6 ஏப்ரல், 2011

இலங்கை தமிழர்கள் தன்மானத்தோடும் பெருமையோடும் வாழ அழுத்தம் கொடுக்கிறோம்

இலங்கையின் அரசியல் அமைப்பு விதிகளை மாற்றி தமிழர்களுக்கு எல்லா உரிமைகளையும் வழங்கி தன்மானத்தோடும் பெருமையோடும் பெருமிதத்தோடும் அவர்கள் வாழ்வதற்கு மாற்றத்தை செய்ய வேண்டுமென வலியுறுத்திக் கொண்டிருக்கின்றோம் என காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

சென்னை தீவுத் திடலில் தமிழக முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் பங்கேற்ற தி.மு.க. கூட்டணியின் நேற்றைய தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகையிலேயே சோனியா காந்தி இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் அங்கு மேலும் பேசுகையில்,

அண்டை நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற தமிழ் மக்களைப் பற்றிய செய்திதான் எங்கள் இதயத்திற்கு மிக நெருக்கமான ஒன்றாக இருக்கிறது. அதைவிட வேறு ஒன்றும் எங்கள் நெஞ்சத்தை தொடுவதாக சொல்ல இயலாத அளவிற்கு நாங்கள் அதிலே நெருக்கமாக இருக்கின்றோம். இன்னும் சொல்லப் போனால் நாங்கள் கொடுத்த உறுதிமொழிகளை எல்லாம் ஒவ்வொன்றாக செய்து கொண்டு வருகிறோம். பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு இந்தியா சார்பாக பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. அவை மேலும் தொடரும்.

இப்பொழுது புனர்வாழ்வுக்காக பெருந்தொகையான நிதியுதவியை கொடுத்திருக்கிறோம். அதுபோல 50 ஆயிரம் வீடுகள் புதிதாக கட்டுவதுடன் இன்னும் சிலவற்றை புனரமைப்பதற்கு முன்னேற்றமான காரியத்தை செய்து கொண்டிருக்கிறோம்.

இறந்துபோன மீனவர்களை பற்றி நாங்கள் எங்கள் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஆனால் ஒன்றை சொல்லுகிறோம். இந்த துப்பாக்கிச் சூடு, நமது தமிழக மீனவர்கள் மீது நடத்துகின்ற துப்பாக்கிச் சூடு இனிமேல் நடக்காது என்று சொல்லுகின்ற அளவுக்கு செயல்பட்டிருக்கிறோம்.

அதனை உங்களுக்கு தொடர்ந்து நாங்கள் செய்வோம் என்பதனையும் இலங்கைப் பிரச்சினை தீரும்வரை அதனைப்பின்பற்றி நடப்போம் என்பதனையும் உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக