பாராளுமன்ற உறுப்பினர்களின் மொழித்திறனை விருத்தி செய்வதற்காக தமிழ்மொழி பயிற்சி பாடநெறியின் ஆரம்ப நிகழ்வு பாராளுமன்றத்தில் இன்று காலை 10.00 மணிக்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் ஆரம்பித்து வைக்கப்படும். பயிற்சி நெறியானது பாராளுமன்றம் கூடும் ஒவ்வொரு புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை வேளையில் இரண்டு மணித்தியாலங்கள் நடைபெறும். தேசிய மொழி மற்றும் நல்லிணக்க ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் ஆலோசனையின் பேரில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆறு மாதங்களுக்கு தமிழ்மொழி பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.
இப்பாடநெறியில் ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் 30 பேருக்கு முதற்கட்டமாக பயிற்சிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இன்று நடைபெறும் பயிற்சி நெறியில் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த, சிறைச்சாலைகள் சேவை அமைச்சர் சந்ரசிறி கஜதீர, வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் விமல் வீரவன்ச, கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் ராஜித சேனாரத்ன, சிரேஷ்ட அமைச்சர் அதாவுட செனவிரத்ன, சிறு ஏற்றுமதி பயிர் அபிவிருத்தி அமைச்சர் ரெஜினோல்ட் குரே, சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சர் திஸ்ஸ கரலியத்த ஆகியோரும், ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளர் ரவி கருணாநாயக்க, மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன ஆகியோர் கலந்து கொள்வர்.
மக்கள் விடுதலை முன்னணி சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் அஜித்குமார் உட்பட மேலும் பலர் தமிழ் மொழி பயிற்சி கற்கை நெறியில் கலந்து கொள்வார்கள் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக