12 மார்ச், 2011

வெளிநாடுகளில் நாட்டுக்கு எதிராக பிரசாரம் செய்வோருக்கு மக்கள் பதிலடி கொடுப்பர்

உள்நாட்டில் அபிவிருத்தியை விரும்பாத ஐ.தே.க. வெளிநாடுகளில் புரளிகளை கிளப்பிவிடுகிறது ஜனாதிபதிநாட்டுக்கு எதிராக வெளிநாடுகளில் பிரசாரம் மேற்கொள்ளும் சதிகாரர்களுக்கு எதிர்வரும் 17ம் திகதி நாட்டு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பர் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

பேசுவதற்கு எதுவுமில்லாமல் மனித உரிமை பற்றி பேசும் இவர்கள், அமெரிக்க நீதிமன்றத்தில் எனக்கெதிராக வழக்குத் தொடரவும் 30 மில்லியன் அமெரிக்கன் டொலர்களை நட்டஈடாகக் கோரவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

நாட்டு மக்கள் மீது எமக்கு நம்பிக்கையுண்டு. அனைத்திலும் வெற்றிபெறுவோம். அந்த வெற்றியை எமது எதிர்கால பரம்பரைக்குக் கையளிப்போம் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் பதுளை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்கும் மாவட்டத் தேர்தல் மாநாடு நேற்று முன்தினம் பண்டாரவளை நகர மண்டபத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

அமைச்சர்கள் நிமல் சிறிபால டி சில்வா, டிலான் பெரேரா, லக்ஷ்மன் செனவிரத்ன, ஊவா மாகாண முதலமைச்சர் சடுந்திர ராஜபக்ஷ, மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். அங்கு ஜனாதிபதி மேலும் உரையாற்றுகையில்; இலங்கையில் சுதந்திரமாக வாழ முடியாதுள்ளது எனவும் மனித உரிமை மீறல்கள் கருத்துச் சுதந்திரமின்மை இங்கு நிலவுவதாகவும் குற்றம் சாட்டி அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடர எதிர்க்கட்சியினர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

உள்நாட்டில் மக்கள் நம்பிக்கையை இழந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சி வெளிநாடுகளில் பிரசாரம் செய்வதையே வேலையாகக்கொண்டுள்ளது. அவர்கள் கிராமங்கள் அபிவிருத்தியடைவதை விரும்பாதவர்கள் வெளிநாடுகளில் இருந்தே சகலதும் இறக்குமதி செய்யப்பட வேண்டுமென விரும்புபவர்கள்.

நாட்டு மக்கள் கடந்த தேர்தல்களிலும் எம்மை அமோக வெற்றிபெறச் செய்தனர். இம்முறையும் எமது வெற்றி உறுதியாகிவிட்டது. அதனைப் பொறுக்க முடியாதவர்களே பல்வேறு சூழ்ச்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இம்முறை தேர்தல் அரசாங்கத்தை அமைக்கவோ அரசாங்கத்தைக் கவிழ்க்கவோ நடத்தப்படும் தேர்தலல்ல. இது கிராமங்களை முன்னேற்றுவதற்காக கிராமங்களுக்காக வேலை செய்யும் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல். ஊவா மாகாணத்தைப் பொறுத்தவரை பல பாராளுமன்ற, மாகாண அமைச்சர்கள் உள்ளனர். இந்தப் பிரதேசங்களில் முழுமையான அபிவிருத்தியைப் பெற்றுக்கொள்ள மக்கள் தமது முழுமையான ஆதரவை வழங்க வேண்டியது அவசியம்.

நாம் 30 வருட கால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்து நாட்டை அபிவிருத்தியில் கட்டியெழுப்ப சகல நடவடிக்கையையும் மேற்கொண்டுள்ளோம்.

மேல் மாகாணத்திற்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டிருந்த அபிவிருத்தியை கிராமங்களுக்கும் முன்னெடுத்துச் செல்வதே அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாகும்.

அதற்கு சகலரதும் பூரண ஒத்துழைப்பு அவசியம். கடந்த 2005 ஜனாதிபதித் தேர்தலின் போது அரிசி ஒரு கிலோ நூற்று இருபது ரூபாய்க்கு விற்கப்பட்டது. தற்போது போதியளவு அரிசி எமக்கு உள்ளது.

அரசாங்கம் விவசாயிகளுக்காக பாரிய சலுகைகளை வழங்கி வருகிறது. யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் பணம் எங்கே எனக் கேட்பவர்களுக்கு அரசாங்கம் வழங்கும் நிவாரணங்கள் கண்களுக்குத் தெரிவதில்லை. நாம் கடந்த ஆட்சியாளர்களைப் போன்று வெளிநாட்டு உற்பத்திகளில் நம்பிக்கை வைக்கவில்லை.

உள்ளூர் உற்பத்திகளில் நம்பிக்கை வைத்து அதனை மேம்படுத்தும் திட்டங்களை முன்னெடுத்து வருகிறோம். மக்களுக்குச் சேவை செய்வதில் அரசாங்கம் ஒருபோதும் பின்னிற்பதில்லை. மஹிந்த சிந்தனை திட்டத்தை நிறைவேற்றியுள்ள நாம் மஹிந்த சிந்தனை எதிர்காலத்திட்டத்தை ஆரம்பித்துள்ளோம். அதற்கு சகலரினதும் பூரண ஒத்துழைப்பு அவசியம்.

அரசாங்கத்தின் செயற்பாடுகளை வெற்றிகரமாக முன்னெடுக்க எதிர்வரும் 17ம் திகதி வெற்றிலை சின்னத்துக்கு வாக்களித்து பூரண ஆதரவு வழங்க வேண்டுமெனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக