6 ஏப்ரல், 2011

மத்திய கிழக்கில் நெருக்கடி தணிந்ததும் எண்ணெய் விலை குறையும்

லிபியா உட்பட மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமை சுமுக நிலைக்குத் திரும்பியதும் எண்ணெய் விலை குறைவடைய ஆரம்பிக்கும். அச்சமயம் நாமும் எரிபொருட்களின் விலைகளில் திருத்தத்தைச் செய்து விலைக்குறைப்பை மேற்கொள்வோம் என்று பெற்றோல் மற்றும் பெற்றோலிய வளத்துறை அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். எரிபொருட்களின் விலையேற்றம் குறித்து அமைச்சின் நிலைமையைத் தெளிவுபடுத்தி விசேட அறிக்கை விடுத்து பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், சர்வதேச சந்தையில் கடந்த இரு மாதங்களாக எண்ணெய் விலை அதிகரித்து வருகின்றது. இதன் விளைவாக கடந்த 2 ஆம் திகதி முதல் எரிபொருட்களின் விலையை அதிகரிக்க எமக்கு நேர்ந்துள்ளது. இதன்படி ஒரு லீற்றர் பெற்றோல் 10 ரூபா படியும், ஒரு லீற்றர் டீசல் 3 ரூபா படியும், சுப்ரி டீசல் மற்றும் சுப்ரி பெற்றோல் லீட்டருக்கு 10 ரூபா படியும், மண்ணெண்ணெய்க்கு லீற்றருக்கு 10 ரூபா படியும் விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2009 ம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரு லீற்றர் பெற்றோல் 130 ரூபா படியும் ஒரு லீற்றர் சுப்ரி பெற்றோல் 148 ரூபா படியும், ஒரு லீற்றர் ஓட்டோ டீசல் 73 ரூபா படியும், ஒரு லீற்றர் சுப்ரி டீசல் ரூ. 83.30 சதப்படியும், ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் 51 ரூபா படியும் விலை நிலைமை காணப்பட்டது. இதனை அதே வருடம் டிசம்பர் மாதம் ஒரு லீற்றர் பெற்றோலை 115 ரூபாவுக்கும், ஒரு லீற்றர் சுப்ரி பெற்றோலை 133 ரூபாவுக்கும் குறைத்தோம். என்றாலும் ஏப்ரல் மாதம் 2 ம் திகதி முதல் லீற்றர் பெற்றோல் 125 ரூபா படியும், ஒரு லீற்றர் சுப்ரி பெற்றோல் 143 ரூபா படியும், ஒரு லீற்றர் ஓட்டோ டீசல் 76 ரூபாபடியும், ஒரு லீற்றர் சுப்ரி டீசல் ரூ. 98.30 சதப்படியும், ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் 61 ரூபா படியும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் உலக சந்தையில் சமையல் எரி வாயுவின் விலையும் தினமும் அதிகரித்து வருகின்றது. இதன் விளைவாக 12.5 கிலோ கிறாம் எடையிலான சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலையை 238 ரூபா படி அதிகரித்துள்ளோம்.

என்றாலும், 2009 ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு பின்னர் இற்றை வரையும் நாம் எரிபொருட்களின் விலைகளில் திருத்தங்களைச் செய்யவில்லை. ஆனபோதிலும் 2010 ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் பெற்றோல், மற்றும் டீசலுக்கான பெறுமதி சேர்க்கப்பட்ட வரி, சுங்க வரி என்பவற்றை முழுமையாக நீக்கி விட்டோம். பெற்றோல் ஒரு லீற்றருக்கு ஏற்கனவே 35 ரூபா படியும் டீசல் ஒரு லீற்றருக்கு ஏற்கனவே 15 ரூபாப் படியும் சுங்க வரி அறவிடப்பட்டது.

பெற்றோலுக்கும், டீசலுக்கும் சுங்க வரி நீக்கப்பட்டதால் அரசாங்கத்திற்கு 53 பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பெற்றோல் லீற்றர் ஒன்றுக்கு 25 ரூபாப்படி கலால் வரி மாத்திரமே இப்போது அறவிடப்படுகின்றது.

கடந்த ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி முதல் பெற்றோலின் விலையை திருத்துவதற்கு முன்னர் ஒரு லீற்றருக்கு ரூ. 8.15 சதப்படி நஷ்டத்தை எதிர்கொண்டோம். அது விலை திருத்தத்திற்குப் பின்னர் ரூபா 25.38 சதமாகக் குறைவடைந்துள்ளது. அத்தோடு மண்ணெண்ணையை லீற்றர் ஒன்றுக்கு ரூபா 48.94 சதப்படி ஏற்கனவே நஷ்டத்தை எதிர்கொண்டோம். அது இப்போது ரூ. 38.94 சதமாகக் குறைவடைந்துள்ளது.

லிபியா உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை சுமுகமடையும் போது எண்ணெய் விலை வீழ்ச்சி அடையும். அப்போது எரிபொருட்களின் விலையில் நாம் மீண்டும் திருத்தம் செய்து குறைப்போம்.

எண்ணெய் விலை அதிகரிக்கும் போது அது முழு பொருளாதாரத்திலுமே தாக்கம் செலுத்தும்.

இதனை நாமறிவோம். என்றாலும் மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு தான் ஏற்கனவே பெற்றோல் மற்றும் டீசலுக்கான பெறுமதி சேர்க்கப்பட்ட வரி, சுங்க வரி என்பன நீக்கப்பட்டிருக்கின்றன என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக