12 நவம்பர், 2010

இலங்கை குடியேற்றவாசிகளின் மேன்முறையீட்டுக்கு ஆதரவாக ஆஸி, நீதிமன்றம் தீர்ப்பு

அவுஸ்திரேலிய நீதிமன்றங்களில் மேன்முறையீடு செய்வதற்கு தடை விதிக்கும் சட்டங்கள் நீதியற்றவை எனத் தெரிவித்து இரு இலங்கையர்கள் செய்த முறைப்பாட்டுக்கு ஆதரவாக அவுஸ்திரேலியா அதி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அவுஸ்திரேலியா அரசாங்கமானது வெளிநாடுகளிலிருந்து சட்ட விரோதமாக அந்நாட்டுக்குள் பிரவேசிக்கும் குடியேற்றவாசிகளை தடுக்கும் வகையில் எல்லைப் பகுதியிலான பாதுகாப்பைப் பலப்படுத்தும் முகமாக மேற்படி சட்டங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்திருந்தது.

இந்நிலையில் இரு இலங்கையர்களால் செய்யப்பட்ட மேற்படி முறைப்பாட்டுக்கு ஆதரவாக அவுஸ்திரேலிய உயர் மட்ட சட்ட குழுவொன்று இலவசமாக தமது சேவையை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அவுஸ்திரேலியாவுக்குள் சட்ட விரோதமாக குடிவருபவர்களின் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்படும் போது அவர்களை தடுப்பு நிலையங்களில் வைக்கவும் அவர்களை இது தொடர்பில் நீதிமன்றங்களில் மேன் முறையீடு செய்வதை தடை செய்யவும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் சட்டங்கள் வழிவகை செய்கின்றன.

படகுகளில் வரும் சட்ட விரோத குடியேற்ற வாசிகள் தடுப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களது அகதி அந்தஸ்து குறித்து அவுஸ்திரேலிய குடிவரவு திணைக்கள அதிகாரிகள் மதிப்பீடு செய்வர். இந்நிலையில் அகதி அந்தஸ்து நிராகரிக்கப்படும் குடியேற்ற வாசிகளுக்கு அவுஸ்திரேலிய நீதிமன்றங்களில் இது தொடர்பில் மேன்முறையீடு செய்வதற்கு இன்று வரை உரிமை வழங்கப்படவில்லை.

அதே சமயம் விமானம் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு வரும் சட்ட விரோத குடியேற்ற வாசிகள் தன்னிச்சையாக தடுத்து வைக்கப்படுவதில்லை. இத்தகையவர்கள் தங்களுக்கான புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்படும் பட்சத்தில் நீதிமன்றத்தில் மேன் முறையீடு செய்யும் உரிமையைக் கொண்டுள்ளார்கள்.

இந்நிலையில் இந்த பாரபட்சமான நடைமுறையானது நீதியற்றது என அவுஸ்திரேலிய உயர் நீதிமன்றத்தை சேர்ந்த 7 நீதிபதிகள் ஏகமனதாக தீர்ப்பளித்துள்ளனர். கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் அவுஸ்திரேலியாவுக்கு வந்த எம்61 மற்றும் எம்69 என சுருக்கமாக அழைக்கப்படும் இரு இலங்கைத் தமிழர்களுக்குமான மேன்முறையீடு செய்வதற்கான உரிமை நிராகரிக்கப்பட்டது செயல்முறையாக நீதியற்றது என் அவர்கள் தெரிவித்தனர்.

தற்போது அமுலிலுள்ள சட்டங்களும் கொள்கைகளும் மாற்றமொன்றுக்கு உட்பட வேண்டியுள்ளதுடன் கவனமாக பரீசிலிக்கப்படவும் வேண்டியுள்ளது என அவர்கள் குறிப்பிட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக