4 மே, 2011

ஐ.தே.க.வின் தேசிய அமைப்பாளராக ரவி கருணாநாயக்க எம்.பி. நியமனம்

ஐக்கிய தேசிய கட்சியின் புதிய தேசிய அமைப்பாளராக கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் நேற்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்திலேயே ரவி கருணாநாயக்க எம்.பி. தேசிய அமைப்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் ரவி கருணாநாயக்கவை தேசிய அமைப்பாளராக நியமிப்பதற்கு ரணில் விக்ரமசிங்க யோசனை முன்வைத்துள்ளார்.

இந்நிலையில் இந்த யோசனைக்கு செயற்குழுவில் பெரும்பான்மை கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய தேசிய கட்சியினால் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட புதிய யாப்பின் பிரகாரமே இந்த பதவிக்கு உறுப்பினர் தெரிவு இடம்பெற்றுள்ளது.

தேசிய அமைப்பாளராக தெரிவு செய்யப்பட்ட ரவி கருணாநாயக்க "கேசரி'க்கு கருத்து வெளியிடுகையில் :

மிகவும் முக்கியமான கட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பதவி கட்சியில் எனக்கு கிடைத்துள்ளது. எனவே, கட்சியின ஒற்றுமையை பேணுவதற்கு இந்த பதவியில் இருந்துகொண்டு அர்ப்பணிப்புடன் செயற்படுவேன்.

கட்சியை பல்வேறு மட்டங்களில் பலப்படுத்துவதற்கும் வெற்றியை நோக்கி கொண்டு செல்வதற்குமாக மிகவும் அர்ப்பணிப்புடன் எனது பணிகளை முன்னெடுப்பேன் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக