1 நவம்பர், 2010

நேபாள ஜனாதிபதி யாதவ்வுடன் ஜனாதிபதி மஹிந்த சந்தித்து பேச்சு




நேபாள அரசியல் நெருக்கடி தொடர்பாக இரு தலைவர்களும் ஆராய்வு

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சீனா சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் (30) நேபாள ஜனாதிபதி ராம் பரன் யாதவை சீனாவின் சங்ஹாய் நகரில் சந்தித்து பேசினார்.

நேபாளத்தில் தற்போது இடம்பெற்று வரும் அரசியல் நெருக்கடி தொடர்பாக இரு நாட்டு தலைவர்களும் நீண்ட நேரம் பேச்சு நடத்தினர்.

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பல சமயங்களில் நேபாளத்துக்கு சென்று அந்த நாட்டின் அரசியல் நெருக்கடிக்கு தீர்வுகாண உதவியதாகவும், நேபாளத்தின் அரசியல் நெருக்கடி தொடர்பாக ஜனாதிபதிக்கு நன்கு தெரிந்திருப்பதாகவும் கூறிய நேபாள ஜனாதிபதி, அரசியல் நெருக்கடிக்கு தீர்வுகாண்பதற்கு இலங்கை ஜனாதிபதியின் ஆதரவினை எதிர்பார்ப்பதாகவும் நேபாள ஜனாதிபதி குறிப்பிட்டார். அத்துடன், லும்பினியை அபிவிருத்தி செய்வது தொடர்பாக இலங்கை வழங்கும் ஒத்துழைப்புக்கு நேபாள ஜனாதிபதி பாராட்டு தெரிவித்தார்.

இதற்கு முன் தான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது லும்பினியின் அபிவிருத்திக்கு இலங்கை பங்களிக்க வேண்டுமென பாராளுமன்றத்தில் கூறி வந்த போதிலும் நான் ஜனாதிபதி பதவிக்கு வந்த பின்னரே அதனை நிறைவேற்ற முடிந்ததாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நினைவூட்டினார்.

இலங்கைக்கும் நேபாளத்துக்கும் இடையில் கல்வி பரிமாற்ற திட்டங்கள் தொடர்பாக இரு நாட்டு தலைவர்களும் விரிவாக ஆராய்ந்தனர். நேபாள மாணவர்களுக்கு இலங்கையில் கல்வி வாய்ப்புகளை வழங்க முடியுமென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.

அதற்கேற்ப எதிர்காலத்தில் நேபாளத்துக்கும் இலங்கைக்கும் இடையே தொழில்நுட்ப விடயங்கள் தொடர்பாக கல்வி பரிமாற்ற திட்டங்கள் இடம்பெறும் சாத்தியம் ஏற்பட்டுள்ளது.

2011 ஆம் ஆண்டு இலங்கைக்கும் நேபாளத்துக்கும் இடையில் சுற்றுலாக் கைத்தொழிலை மேம்படுத்துவது தொடர்பாக இருநாட்டு தலைவர்களும் பேச்சு நடத்தினர்.

இரு நாடுகளுக்கிடையிலும் சுற்றுலாக் கைத்தொழிலை ஊக்குவிப்பதற்காக ஒத்துழைப்பு மற்றும் புரிந்துணர்வு நடவடிக்கைகளில் ஈடுபடுவதென இரு தரப்பினருக்குமிடையில் இணக்கம் காணப்பட்டது.

இலங்கை அமைச்சர்கள் ஜீ. எல். பீரிஸ், விமல் வீரவன்ச, ஜனாதிபதியின் வெளிநாட்டலுவல்களின் தொடர்பால் செயலாளரான பாராளுமன்ற உறுப்பினர் வாஸ் குணவர்தன, ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க, சீனாவுக்கான இலங்கை தூதுவர் கருணாதிலக அமுனுகம, சங்ஹாயில் உள்ள இலங்கை கொன்சியூலர் மஹிந்த ஜயசிங்க ஆகியோர் இந்த சந்திப்பின் போது உடனிருந்தனர்.

அன்றைய தினம் மாலை ரிகீஜிலி 2010 சர்வதேச கண்காட்சியின் இறுதி நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விசேட அதிதியாக கலந்துகொண்டதுடன் சீன பிரதமரையும் சந்தித்து பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக