26 ஆகஸ்ட், 2010

தஞ்சம் கோரிய தமிழ் அகதிகளை சிறையில் அடைக்க கனடா உத்தரவு






அடைக்கலம் கோரி கனடாவில் தஞ்சமடைந்த 443 இலங்கைத் தமிழர்களை சிறையிலேயே வைத்திருக்குமாறு அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 13-ம் தேதி எம்.வி. சன் சீ எனும் சரக்குக் கப்பலில் சென்ற இலங்கைத் தமிழர்களை கனடா மற்றும் அமெரிக்க கடற்படை கண்டுபிடித்தது. இவர்கள் அனைவரும் இப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 380 பேர் ஆண்கள், 63 பேர் பெண்கள், 49 பேர் குழந்தைகளாவர்.
தங்களுக்கு கனடாவில் தஞ்சம் அளிக்க வேண்டும் என்று இவர்கள் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து கனடாவின் குடியேற்ற மற்றும் அகதிகள் வாரியம் விசாரணை நடத்தி இந்த தீர்ப்பை அளித்துள்ளது.
அகதிகளாக வந்தவர்களில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் இருக்கக் கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் அகதிகள் குறித்த ஆவணங்களை அளிக்க கால அவகாசம் தேவை என குடியேற்ற துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மிகச் சிறிய குழந்தைகள் பெற்றோர்களுடன் சிறையிலும், கொஞ்சம் பெரிய குழந்தைகள் காப்பகங்களிலும் பராமரிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கனடா நாட்டு சட்டப்படி அகதிகளாக தஞ்சம் கோருவோர் முதலில் சிறையில் அடைக்கப்படுவர். பின்னர் குடியேற்ற அதிகாரிகள் விசாரணை நடத்தி, தஞ்சம் கோருவோரைப் பற்றிய தகவலைத் திரட்டுவர். இதன் பிறகே அகதிகளாக தஞ்சம் அளிக்கலாமா என்பது தீர்மானிக்கப்படும்.
சன் சீ சரக்குக் கப்பல் 90 நாள் பயணமாக பல்வேறு நாடுகளுக்குச் சென்றுள்ளது. இறுதியில் கடனா கடல் எல்லையில் பயணிக்கும்போது கடற்படையினர் இடைமறித்து இந்த கப்பலை பரிசோதித்ததில், கப்பலில் பயணிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
கனடாவுக்கு கடந்த ஓராண்டில் வந்துசேரும் இரண்டாவது அகதிகள் கப்பல் இதுவாகும். இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக 37 ஆண்டுகளாக நடைபெற்று வந்த போர் கடந்த ஆண்டு முடிவுக்கு வந்தது. இதைத் தொடர்ந்து அந்நாட்டிலிருந்து பலர் வெளியேறி பல்வேறு நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக