18 ஜனவரி, 2011

சட்டவிரோத குடியேற்றவாசிகளுடன் மேலும் இரு கப்பல்கள் கனடா நோக்கி பயணம்



சட்டவிரோதமாகக் குடியேறவிரும்பும் இலங்கைத் தமிழர்களை ஏற்றிக்கொண்டு மேலும் இரு கப்பல்கள் தென்கிழக்கு ஆசியா நாடொன்றிலிருந்து கனடா நோக்கி பயணிக்கவுள்ளதாக கனடிய புலனாய்வு அதிகாரிகள் அந்நாட்டு அரசாங்கத்திற்கு எச்சரிக்கை செய்துள்ளனர்.

ஆசிய நாடுகளிலுள்ள இனங்காணப்படாத துறைமுகங்கள் இரண்டிலிருந்து சட்டவிரோதமாக ஆட்களை கடத்திவருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் புலி ஆதரவாளர்கள் உட்பட 400 இலங்கை தமிழர்கள் இந்தக் கப்பலில் பயணிக்க தயாராகுவதாகவும் தமக்கு இரகசிய தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் புலனாய்வு அதிகாரிகள் கனடா அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

இரு வேறுபட்ட தரப்பினரால் இந்த ஆட்கடத்தலுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இவர்கள் இதற்கு பயன்படுத்தவென இரண்டு கப்பல்களை தேடிவருகின்றனர். இவ்விரு கப்பல்களும் 200 தொடக்கம் 300 வரையான பயணிகளை சுமந்து செல்லக்கூடியதாகயிருக்கும். இந்த கப்பல்கள் பெயரிடப்படாத அல்லது இனங்காணப்படாத தென்னாசியா துறைமுகங்களிலிருந்து கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய கரைநோக்கி பயணிக்க திட்டமிடப்பட்டுள்ளன.

தற்போது கப்பலேறும் இடங்களை நோக்கி நகர்த்தப்பட்டுக்கொண்டிருக்கும் அகதிகளுள் விடுதலைப்புலி உறுப்பினர்களும் உள்ளடங்கியிருக்கக்கூடுமென நம்பப்படுகின்றது. காலநிலை சீரடைந்ததன் பின்னர் எதிர்வரும் மார்ச் மாதமளவில் இவ்விரு கப்பல்களும் தத்தமது இலக்குகள் நோக்கி பயணிக்கலாமென புலனாய்வு தகவல்களிலிருந்து தெரியவந்துள்ளது.

இவ்வாறிருந்த போதும் தமக்கு இரு கப்பல்கள் புறப்படவுள்ளமை தொடர்பாகவே தகவல்கள் கிடைத்துள்ளன. ஒருவேளை இவற்றைவிட அதிகமான கப்பல்களும் பயணிக்க வாய்ப்புள்ளதாக கனடிய புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், இந்தக்கப்பல்களின் வருகையை தடுக்க முற்பட்டால் அதில் பயணிக்கும் அகதிகளின் உயிருக்கு ஆபத்து நேரலாம். அது தொடர்பில் கடத்தல்காரர்கள் கவலைப்படப்போவதில்லையென்பதால் மிக கவனமாக செயற்பட வேண்டியுள்ளது என கனடா தெரிவித்துள்ளது.

இதேவேளை, சுற்றுலாப் பயணிகளுக்கான விசாவில் தாய்லாந்துக்குவந்த இலங்கைத் தமிழர்கள் உல்லாசப் பயணிகளைப் போல அங்கு தங்கியிருப்பதாகவும் உண்மையில் அவர்கள் அடுத்துவரும் கப்பலில் கனடா செல்லக் காத்திருக்கின்றனர் என்றும் குளோப் அன்ட் மெயில் செய்திச் சேவை அண்மையில் குறிப்பிட்டிருந்தது. இதுபோன்றதொரு தகவல் புலனாய்வுப் பிரிவுக்கும் முன்பு கிடைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக