1 நவம்பர், 2010

தமிழ்க் கட்சிகளின் அரங்கம் தீர்வை முன்வைக்க திட்டம் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் பேசவும் முடிவு


இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பான திட்டவரைவொன்றைத் தமிழ் கட்சிகளின் அரங்கம் எதிர்வரும் டிசம்பர் மாதம் முன்வைக்கவிருப்பதாக அரங்கத்தில் அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர், என். கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

தமிழ்க் கட்சிகளின் அரங்கம் நாளை மறுதினம் 3ஆம் திகதி கொழும்பிலுள்ள ஈ.பி.டி.பி. அலுவலகத்தில் கூடவுள்ளது.

இது தொடர்பாகத் தினகரனுக்குக் கருத்துத் தெரிவித்த சிவாஜிலிங்கம்;

இனப் பிரச்சினைத் தீர்வு தொடர்பான திட்டவரைவொன்றை டிசம்பருக்கு முன்னர் தயாரிக்கவுள்ளோம். புத்திஜீவிகள் குழு ஏற்கனவே சில தீர்வுத் திட்டங்களை அரங்கத்திடம் முன்வைத்துள்ளது. இவைபற்றி நாம் ஆராய்வோம். தீர்வுத் திட்டமொன்றை தயாரித்து ஜனாதிபதியிடம் கையளிக்க வுள்ளோம்.

தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் கலந்துகொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கடந்த ஜுலை மாதம் 28ஆம் திகதி சம்பந்தனுக்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தோம். ஆனால், அவர் வெளிநாட்டில் இருந்தமையால் எமக்குப் பதில் எதுவும் வழங்கப்படவில்லை. தற்பொழுது அவர் நாடு திரும்பியுள்ளார். அவருக்கு அனுப்பின கடிதத்தின் பிரதியை செவ்வாய்க்கிழமை மீண்டும் அனுப்ப வுள்ளோம்.

தமிழ்க் கட்சிகளின் அரங்கம் பிரதிநிதிகள் சந்திப்பதற்கான இடம், நேரம், திகதி என்பவற்றை அவர்களிடமிருந்து கேட்கவுள்ளோம்.

தமிழ்க் கட்சிகளுடன் இணைந்து செயற்படத் தயார் என சம்பந்தன் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

13 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சியென்பதால் அவர்களுடன் இணைந்து செயற்படுவதற்கே நாமும் விரும்புகிறோம். இதுவிடயத்தில் அவர்களின் நிலைப்பாட்டை அறிந்துகொள்ள வேண்டியுள்ளது.

அத்துடன், நாம் ஏற்கனவே கூறியதைப் போன்று தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தில் இரண்டாம் கட்டமாக மலையகக் கட்சிகளை இணைப்பது பற்றியும் நாம் ஆராயவுள்ளோம்.

மலையக மக்கள் முன்னணி அரங்கத்தில் இணைந்துகொள்ள ஏற்கனவே விருப்பம் தெரிவித்துள்ளது. மூன்றாம் கட்டமாக முஸ்லிம் கட்சிகளையும் இணைத்துக் கொள்ளவுள்ளோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக