4 மே, 2011

பின்லேடன் படுகொலையின் எதிரொலி அமெரிக்க-பாக். உறவில் விரிசல் நிலை



அல் கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் சுட்டுக்கொல்லப்பட்டதன் எதிரொலியாக பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவில் சிக்கல் நிலை தோன்றியுள்ளது.

ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட சம்பவத்தில் பாகிஸ்தானுக்கு தொடர்பில்லை என அந்த நாடு கூறிவரும் நிலையில் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற அமெரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் கூட்டுக்குழுக் கூட்டத்தில் உரையாற்றிய அமெரிக்க தூதுவர் மூன்று நாடுகளுக்கும் பங்குள்ளதாக கூறியுள்ளதையடுத்தே இந்நிலை உருவாகியுள்ளது.

இதேவேளை இஸ்லாமாபாத்தில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் பெசாஹுர், கராச்சி துணை தூதரங்களை அமெரிக்கா காலவரையறையின்றி மூடியுள்ளது. இதனையடுத்து விசா உள்ளிட்ட எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படமாட்டாது என பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது. எனினும் பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க பிரஜை ஒருவருக்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள விரிசல் நிலையை தொடர்ந்து அடுத்த மாதம் இஸ்லாமாபாத்துக்கு பயணம் செய்யவிருந்த அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் பயணம் ரத்துச் செய்யப்படும் என கூறப்படுகின்றது. அல் குவைதா தலைவர் பின்லேடன் பாகிஸ்தானிடமிருந்து எந்தவித உதவியும் பெறாமல் அங்கு தஞ்சமடைந்திருக்க முடியாது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே அல் குவைதா தலைவர் ஒசாமா பின்லேடனுக்கு தஞ்சம் அளிக்கவில்லை என நிரூபிக்க முடியுமா என அமெரிக்க செனட் சபை உறுப்பினர் ஒருவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

உலகமே தேடிவந்த ஒருவர் பாகிஸ்தானில் தஞ்சமடைந்திருந்தமை அதிர்ச்சியளிக்கின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அல் குவைதாவின் 20 சிரேஷ்ட தலைவர்களில் குறைந்தது ஆறு பேராவது பாகிஸ்தானில் சுற்றித்திரிகின்றனர். ஒசாமா பின்லேடன் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாபாத்துக்கு அருகில் எவ்வாறு தங்கியிருந்தார் என அந்நாட்டிடம் அமெரிக்க சட்ட நிபுணர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

இது பற்றி அந்நாட்டுக்கு தெரியுமா? தெரியாதா என்று ஊகிக்க விரும்பவில்லை. ஆனால் நிச்சயமாக இந்த கேள்வியை கேட்க விரும்புகின்றோம். இந்த உண்மையை தெரிந்துகொள்ளும் உரிமை அமெரிக்கர்களுக்கு உண்டு. பாகிஸ்தானுக்கு என்ன தெரியும் என்பது பற்றி அறிந்துகொள்ள விரும்புகின்றோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க தீவிரவாத ஒழிப்புக்குழுவின் ஆலோசகர் ஜோன் பிரர்னன் ஒசாமாவுக்கு எந்தவித உ தவியும் அளிக்கவில்லை என பாகிஸ்தான் கூறியிருப்பதை ஏற்க முடியாது என தெரிவித்துள்ளார்.

ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் தஞ்சமடைந்தார் என்பதனை சி.ஐ.ஏ. விசாரித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அபோதாபாத்தில் வசித்து வந்த ஒசாமா பின்லேடன் பெற்ற உதவிகள் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சம்பவ தினம் இடம்பெற்ற தாக்குதலில் ஒசாமா பின்லே டனை கைது செய்ய முடியாமல் போனமையினால்தான் அவர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த வீட்டில் ஒசாமாவுடன் தங்கியிருந்த அவரது மனைவி மனித கேடயமாக செயற்பட்டு அவர்களை பாதுகாக்க முனைந்ததாகவும் இறுதியில் வேறு மார்க்கமின்றி அவரும் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இஸ்லாமிய முறைப்படி மத சடங்குகள் செய்யப்பட்ட பின்னரே பின்லேடனின் உடல் அங்கிருந்து அகற்றப்பட்டதாக அவர் கூறினார். அத்துடன் அல் குவைதா இயக்கத்தை முற்றிலுமாக இல்லாதொழிக்க தற்போது வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பின்லேடனுக்கு அடுத்த நிலையில் இருக்கும் அல் குவைதாவின் இரண்டாம் நிலை தலைவர் அய்மன் அல் சௌஹாரி துடிப்பான ஓர் தலைவர் இல்லையெனவும் அவர் மேலும் கூறியுள்ளார். இதேவேளை ஒசாமா மீதான தாக்குதலை அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா வெள்ளை மாளிகையிலிருந்து விசேட செய்மதி மூலம் நேரடியாக பார்த்துள்ளார். ஜனாதிபதி பராக் ஒபாமா "ஹிலாரி கிளின்டன்' சி.ஐ.ஏ. உயர் அதிகாரிகள் என ஏழு பேர் இந்தக் காட்சியை நேரில் பார்த்துள்ளனர்.

தாக்குதல் ஆரம்பித்தது தொடக்கம் அது முடியும்வரை அதி நவீன செயற்கை கோள் மூலம் இது ஒளிபரப்பப்பட்டுள்ளது. அமெரிக்க கடற்படை வீரர்கள் பின்லேடன் பதுங்கியிருந்த வீட்டுக்குள் நுழைந்த சமயம் ஒபாமா உட்பட அனைவரும் மிகவும் பரபரப்புடன் காணப்பட்டதாகவும் ஒரு சமயம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி இருக்கையின் நுனியில் இருந்தவாறு நகத்தை கடிப்பது போன்று இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இத்தாக்குதல் நடந்த 40 நிமிட நேரமும் மிகவும் உன்னிப்பாக ஒபாமா நேரடியாக நிலைமையை அவதானித்ததாகவும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவர் எவருடனும் பேசவில்லை எனவும் அத்துடன் அவர் அங்கிருந்தவாறு எந்தவித உத்தரவும் கொடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இறுதியாக பின்லேடன் சுட்டுக்கொல்லப்பட்ட சமயம் அனைவருக்கும் கைகுலுக்கி அங்கிருந்து விடைபெற்று சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக