சார்க் நாடுகளுக்கிடையிலான தகவல் பரிமாற்றம், நெருக்கமான ஒத்துழைப்புக்கள் ஊடாக பயங்கரவாதம் அற்ற தெற்காசியாவை உருவாக்க வேண்டும் என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
சார்க் பிராந்திய நாடுகள் ஒன்றுபட்டும், உறுதியுடனும் செயற்படுவதன் மூலம் தெற்காசியாவிலிருந்து பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க முடியும் என்று நம்புவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
சார்க் நாடுகளின் பொலிஸ் மா அதிபர்களது மாநாடு நேற்றுக் காலை கொழும்பில் இடம்பெற்றது. இதன் அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு விசேட உரையாற்றும் போதே பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார்.
‘பொலிஸ் விவகாரங்கள் தொடர்பான ஒன்பதாவது சார்க் மாநாடு’ என்ற தொனிப் பொருளில் பொலிஸ் மா அதிபர் கலாநிதி மஹிந்த பாலசூரிய தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் சார்க் நாடுகளைச் சேர்ந்த பொலிஸ் மா அதிபர்கள், உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
பாதுகாப்புச் செயலாளர் இங்கு மேலும் உரையாற்றுகையில்,
சார்க் பிராந்திய நாடுகளுக்கிடையில் சரியான தகவல்களை பரிமாற்றம் செய்வதையும், நெருக்கமான உறவுகளையும் வைத்துக்கொள்ள வேண்டும். இதன் மூலம் சார்க் பிராந்திய எல்லையில் எந்தவொரு பயங்கரவாதம் அல்லது பயங்கரவாதம் சார்ந்த குற்றச் செயல்களிலிருந்து பாதுகாப்பாக இருக்க முடியும் என்றும் பாதுகாப்புச் செயலாளர் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நேரடியான வழிகாட்டல், சரியான தலைமைத்துவத்தின் மூலம் இலங்கையில் மூன்று தசாப்தங்களாக நிலவிய பயங்கரவாதத்தை முற்றாக முடிப்பதற்கு இலங்கைக்கு முடிந்தது.
நாகரிகமான ஜனநாயகத்தை வெளியில் கொண்டுவர தூய்மையான நோக்குடனும் இறுதி முடிவை காணும் நல்லெண்ணத் துடனும் 2006 புலிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. புலிகள் இந்தப் பேச்சுவார்த்தைகளை அவர்களது இருப்பை பலப்படுத்துவதற்கான சுயநலத்திற்காக பயன்படுத்திக் கொண்டனர்.
இந்த நோக்கத்தை கண்டுபிடித்த அரசுக்கு இராணுவ ரீதியான தீர்வைத் தவிர வேறு வழி இருக்கவில்லை. தற்பொழுது பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதத்தின் பிடியில் சிக்கிய மக்கள் தற்பொழுது சுதந்திரமாக இருக்கின்றனர். ஜனநாயகத்தை அனுபவித்து வருகின்றனர். அரசியல், பேச்சு, சுதந்திரத்தை அச்சமின்றி வெளியிடக் கூடிய சூழலில் இருக்கின்றனர் என்றார். மிகவும் கடினமான விலை கொடுத்து பெறப்பட்டட இந்த வெற்றியை நாட்டு மக்கள் அனைவரும் சுமுகமான முறையில் அனுபவிக்கின்றதொரு புதிய யுகத்திற்கு இலங்கை சென்றுள்ளது என்றும் பாதுகாப்புச் செயலாளர் இந்த மாநாட்டில் சுட்டிக்காட்டினார். பயங்கரவாதம் அற்ற தெற்காசியாவை உருவாக்கும் நடவடிக்கைகளுக்கு கொழும்பில் நடைபெறும் இந்த மாநாடு மிகவும் பிரயோசனமாக அமையுமென்று தான் நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சட்டமா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி மொஹான் பீரிஸ், இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சோமதிலக்க திஸாநாயக்க, விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், மாலைதீவு, நேபாளம் ஆகிய நாடுகளின் பொலிஸ் மா அதிபர்கள், உயர் அதிகாரிகள், வெளிநாட்டு தூதுவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக