இதன்படி தொண்டு நிறுவனங்களுக்கு 1961-ம் ஆண்டு வியன்னா ஒப்பந்தத்தின்படியான ராஜதந்திர சட்டப் பாதுகாப்பு மறுக்கப்படும்.
தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் என்ற பெயரில் சில நிறுவனங்கள் இலங்கையில் தீவிரவாதத்தை வளர்க்கும் செயல்களில் மறைமுகமாக ஈடுபட்டிருப்பதாகவும் அதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை என்றும் இலங்கை அரசு அறிவித்துள்ளது.
தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், அரசு பிரதிநிதிகள் உள்ளிட்டவர்களுக்கு வெளிநாடுகளில் சிவில் வழக்குகளில் இருந்து சட்டப் பாதுகாப்பு அளிக்கப்படுவது வழக்கம். ஏதேனும் சிவில் வழக்குகளில் அவர்கள் சிக்கினாலும் அவர்களை வெளியேற்றலாமே தவிர உள்நாட்டுச் சட்டங்களின்படி அவர்களை தண்டிக்க முடியாது.
அந்த வகையில் இலங்கையில் செயல்பட்டுவரும் பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் தீவிரவாத நடவடிக்கைகள் தலைதூக்க மறைமுக ஆதரவு அளித்து வருவதாக இலங்கை அரசு சந்தேகிக்கிறது.
இதை அடுத்து இலங்கை அரசின் அதிகாரப் பூர்வ இணையதளத்தில் புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ள தகவலில், "வெளிநாட்டு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுவரும் ராஜதந்திர சட்டப் பாதுகாப்பு இனி வழங்கப்பட மாட்டாது.
அந்த நிறுவனங்களை பதிவு செய்ய புதிய நடைமுறை ஒன்றும் வகுக்கப்படும். அதன்படி அந்த தொண்டு நிறுவனங்கள் அனைத்தும் முறைப்படி பதிவுசெய்யப்பட்ட வேண்டும்.
அதன் பின்னர் ராணுவ அமைச்சகத்திடம் அனுமதிச் சான்றிதழ் பெற்ற பின்னரே இலங்கையில் அந்த நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கப்படும்.
இப்போது இலங்கையில் சுமார் 1250 தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் சுமார் 250 நிறுவனங்கள் சர்வதேச நிறுவனங்களாகும். உள்நாட்டு, வெளிநாட்டு தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இரண்டையுமே முறைப்படுத்த விரைவில் புதிய சட்டம் கொண்டு வரப்படும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்ற ஆண்டு விடுதலைப்புலிகளுடன் நடந்த சண்டையில் இலங்கை ராணுவம் வெற்றி பெற்றது. சண்டை நடந்தபோது சில தொண்டு நிறுவனங்கள் புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டன என அதிகாரிகள் தெரிவித்தனர்.
விசா கெடுபிடி: மேற்கத்திய நாடுகள், தெற்காசிய நாடுகள் உள்ளிட்ட உலகின் 85 நாடுகளில் வசிக்கும் இலங்கைத் தமிழர்கள் இலங்கைக்கு வருவதற்கான விசாக்கள் வழங்குவதை நிறுத்தி வைக்கவும் இலங்கை அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
உலகின் பல்வேறு நாடுகளில் வசிக்கும் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் மீண்டும் இலங்கைக்கு வந்து அணி திரண்டு விடக் கூடும் என்ற அச்சத்தால் இலங்கை அரசு இந்த முடிவை மேற்கொள்ள இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக