4 மே, 2011

கூட்டமைப்பு தொடர்பில் யாழ். மாவட்ட இராணுவ தளபதி தெரிவித்த கருத்து எம்.பி.க்களின் சிறப்புரிமையை மீறும் செயல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தொடர்பில் யாழ். மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க தெரிவித்த கருத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறும் செயலாகும் என்பதனால் நிலையியற் கட்டளைகளுக்கு அமைவாக அது தொடர்பில் சபாநாயகர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. க்களான மாவை சேனாதிராஜாவும் நானும் மீண்டும் ஒரு யுத்தத்தை தோற்றுவிக்கும் வகையில் செயற்பட்டு வருவதாக ஊடகமொன்றுக்கு வழங்கிய பேட்டியில் யாழ். மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் கடந்த அவசரகாலச் சட்ட விவாதத்தின்போது சபையின் கவனத்திற்கு கொண்டு வந்தேன். இக் கருத்துக்கு கண்டனத்தையும் தெரிவித்திருந்தேன்.

இதனைத் தொடர்ந்து கோப்பாயிலுள்ள எனது வீட்டுக்கு இராணுவச் சீருடையில் சென்றவர்கள் அங்கு காவலுக்கு நின்ற பொலிஸாரிடம் என்னைப் பற்றியும் எனது வருகையினை பற்றியும் அவர்களிடம் விசாரித்துள்ளனர்.

அதேபோல யாழில் எனது அலுவலகத்திற்கு சென்றவர்கள் என்னைப் பற்றி பல்வேறு கேள்விகளை கேட்டுள்ளனர்.

அவர்களும் இராணுவ சீருடையிலேயே சென்றுள்ளனர். இவ்வாறான நிலையில் எனது செயலாளர் விஜயகுமார் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். அச்சுவேலி பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களே அவரை கடுமையாக தாக்கியுள்ளனர்.

அவர்கள் துப்பாக்கிப் பிரயோகமும் மேற்கொண்டுள்ளனர். இதனால் காயமடைந்த அவர் இன்னும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக