14 ஜனவரி, 2011

மட்டு மாவட்டத்தில் நலன்புரி நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் இடம்பெயர்ந்தவர்கள் தங்கியுள்ள நலன்புரி நிலையங்கள் 275 ஆக அதிகரித்துள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் 42295 குடும்பங்களைச் சேர்ந்த 165494 பேர் இடம்பெயர்ந்து 275 நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின் றன. 57419 குடும்பங்களைச் சேர்ந்த 213711 பேர் இடம்பெயர்ந்து நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர்.

இதுவரைக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 145131 குடும்பங்களைச் சேர்ந்த 541688 பேர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் மூவாயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் பகுதியாகவும் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை, வவுணதீவு, பட்டிப்பளை, வாழைச்சேனை, ஓட்டமாவடி, வெல்லாவெளி, களுவாஞ்சிக்குடி, காத்தான்குடி, செங்கலடி, ஏறாவூர், கிரான், போன்ற பிரதேச செயலாளர் பிரிவுகளில் வீடுகள் சேதமடைந்துள்ளன. ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் மாத்திரம் 45 வீடுகள் முழுமையாகவும் 115 வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளதாக ஓட்டமாவடி பிரதேச செயலாளர் எம். சி. அன்சார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாவிகளின் அண்டிய பகுதிகளில் வசிப்போர் மற்றும் குளங்களை அண்டியுள்ளவர்களும் முற்றாக இடம்பெயர்ந்துள்ளனர்.

ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆரையம்பதி வாவியோரம் உள்ள குடும்பங்கள் இடம்பெயர்ந்து ஆரையம்பதி மகா வித்தியாலயத்திலும், காங்கேயனோடை கிராம மக்கள் இடம்பெயர்ந்து பாலமுனை அஸ்ரப் வித்தியாலயம், பாலமுனை அலிகார் வித்தியாலயத்திலும் இடம்பெயர்ந்து தங்கியுள்ளனர்.

காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வாவியின் நீர் மட்டம் உயர்ந்து வீடுகளுக்குள் புகுந்ததால் ஆயிரக் கணக்கான குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன.

அதே இப்பிரதேசத்தில் உள்ள குபா பள்ளிவாயலின் சுவர் இடிந்து விழுந்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் வாவியோரம் உள்ள பல கட்டடங்கள் இடிந்து விழும் அபாயமுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக