ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரண்டாவது தடவையாக பதவியேற்ற பின்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட முதலாவது வெளிநாட்டு ராஜதந்திரி இந்திய வெளிநாட்டு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா ஆவார். கடந்த மாதம் 25ம் திகதி கொழும்புக்கு வருகை தந்த இந்திய அமைச்சர் 27ம் திகதி கொழும்பை விட்டு புறப்பட்டார்.
அன்றைய தினமே, நான்கு நாள் விஜயமாக கொழும்பை வந்தடைந்தார் பாகிஸ்தான் ஜனாதிபதி ஆஷிப் அலி சர்தாரி. அதாவது எமது ஜனாதிபதியின் இரண்டாவது பதவியேற்புக்கு பின்னர் முதலாவதாக இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு அரச தலைவர் இவரே.
வடக்குக்கான ரயில் பாதை நிர்மாணம், வடக்கில் 50 ஆயிரம் வீடுகள் அமைக்கும் திட்டம், யாழ்ப்பாணத்திலும் அம்பாந்தோட்டையிலும் இந்திய ராஜதந்திர அலுவலகங்கள் திறப்பு, காங்கேசந்துறை துறைமுகம் மற்றும் பலாலி விமான நிலைய அபிவிருத்தி உட்பட பல்வேறு முன்னோடி நடவடிக்கைகள் இந்திய அமைச்சரின் விஜயத்தின் போது மேற்கொள்ளப்பட்டன.
இவை தவிர இரு தரப்பு வர்த்தக உறவுகள் மற்றும் பல்வேறு துறைசார் கூட்டு நடவடிக்கைகள் சார்பாகவும் முன் முயற்சிகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. இரண்டாயிரமாம் ஆண்டில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இரு தரப்பு வர்த்தக முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டன.
அதன் பின்னரான 8 ஆண்டுகளில் இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தக புரள்வு 5 மடங்காக அதிகரித்துள்ளது. இலங்கையின் ஏற்றுமதியில் கடந்த வருடம் முதல் 50 சதவீத அதிகரிப்பு காணப்பட்டுள்ளதை புள்ளி விபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இலங்கையின் நான்கு பாரிய முதலீட்டாளர்களில் இந்தியாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
இந்துக்களை பெரும்பான்மையாக கொண்ட நாடு இந்தியா, இஸ்லாமியர்களை பெரும்பான்மையாகக் கொண்ட நாடு பாகிஸ்தான். பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் இந்திய உப கண்டத்தின் அங்கமாக விளங்கிய பாகிஸ்தான் 1947ல் தனி நாடாக சுதந்திரம் பெற்றது.
அன்றில் இருந்து இன்று வரை பாகிஸ்தானும் இந்தியாவும் கீரியும் பாம்பும் போலவே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இரு நாடுகளுக்கும் இடையில் யுத்தங்கள், மோதல்கள், பரஸ்பர குற்றச்சாட்டுக்கள், கண்டனங்கள், உளவு நடவடிக்கைகள் என்று எல்லாமே தாராளமாக இடம்பெற்றிருக்கின்றன. இப்போதும் இடம்பெறுகின்றன. ஆனாலும் இந்த இரு நாடுகளின் முரண்பாடுகளுக்குள் சிக்கிக் கொள்ளாமல் அவற்றுடன் நல்லுறவுகளை இலங்கை இப்போது பேணி வருகின்றது.
பாகிஸ்தான் ஜனாதிபதியின் அண்மைய விஜயத்தின் போது பாதுகாப்பு, ராஜதந்திரம், கலாசார, பொருளாதார, இருதரப்பு உறவுகளை கட்டி வளர்ப்பதற்கான முன்முயற்சிகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.
இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் 5 ஆண்டுகளுக்கு முன்னர் செயற்படத் தொடங்கியது. இப்போது 350 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருக்கும் இந்த வர்த்தகத்தை 500 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்த்துவதற்கு முயற்சிகள் மேற் கொள்ளப்படுகின்றன.
இலங்கையில் சிறுபான்மை மக்களின் பிரச்சினைத் தீர்வுக்கு அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று இந்தியா என்றுமே வலியுறுத்தி வந்திருக்கின்றது. 13வது அரசியலமைப்பு திருத்தத்தின் அடிப்படையில் அதிகாரப் பகிர்வு பொதியொன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என்று யாழ்ப்பாணத்தில் இந்திய அமைச்சர் கிருஷ்ணா வலியுறுத்தி இருக்கிறார்.
இலங்கையின் வடக்கு, கிழக்குக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பாரம்பரிய தொடர்புகளையும் அவர் சுட்டிக்காட்டி இருக்கின்றார். இது தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் போன்ற கடும்போக்கு சிங்கள தேசிய இயக்கங்களின் வயிற்றில் புளியைக் கரைத்து வார்த்து விட்டிருக்கிறது. தமிழ் நாட்டில் உள்ள 6 1/2 கோடி தமிழ் மக்கள் இலங்கை வாழ் தமிழ் மக்களுடன் இன, மத, மொழி கலாசார தொடர்புகளை கொண்டுள்ளவர்கள்.
1983ம் ஆண்டு ஜே.ஆர். அரசின் அனுசரணையோடு இலங்கையின் தமிழ் மக்களுக்கு எதிரான இன சங்காரம் கட்டவிழ்த்து விடப்பட்ட போது தமிழகமே கொதித்தெழுந்தது. எனவே தமிழக மக்களின் உணர்வுகளை மதிக்க வேண்டிய கடப்பாடு ஒன்று இந்திய மத்திய அரசுக்கும் இருக்கின்றது.
இலங்கையின் இறுதியுத்தம் வெடித்த காலப்பகுதியில் பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகள் இலங்கைக்கு ஆயுத உதவிகளை வழங்கின. இந்தியா ராடர் கருவி போன்ற தாக்குதலுக்கு பயன்படுத்த முடியாத இராணுவத் தளபாடங்களை வழங்கியது.
இந்தியாவைப் பொறுத்தவரை இலங்கை தொடர்பான இரண்டு அம்சங்கள் இருக்கின்றன. இந்தியாவின் கோடிப்புறத்தில் இருப்பது இலங்கை. அங்கு தனித்தமிஸழப் போராட்டம் வெற்றி பெற்றால் அது தமிழ் நாட்டில் உள்ள பிரிவினைச் சக்திகளுக்கு உந்து சக்தியாக அமையும் என்பது இந்தியாவுக்கு தெரியாதது அல்ல.
அப்படியொரு நிலை ஏற்பட்டால் இந்தியாவின் ஐக்கியம், பிரதேச ஒருமைப்பாட்டுக்கு குந்தகத்தை ஏற்படுத்தக் கூடிய சக்திகள் தமிழ்நாட்டில் வலுப்பெறும். எனவே புலிகளின் தனிநாட்டு போராட்டத்தை தடுக்க வேண்டிய கடப்பாடு பாரதத்துக்கு உள்ளது.
அதே வேளை இலங்கை வாழ் தமிழ் மக்கள் மீதான இன ஒடுக்கு முறை மற்றும் பாரபட்ச நடவடிக்கைகளை நீக்க வேண்டிய கடப்பாடும் அதற்கு உண்டு. ஆயுதப் போராட்டத்துக்கு அடிக்காரணிகளாக அமைந்த திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம், வேலை வாய்ப்பில் பாரபட்சம், சிங்களம் மட்டும் சட்டம், தமிழ் பேசும் மக்களின் மொழியுரிமையைப் பாதித்தமை என்பவற்றைக் குறிப்பிடலாம்.
எனவேதான் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு இலங்கை வாழ் தேசிய சிறுபான்மை இனங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று இந்தியா வலியுறுத்துகின்றது. இல்லையேல் மீண்டும் பிரபாகரன்கள் உயிர் பெறக்கூடிய ஆபத்துக்கள் நிறையவே இருக்கின்றன.
இந்தியாதான் தமிஸழ இயக்கங்களுக்கு உதவியதாக ஒரு குற்றச்சாட்டினை சிலர் முன்வைக்கிறார்கள். அதில் உண்மையும் இருக்கின்றது. 1960, 1970, 1980 களில் இரண்டு மேலாதிக்க சக்திகள் உலகில் தமது செல்வாக்கு பிராந்தியங்களை ஏற்படுத்தும் பனிப்போரில் ஈடுபட்டிருந்தன.
அவை அமெரிக்காவும் சோவியத் யூனியனும் ஆகும். இந்திய எல்லையில் அமைந்திருந்த பாகிஸ்தான் அமெரிக்காவின் செல்லப்பிள்ளையாக விளங்கியது. சோவியத் யூனியன் கூட்டுக்குள் இந்தியா இருந்தது. அமெரிக்காவுடன் பாகிஸ்தானுக்கும் சோவியத் யூனியனுடன் இந்தியாவுக்கும் இராணுவ ஒப்பந்தங்கள் கூட இருந்தன.
1977ல் ஆட்சிக்கு வந்த ஜே.ஆர். ஜெயவர்தன இந்திய எதிர்ப்பு மற்றும் அமெரிக்க இஸ்ரேல் சார்பு நிலைப்பாட்டினை எடுத்தார். இலங்கையில் இஸ்ரேலிய நலன் காக்கும் பிரிவு, வொயிஸ் ஒப் அமெரிக்க வானொலி நிலையம் போன்றவை அமைக்கப்பட்டன.
இந்த நிலையில் தமது பிரதேச ஒருமைப்பாட்டையும் ஐக்கியத்தையும் பாதுகாப்பதற்காக ஜே.ஆரின் ஆட்சிக்கு தலையிடி கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் இந்தியாவுக்கு ஏற்பட்டது. அதற்கு அப்போது ஆட்சியில் இருந்த சுதந்திரக் கட்சி அரசுகள் சீனா, ரஷ்யா, அமெரிக்கா உட்பட அனைத்து நாடுகளுடனும் நல்லுறவைப் பேணி வந்தமை குறிப்பிடத்தக்கது.
அனைத்து நாடுகளினதும் வெளிநாட்டு கொள்கைகள் தத்தமது சொந்த நலன்களைக் கவனத்தில் கொண்டே மேற்கொள்ளப்படுகின்றன. அதற்கு இந்தியாவோ பாகிஸ்தானோ அல்லது இலங்கையோ கூட விதிவிலக்கல்ல. அந்த கட்டத்திலும் இலங்கையில் தனித் தமிழ்நாடு உருவாவதை இந்தியா ஆதரிக்கவில்லை. சீக்கியகாலிஸ்தான் பிரிவினைவாதிகளால் கொல்லப்பட்டவர் இந்திரா காந்தி.
புலிப் பிரிவினைவாதிகளின் தற்கொலை குண்டுத் தாக்குதலில் பலியானவர் ராஜிவ் காந்தி. ராஜிவ் 1991 தேர்தலில் வெற்றி பெற்றால் தமக்கு ஆபத்து நேரும் என்பதாலேயே புலிகள் அவரைக் கொன்றனர்.
1994 ல் ஆட்சிக்கு வந்த சந்திரிகா இலங்கை- இந்திய உறவுகளை சீர் செய்ய முயற்சிகளை மேற்கொண்டார். இன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் ஒருபடி முன்னேறி பயங்கரவாத சக்திகளை அழித்து ஒழிப்பதற்கான ஆயுத உதவிகளை பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளிடமிருந்தும் தார்மீக உதவிகளை இந்தியாவிடமிருந்தும் பெற்றுக் கொண்டார்.
தமிழகத்தில் இருக்கும் புலிச்சார்பு, பிரவினைவாத சக்திகள் தமிழக மாநில அரசுக்கும் இந்திய மத்திய அரசுக்கும் எத்தனையோ நெருக்குதல்களைக் கொடுக்க முனைந் துள்ளன. இவற்றையெல்லாம் மிகக் கெட்டித்தனமாகவும் புத்தி சாதுரியத்துடனும் ஜனாதிபதி மஹிந்த கையண்டார். இதுவே தீர்க்கமான வெற்றியை பெற்றுத் தருவதற்கு உதவியுள்ளது.
2006ல் மாவிலாறில் புலிகள் ஆரம்பித்த இறுதி யுத்தம்தான் 2009 மேயில் முள்ளிவாய்க்காலில் புலிகளுக்கு அழிவை ஏற்படுத்தியது. இக்காலப்பகுதியில் புலிகளுக்கு ஆயுதங்கள் ஏற்றி வந்த எட்டு கப்பல்கள் கடலில் வைத்தே மூழ்கடிக்கப்பட்டன. இந்தியா வழங்கிய உளவுத் தகவல்கள்தான் இதற்குக் காரணம்.
“இலங்கை அரசு எந்தெந்த நாடுகளுடன் உறவுகளைக் கொண்டுள்ளது என்பது இலங்கையைப் பொறுத்த விடயம். எந்த நாட்டுடன் நட்புறவைக் கொண்டிருந்தாலும் அது இலங்கை இந்திய உறவில் தாக்கத்தை ஏற்படுத்தாது” என்று கொழும்பில் எஸ்.எம். கிருஷ்ணா கூறினார்.
இதேவேளை “சில நாடுகளைப் போன்று வெறுமனே வந்து போகும் ஒரு நாடல்ல பாகிஸ்தான். இலங்கையின் நன்மை தீமையான சந்தர்ப்பங்களில் என்றுமே ஒரு விசுவாச நண்பனாக பாகிஸ்தான் இருந்து வந்துள்ளது” என்று அந்நாட்டு ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இந்த இருவரின் கூற்றுக்களும் எங்கோ உதைக்கின்றதல்லவா?
ஏட்டிக்குப் போட்டியான நாடுகளை கூட அரவணைத்துச் செல்லும் ஜனாதிபதியின் வழி நடத்தல் பாராட்டுக்குரியதே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக