4 மே, 2011

மேற்குலகத்துக்கு எதிராக நடுத்தர நாடுகளின் அணி உருவாக வேண்டியது அவசியம்

இலங்கையின் வளங்களை அழித்து மக்களை கொலை செய்து கொன்று குவித்த பயங்கரவாத அமைப்பை ஒழித்து நாட்டில் இன ஐக்கியத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கட்டியெழுப்பியுள்ளார். இதனை எவ்வாறு யுத்தக் குற்றம் என்றும் மனித உரிமை மீறலென்றும் கூற முடியும் என பிரதமர் டி.எம்.ஜயரத்ன கேள்வி எழுப்பினார்.

மேற்குலக நாடுகளுக்கு எதிராக மத்தியதர நாடுகளின் அணியொன்று உருவாக வேண்டிய காலம் தோன்றியுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

கொழும்பு கோட்டை பிரிஸ்டல் வீதி நேற்று முன்தினம் திங்கட்கிழமை தொடக்கம் சேர்.ராசிக் பரீட் மாவத்தையாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இது தொடர்பான் நிகழ்வை சோனக இஸ்லாமிய கலாசார நிலையம் ஏற்பாடு செய்திருந்தது.

இதில் கலந்து கொண்ட பிரதமர் சேர்.ராகிக் பரீட் மாவத்தை பெயர் பலகையை திரைநீக்கம் செய்து வைத்த பின்னர் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

பிரதமர் இங்கு மேலும் உரையாற்றுகையில்: நாட்டுக்கு எதிராக பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட பிரபாகரன் யுத்தத்தில் கொல்லப்பட்டார்.

அதைவிடுத்து வேறொரு நாட்டில் உள்ள ஒருவரின் உயிருக்கு விலை நிர்ணயித்து அந்நாட்டுக்கு இராணுவத்தை அனுப்பி நாம் எவரையும் கொலை செய்யவில்லை.

நாட்டு மக்களை பாதுகாப்பது நாட்டுத் தலைவரின் கடமையாகும். அதற்கமையவே ஜனாதிபதி 3 இலட்சம் மக்களை மனிதாபிமான நடவடிக்கை மூலம் மீட்டெடுத்தார். இதனை இன்று மேற்குலகம் பிழையென்று நடக்கிறது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள இன நல்லுறவை சீர்குலைத்து மீண்டும் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் திட்டத்தை மேற்குலகம் முன்னெடுத்து வருகிறது. இதற்கு இடமளிக்காது இன மத ரீதியாக பிரிந்திருக்காது நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும்.

மேற்குலக நாடுகளின் சதித்திட்டங்களுக்கு எதிராக நடுத்தர அணி ஒன்று உருவாக்கப்பட வேண்டிய காலம் வந்துள்ளது.

இந்த நாட்டில் வாழ்ந்த முஸ்லிம் சமூகத்தின் ஈடேற்றத்திற்காக மட்டுமன்றி தமிழ் சிங்கள அனைத்து மக்களினதும் தேசியத் தலைவராக திகழ்ந்தவர் சேர்.ராசிக் பரீட் அவரது பெயரை இவ்வீதிக்கு சூட்டியிருப்பதையிட்டு மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்.

அவர் மறைந்தாலும் அவரது சேவைகள் எம் மனதில் நீங்காமல் இடம் பிடித்திருக்கும் என்று பிரதமர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக