18 ஜனவரி, 2011

இலங்கை இந்திய ஒப்பந்தத்தை அமுல்படுத்தக்கோரி இந்தியாவில் நெடும் பயணம்

இலங்கை இந்திய ஒப்பந்தத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்; 1948 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமிழர் பகுதிகளில் குடியேற்றப்பட்ட சிங்களக் குடியேற்றங்களை வெளியேற்றவேண்டும் என்று இருகோரிக்கைகளை முன்வைத்து ஈழதேசிய ஜனநாயக விடுதலை முன்னணி ஸ்ரீ பெரும் பதூரில் அமைந்துள்ள அமரர் ராஜிவ் காந்தியின் நினைவு மண்டபத்திலிருந்து 2,500 கிலோமீற்றர் நெடும் பயணம் ஒன்றை ஆரம்பித்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மங்களராஜா தலைமையில் இந்த பயணம் ஆரம்பித்துள்ளதாக ஈழதேசிய ஜனநாயக விடுதலை முன்னணி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்தியஇலங்கை ஒப்பந்தத்தினை முழுமையாக நிறைவேற்ற வேண்டும். 1948 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமிழர் பகுதிகளில் குடியேற்றப்பட்ட சிங்களக் குடியேற்றங்களை (முப்பது இலட்சம் சிங்களக் குடியேற்றவாசிகளை) வெளியேற்ற வேண்டும் என்ற இரு கோரிக்கைகளை மட்டும் முன்வைத்து கால்நடையாக இந்தப் பயணத்தை மேற்கொள்கிறோம். இந்திய நாடு உலகுக்குப் போதித்த அஹிம்சை வழியில் எங்களை வருத்தி நிரந்தரத் தீர்வுக்காக மேற்கொள்ளும் இந்த விடுதலைக்கான நெடும் பயணத்துக்கு ஆறுபேர் கொண்ட குழு தலைமை ஏற்று வழிநடத்துகிறது.

மங்களராஜா தலைமையில் தயாபரன், ஞானராஜா, வசீகரன், அகதா, கிறேசியன் ஆகியோர் இதில் பங்குகொள்கின்றனர்.

இந்தியாவின் எட்டு மாநிலங்களின் ஊடாக மேற்கொள்ளவிருக்கும் இந்த நடைபயணம் 2500 கிலோமீற்றர் தூரத்தைக் கடக்க வேண்டியுள்ளது.

இந்த நெடும் பயணத்தில் கலந்துகொள்பவர்களது உடல் தகுதிகள் ஞாயிறு அன்றுமருத்துவர்களைக் கொண்டு பரிசோதிக்கப்பட்டது. இதில் கலந்து கொள்பவர்களில் தமிழகம் ஒரிசா மாநிலங்களில் அகதிமுகாம்களில் உள்ள ஈழத் தமிழர்களும் மற்றும் முகாம்களுக்கு வெளியே வசித்துவரும் ஈழத் தமிழர்களும் அடங்குவர். இந்த நெடுந்தூர நடைப் பயணத்துக்கு தலைமையேற்றிருக்கும் குழுவின் பொறுப்புக்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. இந்த ஆறுபேர் கொண்ட தலைமைக்குழு தினமும் கூடிக் கதைப்பார்கள். அங்கத்தினர் நோய்வாய்ப்பட்டால் அவர்களைக் கவனிப்பது மருத்துவ உதவிகள் வழங்குவது போன்றவற்றுக்கு மருத்துவக்குழு ஒன்று பயணம் செய்கிறது.

சமைப்பது பரிமாறுவது குடிநீர் வழங்குவது சிற்றுண்டி தேநீர் வழங்குவதற்கான ஏற்பாடுகளை அதன் பொறுப்பு வாய்ந்தவர்கள் செய்து முடிப்பார்கள். ஒவ்வொரு மாநிலங்களின் எல்லைகளைத் தாண்டும்போது சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு நாங்கள் தகவல் கொடுக்கவேண்டும்.

தமிழ் நாட்டிலிருந்து புறப்படும் நடைப்பயணம் ஆந்திரா, மகாராஷ்டிரா மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் ராஜஸ்தான், அரியானா, டில்லி ஆகிய மாநிலங்ளின் ஊடாக நடைபயணம் மேற்கொள்ளவேண்டும்.

டில்லியைச் சென்றடைந்ததும் எங்களுடைய கோரிக்கைகளை இந்திய ஜனாதிபதி பிரதமர் எதிர்க்கட்சித் தலைவர், காங்கிரஸ் தலைவர் பி.ஜே.பி.தலைவர் இடது சாரிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிற கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து கையளிக்கவுள்ளோம்.

எங்களது இனம் மறைமுகமாக அழிக்கப்பட்டுக் கொண்டிருப்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்துவதுடன், உடன் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி வேண்டுவது மட்டும் அல்லாமல் அவற்றுக்கான காலக்கெடு நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பதும் வலியுறுத்தப்படும். எங்கள் இன மக்களை விடுவிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக