புளொட் அமைப்பின் சர்வதேசக் கிளைகளின் மாநாடு நேற்றும், இன்றையதினமும் ஜெர்மனியின் ஸ்ரூட்காட் நகரில் நடைபெற்றுள்ளது. இதன்போது கழகத்தின் கடந்தகால, நிகழ்கால மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. இம்மாநாட்டில் புளொட்டின் அனைத்து கிளைகளையும் சேர்ந்த அமைப்பாளர்கள், மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர். நேற்றையதினம் ஆரம்ப நிகழ்வாக மௌன அஞ்சலி, வரவேற்புரை, கிளைப் பொறுப்பாளர்களின் உரை என்பவற்றைத் தொடர்ந்து கழகத்தின் செயற்பாடுகளில் வெளிநாட்டுக் கிளைகளின் பங்களிப்பு, அரசாங்கத்தின் நடவடிக்கைகள், எதிர்காலத்தில் கழகம் எடுக்க வேண்டிய நிலைப்பாடுகள் என்பன தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. நேற்றைய நிகழ்வின்போது விசேட அதிதியாக ஈ.பி.ஆர்.எல்.எவ் (பத்மநாபா) இன் முன்னைநாள் வடக்குக் கிழக்கு மாகாண முதலமைச்சர் திரு.வரதராஜப்பெருமாள் அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார். இரண்டாம் நாளான இன்றைய இந்நிகழ்வின்போது புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன், புளொட் செயலர் திரு.எஸ்.சதானந்தம், புளொட் மத்தியகுழு உறுப்பினர்களான திரு.பவன், திரு.ராகவன் ஆகியோர் தொலைபேசி ஊடாக கலந்துகொண்டு உரையாற்றியிருந்தனர். இன்றைய மாநாட்டின்போது தற்போதைய தள அரசியல் நிலைமைகள், தமிழ்மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் மற்றும் அரசியல் தீர்வு, அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகள் மற்றும் உதவிகள், வெளிநாட்டுக் கிளைகளின் செயற்பாடுகள், நாட்டில் கழகத்தின் செயற்பாடுகள் என்பன தொடர்பில் ஆராயப்பட்டது. இதனைத் தொடர்ந்து நன்றியுரையுடன் மாநாடு இனிதே நிறைவடைந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக