11 டிசம்பர், 2010

சிறிகொத்தாவில் நாளை ஐதேக சம்மேளனம் : கயந்த தெரிவிப்பு

ஐக்கிய தேசிய கட்சியின் விசேட சம்மேளனம் நாளை ஞாயிற்றுக்கிழமை கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நடைபெறவுள்ளது. இதன்போது, கட்சியின் புதிய யாப்புக்கு அங்கீகாரம் பெறப்படும் என்று ஐ.தே.கவின் ஊடகப் பேச்சாளர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.

கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறும் இந்த விசேட சம்மேளனத்தில் ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் ஆகியோருடன் ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் தலா 55 பிரதிநிதிகள் வீதமும் கலந்துகொண்டு திருத்தியமைக்கப்பட்டுள்ள புதிய யாப்புக்கு அங்கீகாரமளிப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

"மிகுந்த எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் இந்த விசேட சம்மேளனம் நாளை நடைபெறுகின்றது. கட்சியைப் பிரதிநிதித்துப்படுத்தும் அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் இதில் கலந்துகொள்வார்கள்.

இதன் போது புதிய யாப்புக்கு அங்கீகாரம் பெறப்படும். அந்த வகையில் எதிர்காலத்தில் புதிய யாப்பின் ஊடாக அரசாங்கம் ஒன்றை அமைக்கும் வகையில் நாங்கள் செயற்படுவோம்" என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக