11 டிசம்பர், 2010

எமது நல்லெண்ணத்தை அரசு பலவீனமாக நினைக்கிறது : அரியநேத்திரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வெளிப்படுத்தப்பட்டுள்ள நல்லெண்ணத்தை எமது அரசியல் பலவீனம் என்று நினைத்து செயற்பட அரசாங்கம் முயற்சிக்கக் கூடாது. எமது நல்லெண்ணத்தை அரசு உரிய முறையில் கையாளாவிடின் அது தொடர்பில் ஜனவரியில் மீள்பரிசீலனை செய்யவேண்டிய நிலை ஏற்படும் என்று கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. பா. அரியநேத்திரன் நேற்று சபையில் தெரிவித்தார்.

வடக்கு கிழக்கு மக்கள் இந்த சபையில் ஆளும் தரப்பினரால் இழிவுபடுத்தப்படுகின்றனர்; அவமானப்படுத்தப்படுகின்றனர். இனவாதம் பேசப்படுகின்றது. சமத்துவம் இல்லை; உரிமைகள் இல்லை. அதிகாரப் பகிர்வு இல்லை. அப்படியானால் இங்கு நல்லாட்சி மலருவது எப்படி என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான இறுதிநாள் குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அரியநேத்திரன் எம்.பி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

"பெண்கள் மற்றும் சிறுவர் தின நிகழ்வுகள் நாளை மறுதினம் (நாளை ஞாயிறு) மட்டக்களப்பில் விசேடமாக ஏற்பாடாகியுள்ளன. ஆனாலும் நாடு முழுவதிலுள்ள 17 சிறைச்சாலைகளைச் சேர்ந்த 866 தமிழ் அரசியல் கைதிகள் இன்று விடுதலை வேண்டி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கைதிகளில் பெண்களும் சிறுவர்களும் கூட அடங்குகின்றனர். இவ்வாறான நிலையில் இந்த நிகழ்வுகள் ஏற்பாடாகியிருக்கின்றன. இதனை வைத்துப் பார்க்கையில் இங்கு நல்லாட்சி இடம்பெறுகின்றதா என்ற கேள்வி எழுகின்றது.

இந்த வரவு செலவுத் திட்ட விவாதங்களின் போது ஆளும் கட்சியினர் தேவையான விடயங்களை விடுத்து எதிர்க்கட்சியை விமர்சித்துக் கொண்டிருப்பதையே தமது வேலையாகக் கொண்டிருக்கின்றனர். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் அமைச்சர் மேர்வின் சில்வா தனதுரையில் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் குறித்து தரக்குறைவான வார்த்தைகளைப் பிரயோகித்திருந்தார். எமது மக்கள் குளிப்பது கூட இல்லை என இந்தப் பாராளுமன்றத்தில் இழிவுபடுத்தி உரையாற்றினார்.

கொடியதான வார்த்தைப் பிரயோகங்களால் இங்கு இனவாதமும் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றது. தமிழர்கள் என்ற காரணத்தினால் இவ்வாறான இழி பேச்சுக்களை கேட்க வேண்டியவர்களாகியுள்ளோம்.

எமது நாட்டில் நல்லாட்சியே அவசியம். இதனை அரசும் கூறுகின்றது. ஆனால் இங்கு நடப்பது அப்படியானது அல்ல. குறிப்பாக இந்தப் நாடாளுமன்றத்திற்கு வந்துள்ள மக்கள் பிரதிநிதிகளிடத்திலேயே ஒழுக்கத்தைக் காண முடியாதிருக்கின்றது. நாடாளுமன்றத்திலேயே ஒழுக்கம் இல்லாதுள்ள நிலையில் அதனை நாட்டில் எவ்வாறு எதிர்பார்க்க முடியும்?

நல்லாட்சி மலர வேண்டுமானால் தமிழ் மக்களுக்கான தீர்வுகள் கிடைக்கப் பெற வேண்டும். சமத்துவம் அதிகாரப் பகிர்வு உரிமைகள் வழங்கப்பட வேண்டும். அவ்வாறில்லாத போது நல்லாட்சிக்கு இடமளிக்காது" என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக