1 நவம்பர், 2010

ரிஸானாவுக்கு கருணைகாட்டுமாறு சவூதியை பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் கோரும் சாத்தியம்

தனது பராமரிப்பில் இருந்த குழந்தையை கொலைசெய்து விட்டதாக சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரிஸானா நபீக் விடயத்தில் கருணைகாட்டுமாறு பிரித்தானியாவின் முடிக்குரிய இளவரசர் சார்ள்ஸ், சவூதி அரேபியாவிடம் கோரிக்கை விடுக்கும் சாத்தியமிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சவூதி அரேபியாவில் ஆளும் அரச குடும்பத்தினருடன் தொடர்புகளைக்கொண்டிருந்த இளவரசர் சார்ள்ஸ், ரிஸானா நபீக் விவகாரத்தை மிகவும் உன்னிப்பாக அவதானித்துவருகின்றார். இந்நிலையிலேயே இவ்விடயத்தில் அவர் தலையிடக்கூடுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு, மனித உரிமைகள் கண்காணிப்பகம், சர்வதேச மன்னிப்புச் சபை ஆகியன ரிஸானா நபீக்கிற்கு மன்னிப்பு வழங்குமாறு கோரி ஏற்கனவே கோரியுள்ளன. அத்துடன் ரிஸானாவுக்கு கருணை காட்டுமாறு கோரி இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் சவூதி மன்னருக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

இந்நிலையிலேயே இவ்விவகாரத்தில் பிரித்தானியாவின் முடிக்குரிய இளவரசரும் தலையிட்டு, கருணை வழங்குமாறு கோரலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறிருந்தபோதிலும், இச்செய்தி தொடர்பில் விளக்கமளித்துள்ள பக்கிங்ஹாம் மாளிகை பேச்சாளர் ஒருவர், இவ்வாறான தகவலை என்னால் உறுதிப்படுத்தவோ அல்லது மறுத்துரைக்கவோ முடியாது. ஏனெனில் அரச குடும்பத்தின் விவகாரங்கள் குறித்து கருத்துத் தெரிவிக்க முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவளை, கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலய உயரதிகாரி ஒருவர் கூறுகையில், அரச குடும்பத்தின் விடயங்கள் தொடர்பில் கருத்து வெளியிடுவதற்கான அனுமதி தூதுவராலயத்திற்கு கிடையாது. நாம் பிரித்தானிய அரசாங்கத்தையே இலங்கையில் பிரதிநிதித்துவம் செய்கின்றோம்; அரச குடும்பத்தையல்ல என சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, பக்கிங்ஹாம் மாளிகையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலும் இதுபற்றிய தகவல் எதுவும் நேற்றுவரை வெளியாகியிருக்கவில்லை. இந்நிலையில், ரிஸானா விவகாரம் தொடர்பான சவூதியின் நிலைப்பாடு இவ்வாரம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக