10 ஜூன், 2011

தமிழ்நாட்டில் எடுக்கப்படும் தீர்மானங்கள் இலங்கை - இந்திய உறவை பாதிக்காது


இலங்கை இறைமையுள்ள ஒரு நாடு என்ற வகையில் சகல இராஜதந்திர தொடர்பாடல்களையும் இந்திய மத்திய அரசுடனேயே மேற்கொள்ளுகின்றதே தவிர மாநில அரசுடன் அல்ல என்று அமைச்சரவைப் பேச்சாளரும், தகவல், ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல நேற்றுத் தெரிவித்தார்.அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற இச்செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் மேலும் கூறுகையில், இலங்கையும், இந்தியாவும் இறைமையும், தன்னாதிக்கமும் கொண்ட இரண்டு நாடுகள். அதனால் எமது சகல இராஜதந்திர தொடர்பாடல்களையும் இந்திய மத்திய அரசுடனேயே நாம் மேற்கொள்ளுகின்றோம். மாநில அரசுகளுடன் அல்ல.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நீண்ட காலம் நட்புறவும், நெருக்கமான தொடர்பாடலும் உள்ளது. இரு நாடுகளும் சமய, கலாசார ரீதியாகவும் மிக நெருக்கமான உறவை கொண்டிருக்கின்றது. இருநாடுகளும் மிகவும் நெருக்கமான நட்புறவு பேணும் நாடுகள். என்றாலும் இருநாடுகளுக்குமிடையிலான அரசி யல் வேலைத் திட்டங்கள் வேறு வேறானவை. அதனால் அபிப்பிராய பேதங்கள் ஏற்படலாம். அப்பேதங்கள் தொடர்பாக இரு தரப்பினரும் நட்புறவு ரீதியில் கருத்துக்களைப் பரிமாறிக் கொள் ளுகின்றோம். எல்லா பேதங்கள் தொடர்பாகவும் இரு நாடுக ளுக்கிடையிலான நட்புறவு மற்றும் அந்நியோன்யம் என்பவற்றை உயர்வாக மதித்தே பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுகின்றோம். எந்தவொரு தரப்புக்கும் பாதிப்பு ஏற்படாதவகையில் இப் பேதங்களுக்குத் தீர்வுகளைக் காணு கின்றோம்.

இந்தியாவின் மாநிலமொன்றில் ஏற்படுகின்ற பிரச்சினைகள், அங்கு எடுக்கப்படுகின்ற தீர்மானங்கள் அவர்களுடைய உள் விவகாரம். அவை இறைமையும், தன்னாதிக்கமும் உள்ள எந்த ஒரு நாட்டையும் பாதிக்காது. அது போல் தான் தமிழ்நாடு மாநிலத்தில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானமும் இலங்கை- இந்திய சிநேகபூர்வ நட்புறவைப் பாதிக்காது என்றார். இச்செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர், அரசியல் தீர்வு தொடர்பாக 1987ம் ஆண்டு முதல் அதாவது அரசியலமைப் புக்கான 13வது திருத்தம் அறிமுகப்படுத்த ப்பட்டது முதல் பேச்சு இடம் பெறுகின்றது. எம்மால் 13வது திருத்தத்திற்கு மேலாக செல்லவும் முடியும். அச்சமயம் அரசியல் யாப்பில் திருத்தம் செய்ய வேண்டிய நிலைமை ஏற்படும்.

தற்போது பொலிஸ் அதிகாரம் குறித்து கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளோம். மக்களின் நலன்களைக் கருத்தில் முன்வைத்தபடிதான் இக்கலந்துரையாடல் இடம்பெறுகின்றது. இந்த அடிப்படையில் சகலரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வு முன்வைக்கப்படும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக