்மையில் யாழ்ப்பணத்தில் மீள் குடியேறிய மக்கள் தத்தமது அன்றாடப் பணிகளில் படிப்படியாக ஈடுபட ஆர்வம் காட்டி வருவதையடுத்து, இவரது விஜயம் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

எம் மீதான குற்றச்சாட்டுக்கு சர்வதேச விசாரணை அவசியமில்லை : கெஹெலிய


இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை செய்வதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுத்துள்ளதால் சர்வதேச விசாரணை ஒன்றை நடத்துவதற்கான அவசரம் எதுவும் ஏற்பட்டுவிடவில்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

யுத்தத்தின் பின்னரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை செய்ய அரசாங்கம் நல்லிணக்க ஆணைக்குழு ஒன்றை நியமித்துள்ளது.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உமைகள் பேரவைக் கூட்டத்தில் உரையாற்றிய ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, இலங்கை தொடர்பாக சர்வதேச விசாரணை அவசியம் என்று வலியுறுத்தியதை அடுத்தே ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை ஜனநாயக ரீதியில் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஒரு இறைமையுள்ள நாடு. அதன் உள்விவகாரங்கள் தொடர்பான தீர்மானங்களை எடுக்கும் உரிமை அதற்கு இருக்கின்றது.

நாங்கள் எடுத்துள்ள நடவடிக்கைக்கு சாதகமான கருத்துக்களை வேறு நாடுகளும் தெரிவித்துள்ளன.

தவறுகளை நாங்களாகவே திருத்திக் கொள்வதில் தற்போது அதிக அக்கறை காண்பித்து வருகின்றோம்" என்றார்
மேலும் இங்கே தொடர்க...

31 மே, 2010

இலங்கை திரைப்பட விழாவில் பங்கேற்க நமீதா மறுப்பு


இலங்கையில் நடைபெறும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் பங்கேற்க மாட்டேன் என்று நடிகை நமீதா கூறியுள்ளார்.

அதன் தொடக்க விழாவில் சிறப்பு நடனமாட அவருக்கு விழாக்குழு சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இதுகுறித்து நமீதா கூறியிருப்பதாவது:

இலங்கை திரைப்பட விழாவுக்காக சில தினங்களுக்கு முன் என்னிடம் தொடர்பு கொண்டார்கள். விழாவில் நடனமாடுமாறு கேட்டுக் கொண்டனர். அதற்காக பெரும் தொகை தருவதாக கூறினர்.

இலங்கையில் நடைபெறும் அந்த விழா தொடர்பாக தமிழ் திரையுலகில் எதிர்ப்பு இருக்கும்போது என்னால் கலந்துகொள்ள முடியாது என்று தெரிவித்துவிட்டேன்.

திரையுலகில் எனக்கு வாழ்வு கொடுத்தது தமிழர்கள் தான். எனது புகழுக்கு காரணமும் அவர்களே. எனவே, என்னிடம் வேறு யாரும் அறிவுரை கூறும் முன்னர், நானே அந்த விழாவில் பங்குபெற முடியாது என்று பதில் கூறிவிட்டேன்.

வாழ வைத்த தமிழர்களுக்கு துரோகம் செய்ய விரும்பவில்லை.

இவ்வாறு நமீதா கூறியுள்ளார்.

இலங்கையில் ஏராளமான அப்பாவித் தமிழர்களை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றது மற்றும் போர்க்குற்றம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று சர்வதேச மன்னிப்பு சபையும் ஐநா சபையும் கோரிக்கை விடுத்துள்ளன.

இதனிடையே இலங்கை ராணுவத்தின் அத்துமீறலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்நாட்டில் நடைபெறும் திரைப்பட விழாவில் பங்கேற்க மாட்டோம் என்று தமிழ் திரையுலகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

மேலும், சர்வதேச திரைப்பட விழாவை இலங்கையில் நடத்தக் கூடாது என்றும் அந்த விழாவில் பங்கேற்கக் கூடாது என்றும் அதன் விளம்பரத் தூதரான நடிகர் அமிதாப் பச்சனுக்கு தமிழ் திரையுலகம் சார்பில் ஏற்கெனவே கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

30 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு அடுத்த ஆண்டு நடக்கிறது

.



இலங்கையில் கடந்த 1981-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் பின்னர் வடக்கு மற்றும் மேற்கு மாகாணங்களில் ராணு வத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே உள்நாட்டு போர் நடைபெற்று வந்தது.

எனவே, அங்கு 30 ஆண்டுகளாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. தற்போது போர் முடிவுக்கு வந்து விட்டது.

எனவே, அடுத்த ஆண்டு (2011) மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த இலங்கை அரசு முடிவெடுத்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் நடந்த பாராளுமன்ற தேர்தலின் போது வடக்கு மாகாணத்தில் 25 சதவீதத்துக்கும் குறைவாக வாக்குகள் பதிவாகின.

இதன் மூலம் பெரும் பாலான மக்கள் அங்கிருந்து வேறு பகுதிக்கு குடிபெயர்ந்து இருக்கலாம் என இலங்கை அரசு கருதுகிறது. தற்போது கணக்கெடுப்பு நடத்துவதன் மூலம் இலங்கையின் மக்கள் தொகை 2 கோடியே 10 லட்சமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

கிளிநொச்சியில் சடலங்கள் மீட்பு : இன்று மீண்டும் தேடுதல்

கிளிநொச்சி கணேசபுரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சடலங்களைத் தொடர்ந்து, மேலும் சடலங்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தில், இன்று அந்தச் சுற்று வட்டத்தில் மீண்டும் தேடுதல் நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கிளிநொச்சி கணேசபுரத்தில் மீளக் குடியமர்ந்த மக்கள், நேற்று முன்தினம் மலசலக் குழியைத் துப்புரவு செய்த வேளை, அதற்குள் இருந்து பொலித்தீன் பைகளில் சுற்றிய நிலையில் சடலங்கள் கிடப்பதைக் கண்டனர்.

உடனே அவர்கள் பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், அவ்விடத்தில் இருந்து நேற்று முன்தினம் 3 சடலங்களை மீட்டனர். அதனைத் தொடர்ந்து நேற்று மேலும் 3 சடலங்கள் மீட்கப்பட்டன.

அங்கு வந்த கிளிநொச்சி மாவட்ட நீதவான் சடலங்களைப் பார்வையிட்டு, மேலும் அவ்விடத்தில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

இதற்காக அவ்விடத்திற்கு நிலம் தோண்டும் கனரக வாகனங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இன்று நீதவான் முன்னிலையில் நிலத்தை மேலும் தோண்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்படிகிறது.

மீட்கப்பட்ட சடலங்கள் 5 அல்லது 6 மாத காலத்திற்கு முன் கொலை செய்யப்பட்டு போடப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

அரசின் நடவடிக்கை வெளிப்படையாக அமைய வேண்டும் : ததேகூ

தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று நாட்டின் மூன்றாவது அரசியல் சக்தியாகவும் பரிணமித்துள்ளது. இந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் புறக்கணித்து விட்டு தீர்வுகள் முன்வைக்கப்படுமாயின் அது நியாயத் தன்மையுடையதாக அமையாது என்று கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

அரசாங்கத்தினால் எடுக்கப்படுகின்ற தன்னிச்சையான தீர்மானங்களும் அது சார்ந்த திட்ட வரைபுகளும் வெளிப்படைத் தன்மை கொண்டதாக அமைய வேண்டும் என்றும் அவர் சொன்னார்.

புதிய நாடாளுமன்றம் அமைந்ததன் பின்னர் தமிழர் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காணும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்க் கட்சிகளுடன் பேச்சு நடத்தப்படும் என்று அரசாங்கம் அறிவித்திருந்த போதிலும், அது இதுவரையில் நடைபெறாதிருப்பது குறித்து கருத்து வெளியிடுகையிலேயே செல்வம் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

"பல வருட காலமாக எதிர்நோக்கப்பட்டும் அரசாங்கங்களினால் இழுத்தடிக்கப்பட்டும் வருகின்ற தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு எனும் விடயம் ஒளிவு மறைவு கொண்டதாக அமையக் கூடாது என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றது.

சர்வதேசத்தின் மத்தியஸ்தத்துடன் முன்வைக்கப்படுகின்ற நியாயமானதும் ஏற்றுக் கொள்ளக்கூடியதுமான தீர்வுகளைத் தமிழ் மக்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வரவேற்கும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரை இந்நாட்டில் மூன்றாவது அரசியல் சக்தியாகவும் மக்கள் செல்வாக்குப் பெற்ற அமைப்பாகவும் அது திகழ்கின்றது. இதன் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தமது பிரதிநிதித்துவக் கட்சியாக தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இவ்வாறானதோர் நிலையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை அணுகும் விடயத்தில் அரசாங்கம் முதலில் எம்மை அழைத்து எமது தரப்பு ஆலோசனைகளையும் உள்வாங்க வேண்டிய தேவை இருக்கின்றது.

எந்தச் சந்தர்ப்பத்திலும் எம்மை ஒதுக்கித் தள்ளிவிடவோ அல்லது புறக்கணித்து விடவோ அரசாங்கம் முயற்சிக்கக் கூடாது.

இவ்வாறான புறக்கணிப்புகள், ஓரங்கட்டுதல்கள் ஆகியவையே தேசிய இனப் பிரச்சினை உருவாவதற்கும் அது இந்த அளவில் உச்சம் பெற்றிருப்பதற்கும் காரணமாக அமைந்துள்ளன. அரசாங்கத்திற்கு இவ்விடயத்தில் கடமையும் பொறுப்பும் இருக்க வேண்டும்.

தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடயத்தில் 13ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் செல்லவும் தான் தயாராக இருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த காலங்களில் பகிரங்கமாக கூறி வந்தார். இதே நிலைப்பாட்டை இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கும் தெரிவித்து வந்தார்.

ஆனால் இன்று அந்த அறிவிப்புகளும் நிலைப்பாடுகளும் தடம்புரண்ட நிலையில் காணப்படுவதாகவே இருக்கின்றது.

உறுதி மொழிகளும் நிலைப்பாடுகளும் தீர்வாக அமைந்து விடப்போவதில்லை என்பதையும் அதனை நடைமுறையில் சாத்தியப்படுத்துவதன் ஊடாகவே தீர்வுகளுக்கான வழி பிறக்கும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

அரசாங்கம் மனசாட்சியுடன் நடந்து கொள்ளவில்லை என்பது அதன் தற்கால நடவடிக்கைகள் எடுத்துக் காட்டி வருகின்றன.

இதுவரை காலமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உத்தியோகபூர்வமாக அழைப்பெதனையும் அரசாங்கம் விடுவிக்கவில்லை. அமைச்சர்கள் கூறுவதாகவே ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன.

அது மட்டுல்லாது தீர்வுத் திட்டம் தொடர்பிலான வரைபொன்றை அரசாங்கம் தயாரித்திருப்பதாகவும் அதனை இந்தியாவிடம் கையளிக்கவிருப்பதாகவும் கூறப்படுகின்றது. இதனை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தியாவின் தலையீடுகள், அழுத்தங்களை முழுமையாக ஆதரிக்கின்ற நாம் எமது மக்கள் தொடர்பிலான விடயங்களில் எமது ஆலோசனைகளும் உள்வாங்கப்பட வேண்டும் என்பதை விரும்புகிறோம்.

ஆகவேதான் எம்மை புறக்கணித்துவிட்டு எட்டப்படுகின்ற தீர்மானங்கள் நிறைவுடைத் தன்மை கொண்டதாக அமையாது என்பதையும் ஆரம்பத்திலேயே கூறி வைக்க விரும்புகிறோம்.

எமக்கான தீர்வுகள் வழங்கப்பட வேண்டுமே தவிர திணிக்கப்படுவதை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது. அதற்கு நாம் உடன்படப் போவதுமில்லை" என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

பொன்சேகாவுக்கு முறையான உரிமைகள் வழங்க வேண்டும் இலங்கை மந்திரியிடம் அமெரிக்கா வற்புறுத்தல்


இலங்கை அதிபர் தேர்தலில் மஹிந்தா ராஜபஹ்சா வுக்கு எதிராக ராணுவ தளபதி சரத் பொன்சேகா போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அதைத் தொடர்ந்து இலங்கை அரசுக்கு எதிராக செயல்பட்டதாகவும், அதிபர் ராஜபக்சேவை கொல்ல சதி திட்டம் தீட்டியதாகவும் பொன்சேகா மீது குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் இலங்கை வெளியுறவுத் துறை மந்திரி பெய்ரிஸ் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, பொன்சேகாவுக்கு முறையான உரிமைகள் வழங்க வேண்டும் என்று தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க துணைச் செயலாளர் ராபர்ட் பிளாக் தெரிவித்து உள்ளார்.

இதுபற்றி செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், இலங்கை அரசு போர் குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் பொன்சேகாவுக்கு முறையான உரிமைகளை வழங்கியதாக தெரியவில்லை. இந்த வழக்கில் வெளிப்படையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். அதனால் இலங்கை அரசு இதை மிக முக்கியமானதாக கருதி செயல்பட வேண்டும், என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

சட்டவிரோதப் பயண எச்சரிக்கை

ஆஸ்திரேலிய அரசு வெளியிட்டுள்ள பத்திரிகை அறிவித்தல் ஒன்று
இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு கடல் வழியாய் சட்டவிரோதப் பயணம் செய்வதற்கு எதிராக இலங்கை பத்திரிகைகளில் ஆஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்தல்களை வெளியிட்டு வருகின்றது.

சட்டவிரோதக் குடியேற்றத்துக்கு எதிராக எச்சரிக்கை விடுக்கும் விதமாகவும், மக்களுக்கு இது தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இந்த பத்திரிகை அறிவித்தல்கள் அமைந்துள்ளன.

இலங்கையர்களின் புகலிடக் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படுவதை ஆஸ்திரேலியா இடைநிறுத்தியுள்ளது இந்த அறிவித்தல்களில் விளக்கப்பட்டுள்ளது.

"முறையற்ற விதத்தில் படகு மூலம் ஆஸ்திரேலியாவிற்கு செல்ல முயற்சித்து உயிரைப் பணயம் வைக்க வேண்டாம், மனிதர்களைக் கடத்துபவர்களினால் தப்பான பாதையில் செல்ல வேண்டாம்." என்றும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"பயனற்ற பயணத்திற்காக பணத்தை வீணாக்க வேண்டாம்" என்றும் இந்த அறிவித்தல்களில் ஆஸ்திரேலிய அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

பொருளாதார இழப்பு, உயிரிழப்பு, பிற நாடொன்றில் தடுத்துவைப்பு, பிற நாடொன்றில் நிர்க்கதியாகுதல், நாடு கடத்தப்படுதல் போன்ற நிலைகளை மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் அறிவித்தல்கள் வெளியாகி வருகின்றன.
மேலும் இங்கே தொடர்க...

பெளர்மணி-அமாவாசையில் அதிகரிக்கும் சுறா தாக்குதல்!

பெளர்மணி, அமாவாசை நாட்களில் தான் சுறா மீன்கள் மக்களை அதிகம் தாக்குதவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதிலும் கருப்பு, வெள்ளை நீச்சல் உடைகளில் குளிப்பவர்களையே சுறாக்கள் அதிகம் தாக்குவதும் தெரியவருகிறது.

அமெரிக்காவைப் பொறுத்தவரை குறிப்பாக ஆகஸ்ட் மாதங்களில் தான் சுறா தாக்குதல்கள் அதிகமாக உள்ளதாகவும் ஆய்வு தெரிவிக்கிறது.

அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் உள்ள வோலுசியா பகுதி கடற்கரையில் தான் உலகிலேயே மிக அதிக அளவில் சுறா தாக்குதல்கள் நடக்கின்றன.

இந்தப் பகுதியில் கடந்த 50 ஆண்டுகால சுறா தாக்குதல்களை புளோரிடா பல்கலைக்கழகம் ஆய்வு செய்ததில் இந்த விவரங்கள் தெரியவந்துள்ளன.

1996ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் உலகில் நடந்த சுறா மீன்களின் தாக்குதலில் 5ல் ஒன்று மத்திய புளோரிடாவில் தான் நடந்துள்ளது.

அதிலும் குறிப்பாக பெளர்ணமி மற்றும் அமாவாசை தினங்களில் தான் அதிகளவில் தாக்குதல்கள் நடந்துள்ளன. இந்த நாட்களில் கடலில் அலைகள் அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பெளர்ணமி மற்றும் அமாவாசை தினங்கள் மீன்களின் இனப்பெருக்க நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நாட்களில் சுறாக்கள் உண்ணும் மீன்களின் நடமாட்டத்துக்கும் சுறாக்களின் தாக்குதல்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்றும் தெரிகிறது.

ஆகஸ்ட் மாதத்தில் ஏன் இந்தத் தாக்குதல்கள் அதிகம் நடக்கின்ற என்றால், அமெரிக்காவில் அது கோடை காலம் என்பதால், அந்த மாதத்தில் கடற்கரையில் அதிக மக்கள் கூடுவதே காரணம் என்கிறது ஆய்வு.
மேலும் இங்கே தொடர்க...