18 ஜனவரி, 2011

வட, கிழக்கில் பாதாள உலக செயற்பாடுகளுக்கு அனுமதிக்கமாட்டோம்: ஜனாதிபதி



வடக்கில் அரசாங்கம் பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மேற்கொள்ளும்போது அதனை சிலர் குழப்ப முயற்சிக்கின்றனர். சர்வதேசத்துக்கு வேறு கதையை கூற முற்படுகின்றனர். பாதாள உலகம் என்பது வட பகுதியிலோ தென் பகுதியிலோ எங்கிருந்தாலும் விடமாட்டோம். அவ்வாறான மாபியாவை எங்கும் இயங்க விடமாட்டோம். மாபியாக்களினால் இந்த நாட்டை ஆட்சி செய்ய முடியாது. அப்பாவி மக்களை பாதுகாப்போம். இந்த அழகிய தேசத்தை ஒரே தேசிய கொடியின் கீழ் கட்டியெழுப்புவோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

இந்த நாட்டில் யாரும் பிரிந்து தனியாகவோ விலகியோ வாழ முடியாது. நாம் அனைவரும் இலங்கை மாதாவின் பிள்ளைகள். சிங்களம் தமிழ் முஸ்லிம் பறங்கியர் என யாராக இருந்தாலும் அனைவரும் இலங்கை மாதாவின் பிள்ளைகளேயாவர் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற தேசிய பொங்கல் விழா நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஜனாதிபதி அங்கு மேலும் கூறியதாவது,

உங்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். இந்த நிகழ்வில் அதிகளவில் மாணவர்கள் கலந்துகொண்டுள்ளமை மகிழ்ச்சியளிக்கின்றது. இந்த நாட்டை அபிவிருத்திசெய்கின்ற அதேவேளை எமது கலை கலாசரங்களையும் நாம் பேணி பாதுகாக்கவேண்டியது அவசியமாகும். கலை கலாசக்ஷிரங்களை பேணி பாதுகாப்பதன் மூலம் மட்டுமே நாம் சிறந்த இனமாக தேசியமாக வளர முடியும். மிளிர முடியும்.

மேற்கு நாடுகளின் கலாசாரத்தில் எமது இளம் சந்ததியினர் சிக்கி எமது நாட்டின் கலாசாரத்தை மறந்துபோயிருந்தனர். எனவே நாட்டை அபிவிருத்தி செய்கின்ற அதேவேளை எமது கலாசாரத்தை பாதுகாக்க நாடு என்ற ரீதியிலும் இனம் என்ற வகையிலும் நாம் தயாராகவேண்டும். இந்த நாட்டில் நாம் 30 வருடங்கள் பின்னோக்கி சென்ற வரலாறு இருந்தது. தற்போது அந்தப் பயணத்துக்கான முடிவைக் கண்டு முன்னோக்கி செல்கின்றோம். அபிவிருத்தி பாதையில் பயணித்துக்கொண்டிருக்கின்றோம் என தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக