12 நவம்பர், 2010

சவேந்திரவை சாட்சியமளிப்பதற்கு வருமாறு நோட்டீஸ் அனுப்பவும்: பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கோரிக்கை

58 ஆவது படையணியின் கட்டளை அதிகாரியாக பணியாற்றிய மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை வெள்ளைக்கொடி விவகார வழக்கில் அடுத்ததாக சாட்சியமளிப்பதற்கு வருகைதருமாறு நோட்டீஸ் அனுப்புவதற்கு பணிக்கவேண்டும் என பிரதி சொலிசிட்டர் ஜெனரல் வசந்த நவரத்ன பண்டார நீதிபதிகளிடம் நேற்று வியாழக்கிழமை கேட்டுக்கொண்டார்.

வெள்ளைக்கொடி விவகார வழக்கின் முதலாவது சாட்சியான சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியரான பிரட்ரிகா ஜான்ஸ் 12 நாட்களாக குறுக்கு விசாரணைக்கு சாட்சியமளித்ததுடன் நேற்றைய மீள் விசாரணையிலும் சாட்சியமளித்தார்.

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ட்ரயல் அட்பார் முறையில் நடைபெற்று வருகின்ற வெள்ளைக்கொடி விவகார வழக்கின் மீள் விசாரணையின் நிறைவிலேயே பிரதி சொலிசிட்டர் ஜெனரல் வசந்த நவரத்ன பண்டார மேற்கண்ட கோரிக்கையை முன்வைத்தார்.

வடக்கில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வெள்ளைக்கொடியுடன் சரணடைவதற்கு வருகைதந்த விடுதலைப்புலிகள் அமைப்பைச்சேர்ந்த முக்கியஸ்தர்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் உத்தரவின் பேரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா கூறியதாக சண்டே லீடர் பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையே கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகின்றது.

மேல் நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜயசுந்தர தலைமையிலான எச்.என்.பி.பி வராவௌ, சர்பிக் ரஷீன் ஆகிய நீதிபதிகள் குழு முன்னிலையில் நடைபெறும் இந்த வழக்கின் முதலாவது சாட்சியின் மீள் விசாரணை நிறைவடைந்ததன் பின்னர் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மேற்படி வழக்கின் இரண்டாவது சாட்சியை அடுத்தப்படியாக அழைக்காமல் சவேந்திர சில்வாவை இரண்டாவதாக அழைப்பதற்கு நோட்டீஸ் அனுப்பவேண்டும் எனக்கேட்டுக்கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக