13 நவம்பர், 2010

சிங்கள மக்கள் நாவற்குழி அரச காணியில் பலாத்காரமாகவே குடியேறியுள்ளனர் : இமெல்டா சுகுமார்

சிங்கள மக்கள் நாவற்குழி அரச காணியில் பலாத்காரமாகவே குடியேறியுள்ளனர். அவர்களை அரசாங்கம் அங்கு குடியமர்த்தவில்லை என தெரிவித்த யாழ். அரச அதிபர் இமெல்டா சுகுமார், மேற்படி குடியமர்வு தொடர்பான பூர்வாங்க அறிக்கையொன்று மீள் குடியேற்ற அமைச்சருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார்.

நேற்று வெள்ளிக்கிழமை சித்தங்கேணி மகளீர் அபிவிருத்தி நிலையத்தில் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான தேசிய ஆணைக்குழுவின் இரண்டாம் நாள் அமர்வு இடம் பெற்றது. இதன் போது தெளிவுபடுத்துகையிலேயே யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார் மேற்கண்டவாறு கூறினார்.

இவர் இங்கு தொடர்ந்தும் தெளிவுபடுத்துகையில்:–

நாவற்குழி அரச காணியில் குடியேறியுள்ள சிங்கள மக்கள் 1980 மற்றும் 83களில் வியாபார நோக்கங்களுக்காக யாழ்ப்பாணத்திற்கு வந்தள்ளனர். அதன் பின்னர் யாழில் காணப்பட்ட குழப்பகரமான சூழ்நிலையால் ஏற்பட்ட அச்சுறுத்தலினால் இவர்களை இராணுவத்தினர் அநுராதபுரத்தில் குடியேறியுள்ளனர். இங்கிருந்தும் பொருளாதார சூழ்நிலைகளினால் மேற்படி மக்கள் மிஹிந்தளை, தம்புள்ளை மற்றும் ஏனைய பிரதேசங்களுக்கு சொந்த விருப்பத்தின் பேரில் இடம்பெயர்ந்து சென்றதாகவும் அவர்கள் என்னிடம் கூறினார்கள்.

யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் அவர்கள் யாழ்ப்பாணத்திற்கு வந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து தமது விண்ணப்பங்களை கொடுத்துள்ளனர். இதன் பின்னர் அமைச்சர் என்னுடன் தொடர்பு கொண்டு பேசினார். இந்த மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக நான் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தற்காலிக ஏற்பாடுகளை செய்து கொடுத்தேன்.

பிறப்புச் சான்றிதழ்களையும் தபால் அடையாள அட்டைகளையும் ஆதாரமாக அவர்கள் காட்டினார்கள். ஒரு பெரியவர் தான் யாழ். பிராமணர் இனத்து பெண்ணையே மணந்துள்ளதாகவும் கூறினார். எவ்வாறாயினும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகையில் திடீரென யாழ். புகையிரத நிலையத்தில் தங்கியிருந்த சிங்கள மக்கள் அனைவரும் நாவற்குழியில் காணப்படும் அரசாங்கத்திற்கு சொந்தமான காணியில் குடியேறிவிட்டனர்.

இது அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட மீள்குடியேற்றம் அல்ல மேற்படி குடியேற்றம் தொடர்பாக அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கும், மீள்குடியேற்ற அமைச்சருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது எனக் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக