1 நவம்பர், 2010

யானை தந்தங்களை விற்க முயன்ற நால்வர் கைது

குருணாகல் மாவட்டத்தின் அம்பன்பொல பிரதேசத்திலிருந்து எடுத்துவரப்பட்டு பத்து இலட்சத்திற்கு விற்க முயன்றதாகச் சொல்லப்படும் இரண்டு யானைத் தந்தங்களுடன் நான்கு சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளதாக கொபேஹேன பொலிஸார் தெரிவித்தனர்.

கொபேஹேன பொலிஸாருக்குக் கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து இன்று காலை வித்திகுளி சந்தியில் வைத்து இந்த யானைத் தந்தங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றை எடுத்து வந்த முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நான்கு கையடக்கத் தொலைபேசிகளும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கொபேஹேன பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் சிலர் குறித்த யானைத் தந்தங்களைக் கொள்வனவு செய்பவர்கள் போல வேடமிட்டு குறித்த இடத்திற்குச் சென்றுள்ளதுடன், சந்தேக நபர்கள் முச்சக்கர வண்டியில் யானைத்தந்தங்களை அவ்விடத்திற்கு எடுத்து வந்துள்ளனர். சுமார் மூன்றரை அடி நீளமும் ஒன்பது அங்குல அகலமும் கொண்ட இந்த தந்தங்கள் இரண்டும் ஏழு கிலோ எடை கொண்டவையாகும் எனத் தெரிவித்த பொலிசார், கடந்த குறுகிய காலத்தினுள் கொபேஹேன பொலிஸாரினால் இவ்வாறு யானைத்தந்தங்கள் கைப்பற்றப்பட்டமை இது மூன்றாவது தடவையாகும் எனவும் தெரிவித்தனர்.

வடமேல் மாகாண உதவி பொலிஸ் மா அதிபர் ஜகத் அபேசிரி குணவர்தன, நிக்கவெரட்டிய பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விதான பத்திரன, உதவி பொலிஸ் அத்தியட்சகர் பண்டுவ வீரசிங்க கொபேஹேன பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் அத்துல அபேரத்ன ஆகியோரின் ஆலோசனைக்கமைய கொபேஹேன பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரிகள் இந்நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் குறித்த சந்தேக நபர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக