2 பிப்ரவரி, 2011

மீனவர் தாக்குதல் தொடர்ந்தால் பரஸ்பர உறவு பாதிக்கும் -இந்தியா

எல்லை தாண்டி மீன் பிடிக்கும் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் இனிமேலும் தொடரக் கூடாது. அவ்வாறான அசம்பாவிதம் ஒன்று இடம்பெற்றால் அது இரு அயல் நாடுகளுக்கிடையிலான உறவை பாதிப்பதாகவே இருக்கும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை பாதிக்காத வகையில் இலங்கை முடிவுகளை கவனமாக எடுக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கைகக்கு விஜயம் செய்திருந்த இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் தமது பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பியுள்ளார். இந்நிலையில் முதல்வர் கருணாநிதியை அமைச்சர் கிருஷ்ணா நேற்று சந்தித்து பேசியுள்ளார். இந்தச் சந்திப்பின்போது நிருபமா ராவும் உடனிருந்துள்ளார். இச்சந்திப்பின் பின்னர் அங்கிருந்த செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கையிலேயே இந்திய வெளிவிவகார அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், எவ்வாறான ஒரு சூழ்நிலையிலும் அப்பாவி மீனவர்கள் மீது படைப்பலத்தை பிரயோகிக்கக் கூடாது. அதை ஏற்றுக் கொள்ளவும் முடியாது. மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவங்கள் கடந்துபோன வரலாராக மட்டுமே இருக்க வேண்டும். அவை இனி ஒரு போதும் இடம்பெறக் கூடாது.

அவ்வாறக்ஷின அசம்பாவிதங்கள் தொடருமாயின் இரு அயல் நாடுகளுக்கான உறவை பாதிப்பதாகவே அது அமையும் என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். எனவே இதனை உணர்ந்து, உறவு பாதிக்கப்படாத வகையில் இலங்கை அரசாங்கம் செயற்பட வேண்டும்.

இந்திய மீனவர்கள் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்துவதில்லை; கொல்வதில்லை. வேறு எந்த நாட்டிலும் கூட இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதில்லை. ஆனால் இலங்கை மட்டும் இவ்வாறான போக்கொன்றை கடைப்பிடிப்பது தொடர்பாக அந்நாட்டு அரசாங்கத்துக்கு சுட்டிக்காட்டியுள்ளோம்.

இந்திய மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளை உறுதி செய்வதில் இந்திய அரசு உறுதியுடன் உள்ளது. மறுபுறத்தில் இலங்கையுடன் இந்தியாவுக்கு உளப்பூர்வமான, தோழமையான பாரம்பரியமிக்க உறவொன்று உள்ளது. இதனை இலங்கை அரசாங்கம் மனதிற்கொண்டு பிரச்சினைகளை அணுக வேண்டும். அது தொடர்பான முடிவுகள் பரஸ்பர உறவுகளை பாதித்துவிடக் கூடாது. அத்துடன் படையினருக்கும் அது குறித்து தெளிவுப்படுத்த வேண்டும்.

இந்திய மீனவர்கள் தாக்கப்படுவது கவலையான விடயமென்பதை இலங்கை ஜனாதிபதிக்கு வெளிவிவகாரச் செயலர் நிருபமா ராவ் எடுத்துக் கூறியுள்ளார். அதற்கு பதிலளித்த இலங்கை ஜனாதிபதி புலனாய்வு அறிக்கை கிடைக்கப் பெற்றதும் நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதியளித்துள்ளார்.

இதேவேளையில், நிருபமாவின் விஜயத்தின் முடிவில் இரு நாடுகளும் விடுத்த கூட்டறிக்கை மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்கின்றது. எனவே மீன்பிடித்தலை எந்தவித அச்சமுமின்றி தொடர முடியும். மீனவர்களை முழுமையாக பாதுகாக்குமாறு கடலோரக் காவற்படைக்கு உத்தரவிட்டுள்ளோம் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக