18 நவம்பர், 2010

தூத்துக்குடி - கொழும்பு கப்பல் சேவை 3 மாதங்களில் ஆரம்பம் : அமைச்சர் வாசன்


தூத்துக்குடி முதல் கொழும்பு வரையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து இன்னும் மூன்று மாதங்களில் ஆரம்பமாகும் என மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் வாசன் தெரிவித்தார்.

ஊட்டியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"கப்பல்துறை மேலும் வளர்ச்சி பெறுவதற்கான பல்வேறு திட்டங்கள் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தேசிய அளவில் உள்ள மொத்தம் 7,517 கி.மீ. நீளமுள்ள கடற்பரப்பில் 13 பெரிய துறைமுகங்களும், 200 சிறிய துறைமுகங்களும் உள்ளன.

தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து, கொழும்பு துறைமுகத்துக்குப் பயணிகள் போக்குவரத்து குறித்து 2002ஆம் ஆண்டு முதல் பேசப்பட்டு வருகிறது. இன்னும் மூன்று மாதங்களுக்குள் இது தொடங்கப்படும். இதற்கான இறுதி கட்ட பேச்சு, இரு நாட்டு அதிகாரிகள் மத்தியில் நடந்து வருகிறது.

சேது சமுத்திர திட்டம் குறித்த வழக்கு சுப்ரீம் நீதிமன்றில் நடந்து வருகிறது. தமிழக மக்களின் கனவு திட்டமான, இத்திட்டத்துக்கு சாதகமான முடிவு நீதிமன்றத்தில் இருந்து கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.

அவ்வாறு கிடைக்கும் பட்சத்தில் இத்திட்டத்தை விரைவாகச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதனால், தமிழகத்துக்கான பல்வேறு முன்னேற்றங்கள் கிடைக்கும்" என்றார்.ச்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக