10 ஜூன், 2011

குறிப்பிட்ட காலத்துக்குள் அவசரகால சட்டத்தை நீக்குவதில் ஜனாதிபதி உறுதி’


அவசர காலச் சட்டத்தைக் குறிக்கப்பட்ட காலத்திற்குள் முழுமையாக நீக்கிவிட வேண்டும் என்பதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் எதிர்பார்ப்பு என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல நேற்று தெரிவித்தார்.

அமைச்சரவையின் வாராந்த முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அமைச்சர் மேலும் கூறுகையில், அவசர காலச் சட்டத்தை முழுமையாக நீக்கி விட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. ஏற்கனவே சில ஷரத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன. முழுமையாக நீக்கிவிடுவதில் சிறு தாமதங்கள் நிலவுகின்றன.

இதற்கு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் விவகாரமும் ஒன்றாகும். இவர்கள் தொடர்பான கோவைகளைப் பரிசீலிக்கும் நடவடிக்கைகளைச் சட்ட மா அதிபர் திணைக்களம் துரிதப்படுத்தியுள்ளது.

இந்தடிப்படையில், 1500 பேர் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

இச் சமயம் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளித்த அமைச்சர், கட்டுநாயக்க வன்முறை சம்பவம் தொடர்பாக விசாரணை நடாத்தி முன்னாள் மேல் நீதிமன்ற நீதியரசர் மகாநாம திலகரட்ன நேற்று முன்தினம் ஜனாதிபதியிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.

இதேவேளை, பொலிஸ் மா அதிபர் இச் சம்பவம் தொடர்பாக முக்கியமான நிலைப்பாட்டை எடுத்தார். இச் சம்பவத்தில் துப்பாக்கி பிரயோகம் செய்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் சிலர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். எல்லாவற்றிற்கும் மேலாக குறித்த ஓய்வூதியத் திட்ட யோசனை வாபஸ் பெறப்பட்டுள்ளது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக