5 டிசம்பர், 2010

நாடு முழுவதும் தொடர் மழை: நீர்த்தேக்கங்கள் நிரம்பின விக்டோரியா நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டன

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பெய்துவரும் கடும் மழை காரணமாக நீர்த்தேக்கங்கள் மற்றும் குளங்கள் நிரம்பியுள்ளன. நீர்த்தேக்கங்கள் உடைப்பெடுக்கும் அபாயத்தைத் தவிர்க்கும் நோக்கில் நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

விக்டோரியா நீர்த்தேக்கத்தில் இரண்டு வான் கதவுகள் நேற்று அதிகாலை திறக்கப்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் தொடர்பாடல் அதிகாரி

பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார். 2005ஆம் ஆண்டின் பின்னர் முதற் தடவையாக நேற்று விக்டோரியா நீர்த் தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டன. மேலும் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் ஏனைய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டத்தினை தொடர்ந்து அவதானித்து வருவதாக அவர் தினகரனுக்கு தெரிவித்தார்.

கடந்த சில நாட்களாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் மழை காரணமாக 13 ஆயிரத்து 440 குடும்பங்களைச் சேர்ந்த 57,890 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது.

தொடர்ந்தும் மழை பெய்து வருவதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளப் பெருக்கால் இடம்பெயர்ந்த 6047 பேர் 46 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பலர் உறவினர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம் எதிர்வரும் சில தினங்களுக்கு நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்தது.

மேல் மாகாணத்தில் காணப்பட்ட காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இந்தியாவின் தமிழகத்தை நோக்கி நகர்ந்துள்ளபோதும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

வடக்கு, வடமத்தி, வடமேற்கு, ஊவா மற்றும் மேல் மாகாணங்களில் இன்று அவ்வப்போது மழை பெய்வதுடன் மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யுமென்றும் காலநிலை அவதான நிலையம் தெரிவித்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக