12 செப்டம்பர், 2010

கொழும்பு வேளாங்கண்ணி மாதா ஆலயத்தில் இன்று திருவிழா

வருடந்தோறும் செப்டம்பர் மாதம் 8ஆம் திகதியை நம் தாய்த் திருச்சபையானது புனித கன்னிமரியாளின் பிறப்பு விழாவாகப் பிரகடனப்படுத்தியது. இந்தப் பிறப்புத் திருவிழாவே இன்று கொழும்பு செக்கடித் தெரு வேளாங்கண்ணி ஆலயத்தில் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

இறை மகனை ஈன்றெடுத்த புனிதவதியான மரியாளை நாம் பல்வேறு நாமங்களால் அழைத்து வருடந்தோறும் விழாவெடுத்து மகிமைப்படுத்துகின்றோம்.

அந்தவகையில் வேளாங்கண்ணி மாதாவின் திருவிழாவை இத்தினத்தில் கொண்டாடி பேருவகை கொள்கின்றோம்.

உலக மக்களுக்கு சிறப்பாகப் பாவப் பிணியாலும், உடற் பிணியாலும் வாடும் மக்களுக்கு ஆரோக்கியத்தைப் பெற்று தரும் இந்த அன்னையைத் தான், ஆரோக்கிய மாதா என அழைத்து சிறப்பாகத் திருவிழாவெடுக்கின்றோம்.

இம்மாதம் 3ஆம் திகதி வேளாங்கண்ணி அன்னையின் ஆலயத்தில் கொடியேற்றப்பட்டு, 9 நாட்கள் நவநாள் வழிபாடுகளில் ஈடுபட்ட மக்கள், இன்று கோலாகலமாக திருவிழாவைக் கொண்டாடி மகிழ்கின்றனர்.

இன்று காலை 5.30 மணி, 7.30 மணி, மாலை 5.00 மணிக்குத் தமிழிலும், நண்பகல் 12.00 ஆங்கிலத்திலும், மாலை 4.00 மணிக்கு சிங்களத்திலும் திருப்பலிப் பூசைகள் நடைபெறுகின்றன.

மாலை 5.00 மணி திருப்பலியையடுத்து அன்னையின் திருச்சுரூப பவனி ஆரம்பமாகும். பவனியைத் தொடர்ந்து, திவ்விய நற்கருணை, திருச்சுரூப ஆசீர்வாதங்களுடன் திருவிழா இனிதே நிறைவுபெறும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக