30 அக்டோபர், 2010

கன்னியா வெந்நீர் ஊற்றுப் பகுதியை பௌத்த பிரதேசமாக மாற்றுவதற்கு தீவிர முயற்சி-

தமிழர்களின் வரலாற்று சான்றுடைய திருகோணமலையின் கன்னியா வெந்நீர் ஊற்று பிரதேசத்தினை பௌத்த பிரதேசமாக காட்டும் முனைப்புகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. இதன்படி தனது தாயாரின் ஈமக்கிரியைக்காக இராவணனால் உருவான கன்னியா வெந்நீருற்றுப் பிரதேசத்தில் புதிய பௌத்த விகாரையொன்றை நிர்மாணிக்கவென நிலம் ஒதுக்கப்பட்டு ஆரம்பக்கட்டப் பணிகளும் இடம்பெற்று வருகின்றன. அந்த இடத்தில் சிறிய பௌத்த விகாரையொன்று தற்காலிகமாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இங்கு பிரதேசசபையின் அனுமதி இல்லாமல் எதுவும் கட்டக்கூடாது என அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டிருந்தும் அது கவனத்திற் கொள்ளப்படவில்லை. தற்போது பிரதேச சபையிடமிருந்தே கன்னியா பறிபோய் விட்டது. திருகோணமலை அரசஅதிபர் கன்னியாவுக்கு விஜயம் செய்து அங்கு பணிபுரியும் பிரதேச சபை ஊழியர்களின் சேவைக்கு குந்தகம் ஏற்படுத்தியதுடன், அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த கன்னியா சம்பந்தமான வரலாற்றைக் கூறும் விளம்பர பலகையையும் அகற்றி தனது வாகனத்தில் எடுத்துச் சென்றுள்ளார். இது தொடர்பாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிக்கையில், கன்னியா வெந்நீர் ஊற்றுப் பகுதியானது பிரதேசசபைக்கு சொந்தமானது அல்ல. அது தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தமானது. பிரதேச சபையினர் உண்மைக்கு புறம்பான வரலாறு எழுதிய பதாதைகளை அங்கு காட்சிக்கு வைத்துள்ளனர். இதனால்தான் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார். ஆனால் அதில் எழுதியிருந்த வரலாறு உண்மைக்கு புறம்பானதல்ல. அதில் கன்னியா வெந்நீர் ஊற்று இராவணனால் என்ன காரணத்துக்காக உருவாக்கப்பட்டது என்றே தமிழ், சிங்களம் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் எழுதப்பட்டிருந்தது என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக