12 நவம்பர், 2010

மைனா படத்துக்கு ரஜினி பெரும் புகழாரம்- நடிக்காமல் போனதற்காக ஏக்கம்





மைனா திரைப்படம் 'திராவிடர்களின் உண்மையான படம்' என்று பாராட்டுத் தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த். 'இந்த மாதிரிப் படத்தில் ஒரு சின்ன காட்சியிலாவது நடிக்காமல் போய்விட்டேனே' என்றும் அவர் கூறியுள்ளார்.

மைனா படத்தின் ஆடியோ விழாவிலேயே அதை நடிகர் கமல்ஹாசனும், இயக்குநர் பாலா உள்ளிட்டோரும் பெரும் வெற்றி பெறும் என்று பாராட்டி விட்டனர். இப்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் பாராட்டியுள்ளார்.

எந்த நல்ல விஷயத்தையும் முதலில், தாமாகவே முன்வந்து பாராட்டுவதில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு நிகரான ஒருவரை தேடினாலும் பார்க்க முடியாது.

சில நாட்கள் முன்பு 'மைனா' படத்தை பார்த்த ரஜினி, படம் முடிந்து வெளியே வந்தவுடன் மைனாவின் இயக்குநர் பிரபு சாலமனை அழைத்து ஆதரவாக அணைத்து கன்னத்தில் முத்தமிட, ஆனந்த அதிர்ச்சியில் உறைந்துபோனார் பிரபு சாலமன்.

படத்தின் குழுவினர் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்த ரஜினி, 'இந்த காவிய படத்துல நான் ஒரு சிறிய பாத்திரத்திலாவது நடிக்காமப் போய்ட்டேனே' என்றும் கூறினார்.

பேச்சோடு விட்டு விடாமல் தன் வாழ்த்துகளை 'மைனா' படக்குழுவினருக்கு எழுத்து மூலமாகவும் தெரிவித்திருக்கிறார் ரஜினி. நல்ல படம் என்று பாராட்டுக்களைப் பெற்றாலும், வசூலில் மிகவும் சிரமப்படும் மைனாவுக்கு நிச்சயம் இந்த பாராட்டு ஒரு உற்சாக டானிக்தான்!

அவர் கைப்பட எழுதிய கடிதம்:

ஒவ்வொரு மனிதருக்குள்ளும் பயங்கரமான, குரூரமான மி்ருகங்கள் ஒளிஞ்சி கிடக்கிறது. அதை சம்பிரதாயத்துக்கும் சமுதாயத்துக்கும் பயந்து அறிவுங்கற போர்வையில மூடி வச்சிருக்கோம். சில சமயங்கள்ல அறிவு மங்கிப் போய், சமுதாய, சம்பிரதாய போர்வையை கிழிச்சுக்கிட்டு அது வெளியே வந்திடும்.

அந்த மாதிரி மனிதர்கள் மத்தியில் நான் பொறந்து வளர்ந்தேங்கிறதால அதை நான் கண்டு உணர்ந்திருக்கேன். இப்போ அந்தப் பாத்திரங்களின் நடிப்பை படத்தில பார்த்து நான் பிரமிச்சுப் போயிட்டேன். அந்தப் படத்துல நடித்த ஒவ்வொரு நடிகர்களின் நடிப்பும் என்னை மெய்சிலிர்க்க வைத்துவிட்டது.

மைனா மாதிரி படம், உண்மையான திராவிடர்களின் படம். எப்போதோ பூக்கும் குறிஞ்சிப் பூ இது.

இந்தப் படத்தை பிரமிக்க வைக்கும் வகையில் இயக்கும் பிரபு சாலமன் அவர்கள், காட்சிகளை கண்கொள்ளா காட்சிகளாக சித்தரித்து ஒளிப்பதிவு செய்த சுகுமார் அவர்கள், இசையமைத்த டி இமான் அவர்கள், அற்புதமாக நடித்த தம்பி ராமையா உள்ளிட்ட அத்தனை நடிகர் நடிகையருக்கும், இந்தப் படத்தை தமிழ் மக்களுக்கு விருந்தாகத் தந்த படக்குழுவினருக்கும், படத்தைத் தயாரித்த ஷாலோம் ஸ்டுடியோஸ், கல்பாத்தி எஸ் அகோரம் மற்றும் அன்புத் தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் என் அன்பார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனக்கு ஒரு சின்ன வருத்தம்: இந்த காவிய படத்துல ரஜினிகாந்த் ஒரு சின்ன பாத்திரத்திலாவது நடிச்சிருக்கலாமேன்னு...!

ஜெய்ஹிந்த்... வாழ்க தமிழ் மக்கள், வளர்க தமிழ்நாடு!

- இவ்வாறு அவர் தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

வாழ்நாளில் மறக்கமுடியாத விருது!- பிரபு சாலமன்

ரஜினியின் பாராட்டு குறித்து இயக்குநர் பிரபு சாலமன் கூறுகையில், 'என் வாழ்நாளில் நான் மறக்கமுடியாத விருது, ரஜினி சார் எனக்குத் தந்த முத்தமும், பாராட்டுக் கடிதமும்' என்றார், கண்கள் கலங்க.

மைனாவின் முக்கியப் பாத்திரத்தில் நடித்த இயக்குநர் தம்பி ராமையா கூறுகையில், "யாருக்கு சார் இந்த மனசு வரும்... ரஜினி சாரின் இந்தப் பாராட்டு நடிகராக எனக்கு கிடைச்ச மிகப் பெரிய அங்கீகாரம்... இதுபோதும்" என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக