2 பிப்ரவரி, 2011

நல்லிணக்க ஆணைக்குழு: சாட்சியங்களை ஆய்வு செய்யும் பணிகள் இவ்வாரம் ஆரம்பம் எழுத்து மூலம் 5000, வாய்மூலம் 500 சாட்சியங்கள்






கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக் குழுவுக்கு இதுவரை கிடைக்கப் பெற்றுள்ள சாட்சியங்களை ஆய்வு செய்யும் பணிகள் இவ்வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குழுவின் ஊடகப் பேச்சாளர் லக்ஷ்மன் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

வடக்கு, கிழக்குப் பகுதிகளிலிருந்து சுமார் ஐயாயிரம் எழுத்து மூல சாட்சியங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் சுமார் 500 பேர் வாய்மூலம் சாட்சியம் அளித்துள்ள தாகவும் தெரிவித்த விக்கிரமசிங்க, சாட்சியங்களை ஆய்வு செய்த பின் தேவை ஏற்படின் பொது மக்களிடம் இரண்டாம் கட்ட சாட்சியம் பெற்றுக் கொள்ளப்படுமென்றும் தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற அமர்வுகளில் சுமார் 200 பேர் சாட்சியமளித்துள்ளதுடன், புலம்பெயர் தமிழர்கள் ஐந்து பேர் வரை சாட்சியமளித்துள்ளனர். கொழும்பில் சாட்சியங்களைப் பதிவு செய்யும் பணிகள் நேற்று முன்தினம் 31 ம் திகதியிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளன. என்றாலும், சாட்சியங்கள் தொடர்பில் மேலதிகத் தகவல்கள் தேவைப்படின் இரண்டாம் கட்டமாக, பொது மக்கள் சிலரிடம் சாட்சியம் பெற்றுக் கொள்ளப்படுமென்று விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.

நல்லிணக்க ஆணைக்குழு அதன் பணிகளை எதிர்வரும் மே மாதம் 15ம் திகதியுடன் முடித்திக் கொள்ள வேண்டும். அதற்கு முன்னதாக அறிக்கையொன்றைத் தயாரித்து ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என்று கூறிய அவர், அவ்வறிக்கையில் பரிந்துரைகள் பல முன்வைக்கப்படுமென்றும் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, அம்பாறையில் வெள்ளத்தின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டி ருந்த பகிரங்க அமர்வு இம்மாத நடுப்பகு தியில் நடைபெறுமென ஆணைக்குழுவின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். பெரும்பாலும் எதிர்வரும் 13ம் திகதி அமர்வு நடைபெறதன்றும் அவர் கூறினார்.

கொழும்பில் இறுதியாக நடைபெற்ற அமர்வில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர மற்றும் அமைச்சர் ஃபீலிக்ஸ் பெரேரா ஆகியோர் சாட்சியமளித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக